மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. ராமேஸ்வரப்பட்டியிலுள்ள செந்தில் பாலஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியிலுள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீடு மற்றும் அலுவலகங்களில் சுமார் 10 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

செந்தில் கார்த்திகேயன் ரியல் எஸ்டேட் அதிபர். முன்பு அதிமுக கோவை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக இருந்தார் . கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இவரின் மனைவி கிருபாளினி கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்டவர். எடப்பாடி பழனிசாமி, இவரின் வீட்டில் சாப்பிட்டு, இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு பவர்ஃபுல்லாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுக-வில் இணைந்தார். திமுக-விலும் செந்தில் கார்த்திகேயன் பவர்ஃபுல்லாகவே வலம் வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 70 ஜோடிகளுக்கு பிரமாண்ட சீர்வரிசைகளுடன் இலவசமாகத் திருமணம் நடத்தினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நிதியளித்து, திமுக மேடைகளில் பவர்ஃபுல்லாக வலம் வந்தார்.

செந்தில் பாலாஜியின் ஆதரவுடன், செந்தில் கார்த்திகேயனுக்கு விரைவில் கட்சிப் பதவிகள், நாடாளுமன்றத் தேர்தலில் சீட் போன்றவை கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியானது. இதற்கு நடுவேதான் இப்போது ரெய்டில் சிக்கியிருக்கிறார்.