Published:Updated:

`மேதகு’ படத்தில் பிரபாகரனாக நடித்த குட்டிமணி யார்?

`மேதகு’ - குட்டிமணி
`மேதகு’ - குட்டிமணி

தன்னுடைய 17 வயது முதல் `தாயின் கருவறை' என்கிற பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கி, ஆதரவற்றவர்களுக்கு உணவும் உடையும், கல்வி பயில வழியில்லாத ஏழை மாணவர்களுக்குப் பொருளாதார உதவிகளையும் செய்துவருகிறார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, முதன்முறையாக, `மேதகு’ என்கிற பெயரில் முழு நீளத் திரைப்படமாக வெளிவந்துள்ளது. தமீழழத் திரைக்களம் சார்பில், பொறியாளரும், தமிழ் உணர்வாளருமான கிட்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப்புலிகள் உருவான காரணம் வரை, இந்த முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த வெள்ளியன்று வெளியான இந்தத் திரைப்படத்துக்கு தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, இந்தத் திரைப்படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தை ஏற்று, முதல் படத்திலேயே இப்படியொரு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்திய 24 வயது இளைஞர் மணிகண்டன் என்கிற குட்டிமணிக்கு உலகெங்குமிருந்து பாராட்டு குவிந்த வண்ணம் இருக்கிறது.

குட்டிமணி
குட்டிமணி

நடிப்பில் மட்டுமல்லாமல், பிரபாகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க மிகப்பொருத்தமான நபர் குட்டிமணிதான் எனவும், தமிழ் உணர்வாளர்கள் குட்டிமணிக்கு புகழாரம் சூட்டிவருகின்றனர். காரணம், தன்னுடைய 17 வயது முதல் `தாயின் கருவறை' என்கிற பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கி, ஆதரவற்றவர்களுக்கு உணவும் உடையும், கல்வி பயில வழியில்லாத ஏழை மாணவர்களுக்குப் பொருளாதார உதவிகளையும் செய்துவருகிறார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பயோபிக்கா `மேதகு'? உண்மையும், வன்முறையும், சில திருத்தங்களும்!

அதேபோல, தன் சொந்த ஊரான சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு அருகே, `அட்சயபாத்திரம்' என்னும் பெயரில் உணவுகளைப் பத்திரப்படுத்த குளிர்சாதனப் பெட்டியும், `அன்புச் சுவர்' என்கிற பெயரில் உடைகளைப் பத்திரப்படுத்த பீரோ வசதிகளையும் ஏற்படுத்தி சேவை செய்துவருகிறார். உணவு, உடை தேவைப்படுபவர்கள் இங்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

'' என் ஊரான சிவகங்கையில் பசியோடு யாரும் உறங்கப் போகக் கூடாது. அதுதான் எங்கள் விருப்பம். தாய், தந்தையில்லாத, பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த எழைக் குழந்தைகளைப் படிக்கவைத்துக்கொண்டிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில், ஆதரவற்றவர்கள் யாரும் சிகிச்சை எடுத்தால் அவர்களுடன் தங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருந்துவருகிறோம்.

குட்டிமணி
குட்டிமணி

இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் ரத்ததானம் செய்திருக்கிறோம். `காசில்லாமல், கல்வி கற்க முடியாத நிலையும், வறுமையால் பட்டினி கிடக்கும் நிலைமையும் எங்கள் ஊரில் யாருக்கும் வரக் கூடாது.' இதுவே எங்கள் அறக்கட்டளையின் தாரக மந்திரம். ஆரம்பத்தில் நான் மட்டும்தான் இந்த சேவைகளைச் செய்துவந்தேன். பிறகு என் நண்பர்களும் என்னோடு சேர்ந்துகொண்டார்கள். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும், தற்போது பொதுச்சேவைகள் செய்வதற்காக திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதன் மூலம் என் சேவைகளை விரிவுபடுத்த முடியும் என நம்புகிறேன்’’ என்கிறார் மணிகண்டன் என்கிற குட்டிமணி.

அடுத்த கட்டுரைக்கு