Published:Updated:

மோடியை சந்திக்கணுமா..? மேடியை அணுகவும்! யார் இந்த மேடி ஷர்மா? #MadiSharma

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் இந்தியாவுக்குத் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டு, பிரதமர் மோடியைச் சந்தித்தனர்; தற்போது காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பவர் தனியார் என்.ஜி.ஓ-வைச் சேர்ந்த பெண் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேடி ஷர்மா - வலது ஓரத்தில் இருப்பவர்
மேடி ஷர்மா - வலது ஓரத்தில் இருப்பவர்

சமீபத்தில் சீன அதிபர் ஜின்பிங், அரசு முறைப் பயணமாக இந்தியா வந்து மோடியைச் சந்தித்தார். அதைத்தொடர்ந்து, அக்டோபர் 28-ம் தேதி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தனர். அதில், 23 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அக்டோபர் 29–ம் தேதி காஷ்மீருக்குப் பயணித்தனர். 4 உறுப்பினர்கள் காஷ்மீருக்குச் செல்லவில்லை. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்ற பிறகு அங்கு செல்லும் முதல் வெளிநாட்டவர் குழு இவர்கள்தாம். இன்று காஷ்மீரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தெரிந்தாலும், இதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

இச்சந்திப்பு அரசு முறைப்பயணம் இல்லை. இரு நாட்டு அரசின் தலையீடும் இதில் இல்லை. இந்தச் சந்திப்பை சாத்தியப்படுத்தியவர் ஒரு தனி நபர். அவர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளன.

மேடி ஷர்மா அனுப்பிய மின்னஞ்சல்
மேடி ஷர்மா அனுப்பிய மின்னஞ்சல்

மேடி ஷர்மா என்பவர்தான் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பை மேற்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். ஐரோப்பாவின் நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ் டேவிஸுக்கு அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ``இந்திய பிரதமர் மோடியுடன் முக்கிய பிரமுகர்களுக்கான ஒரு சந்திப்பை நான் ஏற்பாடு செய்கின்றேன். அதில் ஐரோப்பாவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நபர்கள் சந்திக்க வேண்டும் என்பது மோடியின் விருப்பம். அக்டோபர் 28–ல், பிரதமருடனான சந்திப்பு நடைபெறும். மறுநாள், ஜம்மு-காஷ்மீருக்குச் செல்லலாம். அன்று பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெறும். இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். நானும் உங்களுடன் இந்தியா வருவேன். உங்கள் வருகையை எனக்கு உடனே தெரிவிக்கவும்" என்கிறது அந்தக் கடிதம். முடிவில் நிகழ்ச்சி நிரலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மின்னஞ்சல்கள் அனைத்துமே ஐரோப்பிய நாடுகளின் தீவிர வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன.

இந்தச் செய்தி வெளியானவுடன் பல வகையான விமர்சனங்கள் வந்தன. அரசுக்குத் தொடர்பில்லாத தனி நபரால், எப்படி பிரதமர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியும் போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

'சமுதாய முதலீட்டாளர், பன்னாட்டு வர்த்தக இடைத்தரகர், எழுச்சியூட்டும் பேச்சாளர், கல்வி சார்ந்த தொழில் முனைவோர்'
மேடி ஷர்மா, தன்னைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது...
மேடி ஷர்மா
மேடி ஷர்மா

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பிய மேடி ஷர்மா, தன் ட்விட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றி, 'சமுதாய முதலீட்டாளர், பன்னாட்டு வர்த்தக இடைத்தரகர், எழுச்சியூட்டும் பேச்சாளர், கல்வி சார்ந்த தொழில் முனைவோர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேடி ஷர்மா, மேடி குழுமம் என்ற குழுமத்தை நடத்தி வருகிறார். இது உலகளாவிய தனியார் நிறுவனங்களுக்கான குழுமம். மேலும், WESTT ( Women's Economic & Social Think Tank) என்ற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கும் அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார் மேடி ஷர்மா.

அவரே தன்னை பன்னாட்டு வர்த்தக இடைத்தரகர் என்று கூறுவதால், அவர்தான் இந்தச் சந்திப்புக்கு இணைப்பாக இருந்துள்ளார் என்பது உறுதியாகிறது.
ஐரோப்பிய எம்.பி-க்களுடன் பிரதமர் மோடி!
ஐரோப்பிய எம்.பி-க்களுடன் பிரதமர் மோடி!

பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் சில காங்கிரஸ் ஆளுமைகள், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீருக்குள் அனுமதிப்பதை எதிர்த்து ட்விட்டரில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியன் சுவாமி தன் ட்விட்டரில் "வெளியுறவுத்துறை அமைச்சகம் அரசு முறை பயணமாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காஷ்மீர் செல்ல ஏற்பாடு செய்துள்ளது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. இது நமது நாட்டுக் கொள்கைக்கு எதிரானது. இந்த ஏற்பாட்டை அரசு ரத்து செய்ய வேண்டும். இது நீதிக்குப் புறம்பான செயல்" என்று பதிவிட்டுள்ளார்.

மேடி ஷர்மா
மேடி ஷர்மா

இந்திய வெளியுறவுத்துறை, "இந்தச் சந்திப்புக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறியுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியப் பிரதமர் சந்திப்பை, ஒரு என்.ஜி.ஓ அமைப்பு நடத்தியிருப்பது விமர்சிக்கப்படுகிறது. இந்த பயணத்துக்கான செலவுகளை டெல்லியைச் சேர்ந்த Institute for Non Aligned Studies (IINS) ஏற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

``2009-ல் தேனியில் என்ன நடந்தது எனத் தெரியுமா... கோபத்தைத் தவிருங்கள் முதல்வரே..!”-  ஸ்டாலின்