Published:Updated:

தமிழ்நாடு வளர்ச்சிக் கொள்கை குழு: `புறக்கணிப்பு முதல் பத்மஸ்ரீ வரை..!’ -யார் இந்த நர்த்தகி நடராஜ்?

நர்த்தகி நடராஜன்
நர்த்தகி நடராஜன்

சிறுவயதிலிருந்தே நர்த்தகி நடராஜ்ஜுக்கு பரதநாட்டியத்தில் ஆர்வம். நடிகை வைஜெயந்தி மாலாவின் நடனம் என்றால் நர்த்தகி நடராஜ்ஜுக்கு உயிர்.

திமுக தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்து பல அறிவிப்புகள் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த அறிவிப்புகளும் பெரும் வரவேற்பு கிடைக்கக்கூடிய தன்மையுடன் இருக்கும் வகையில் கவனமான தீர்மானிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் ஒரு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் நியமனங்கள் பற்றிய அறிவிப்பு.

பேராசிரியர் ஜெயரஞ்சன் தொடங்கி பல முக்கியமான ஆளுமைகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமான நியமனம் நர்த்தகி நடராஜ்ஜின் நியமனம்!

யார் இந்த நர்த்தகி நடராஜ்?

முதல் பார்வையில் பரதநாட்டியக் கலைஞராக தெரியக் கூடிய இவர் ஒரு திருநங்கை. சமூகத்தில் தற்போதைய இடத்தை இவர் அத்தனை சுலபமாக அடைந்துவிடவில்லை. துயரங்களும் போராட்டமும் நம்பிக்கையும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த கதையை வாழ்க்கையாக கொண்டவரே நர்த்தகி நடராஜ்.

ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

மதுரை மாவட்டத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் நர்த்தகி நாடராஜ். அவருடைய ஆரம்ப காலம் அவரை நடராஜ்ஜாகவே உருவாக்கியது. ஆனால் ஆணின் உடலுக்குள் சிறைபட்டிருந்த பெண் தான் என்பதை அவர் புரிந்துகொண்டார். 10 வயதில் தன்னுடைய அவதியை குடும்பத்துக்கு தெரிவித்தார். அச்செய்தி குடும்பத்துக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மகனிடம் இருந்த பெண்ணுக்கான தன்மையை குடும்பம் அவமானமாக கருதியது. அடித்தார்கள். திட்டினார்கள். ஆணை போல் நடந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்கள். ஆண்களுடன் சென்று விளையாட அறிவுறுத்தினார்கள். கோபம், கவலை, மறுப்பு, வெறுப்பு என அந்த பிஞ்சு மனதை பல உணர்வலைகள் அலைக்கழித்தன. இறுதியில் அது நேர்ந்தது. நடராஜ்ஜை வீட்டை விட்டு வெளியேற்றியது. வாழ்க்கையே தொடங்காத காலகட்டத்தில் நட்டாற்றில் தள்ளப்பட்டார்.

உலகின் எல்லா உறவுகளும் கைவிட்டாலும் எந்த எதிர்பார்ப்புமின்றி நிற்கும் ஓர் உறவு இருக்கிறது. அது நடராஜ்ஜுக்கு பக்கதுணையாக வந்து நின்றது. நட்பு! ஷக்தி என்கிற தோழி நர்த்தகி நடராஜ்ஜின் வாழ்க்கைப் பயணத்தை இணைந்து தொடர்ந்தார். இருவரையும் இச்சமூகம் எல்லா இடர்களுக்குள்ளும் தள்ளியது. பல நாட்கள் வெறும் தண்ணீரை குடித்து மட்டுமே உயிர் வாழ வேண்டிய நிலை இருந்தது. இருவரும் உயிர் வாழ்ந்தனர். குடும்பம் கைவிட்டபிறகு சமூகம் என்கிற பெரும் சுழலில் சுற்றியடிக்கப்பட்ட போது நர்த்தகி நடராஜ்ஜுக்கு இன்னொரு முக்கியமான விஷயம் துணைக்கு நின்றது. கலை!

சிறுவயதிலிருந்தே நர்த்தகி நடராஜ்ஜுக்கு பரதநாட்டியத்தில் ஆர்வம். நடிகை வைஜெயந்தி மாலாவின் நடனம் என்றால் நர்த்தகி நடராஜ்ஜுக்கு உயிர். திரை பார்த்து நடனம் பழகியதை வைத்துக் கொண்டு கோவில்கள், விழாக்கள் முதலியவற்றில் நடனமாடினர். அதில் கிடைத்த சிறு பணத்தை கொண்டு வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. பரதநாட்டியத்தின் மீது நர்த்தகி நடராஜ் கொண்டிருந்த ஆர்வத்துக்கு மட்டும் வழியேதும் கிடைக்கவில்லை. ஆனாலும் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்தார் நர்த்தகி நடராஜ். விளைவாக கிட்டப்பா பிள்ளையை பற்றி தெரிந்து கொண்டார்.

தமிழ்நாடு வளர்ச்சிக் கொள்கை குழு: `புறக்கணிப்பு முதல் பத்மஸ்ரீ வரை..!’ -யார் இந்த நர்த்தகி நடராஜ்?

கிட்டப்பா பிள்ளை வைஜெயந்தி மாலாவுக்கு குருவாக இருந்தவர். தஞ்சாவூரை சேர்ந்தவர். நர்த்தகி நடராஜ்ஜும் தோழியும் உடனே தஞ்சாவூருக்கு சென்றனர். அவரை சந்திக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. வெவ்வேறு வழிகளை முயன்று பார்த்தார். எதுவும் பலனளிக்கவில்லை. நர்த்தகி நடராஜ் சோர்ந்து விடவில்லை. ஒரு கட்டத்தில் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. கிட்டப்பாவிடமிருந்து தகவல் வந்தது. பெங்களூருவில் வைஜெயந்தி மாலாவின் நடனத்தை சென்று பார்க்க சொன்னார். நர்த்தகி நடராஜ்ஜுக்கு சந்தோஷம். மாணவராக தன்னை கிட்டப்பா பிள்ளை தேர்ந்தெடுத்துவிட்டதாக நினைத்தார். ஆனால் நடந்ததோ வேறு. நடனக் கல்வியை பற்றி கிட்டப்பா பிள்ளை எதுவும் பேசவில்லை. தென்னிந்தியா முழுக்க நடந்த பல்வேறு நடன நிகழ்ச்சிகள் பற்றிய தகவலை நர்த்தகி நடராஜ்ஜுக்கு அனுப்பினார். நடனத்தை காண மட்டும் அவரை தொடர்ந்து செலுத்திக் கொண்டியிருந்தார். ஏனென புரியவில்லை

எனினும் நர்த்தகி நடராஜ் கேள்வி கேட்கவில்லை. பொருளாதார ரீதியாக தென்னிந்தியா முழுக்க பயணிப்பது சிரமமாக இருந்தபோதும் எப்படியோ பணத்தை தயார் செய்து எல்லா நடன நிகழ்ச்சிகளுக்கும் சென்றார். பல நடன நிகழ்ச்சிகள். பலரின் நடனங்கள். தொடர்ந்து அவர் சென்று கொண்டிருந்தார். இறுதியில் ஒருநாள் கிட்டப்பா பிள்ளை அவரை அழைத்து நடன வகுப்பை தொடங்குவதாக கூறினார். நர்த்தகி நடராஜ்ஜின் கனவு நனவாகியது. ஆனாலும் பிரச்சினை தொடர்ந்தது.

பாரம்பரிய மேட்டுக்குடி நடனமாக இருந்த பரதநாட்டியத்தை ஒரு திருநங்கை ஆடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. முட்டுக்கட்டைகள், தடைகள், அவமானங்கள் நிகழ்த்தப்பட்டன. எதற்கும் கலங்கவில்லை நர்த்தகி நடராஜ். ஒரு வருடத்தில் பயிற்சி முடிந்தது. 1983ம் ஆண்டில் மேயரின் முன்னிலையில் நர்த்தகி நடராஜ்ஜின் அரங்கேற்றம் நடந்தது.

கலை சார்ந்து நர்த்தகி நடராஜ் பல உயரங்களை எட்டினார். புறக்கணிக்கப்பட்ட இடங்களே அவருக்கு மரியாதை செலுத்தும் சூழல் விரைவிலேயே உருவானது. வெளிநாடுகளில் அவரின் நடனத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சங்க இலக்கிய பாடல்களை அடிப்படையாக கொண்டு அவர் உருவாக்கிய நடனங்கள் பரதநாட்டியத்தின் முகத்தை மாற்றியது. 2007ம் ஆண்டில் கலைமாமணி விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டார். சங்கீத நாடக அகாடமி விருது 2011-ம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. 2019ம் ஆண்டில் இந்தியாவிலேயே உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது நர்த்தகி நடராஜ்ஜுக்கு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வளர்ச்சிக் கொள்கை குழு: `புறக்கணிப்பு முதல் பத்மஸ்ரீ வரை..!’ -யார் இந்த நர்த்தகி நடராஜ்?

மதுரையிலும் சென்னையிலும் நடனப்பள்ளிகளை நடத்தி வருகிறார் நர்த்தகி நடராஜ். வெல்லியம்பலம் என்கிற பெயரில் ஓர் அறக்கட்டளை நடத்துகிறார். அதன் 85 சதவிகித நிதியும் திருநங்கையரின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது.

கொஞ்சி கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய இளம்பருவத்திலேயே வாழ்க்கையின் குரூரப் பக்கங்களுக்கு தள்ளப்பட்டவர் நர்த்தகி நடராஜ். அந்த பக்கங்களின் முட்கள் கீறியும் ரத்தம் சிந்தாமல், வன்மம் கொள்ளாமல் வாழ்க்கை மீதான பற்றை ஒவ்வொரு அடியிலும் பாதுகாத்து வளர்த்தெடுத்தார்.

குழந்தையிலிருந்து அவமானங்களாலும் புறக்கணிப்புகளாலும் கட்டப்பட்ட வாழ்க்கையின் மீது ஏறி நின்று நர்த்தகி நடராஜ் மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது அன்பையும் நம்பிக்கையையும். நர்த்தகி நடராஜ் போன்றவொரு ஆளுமை மாநிலத்தின் வளர்ச்சிக் குழுவில் இடம்பெறுவதே நம் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சிக்கான சான்று என சொன்னால் மிகையாகாது.

- ஆர்.எஸ்.ஜெ

அடுத்த கட்டுரைக்கு