Published:Updated:

`தமிழகத்தின் அடுத்த சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி யார்? - லிஸ்ட் ரெடி?!'

டி.ஜி.பி திரிபாதி
டி.ஜி.பி திரிபாதி

தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதி, இன்னும் சில தினங்களில் ஓய்வுபெறவிருக்கிறர். அதனால் புதிய டி.ஜி.பி-யைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

தமிழக காவல்துறையில் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி பதவி முக்கியமானது. இந்தப் பதவி நாற்காலியில் அமர வேண்டும் என்பது தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரின் ஆசை. ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் (HOPF) என அழைக்கப்படும் தமிழக சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்குத் தகுதியான டி.ஜி.பி அந்தஸ்திலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்ப் பட்டியல் மத்திய தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது தமிழக காவல்துறையில் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பியாக திரிபாதி இருக்கிறார். இவரின் பணிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அதனால் புதிய டி.ஜி.பி தேர்வு செய்யப்படவிருக்கிறார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் மத்திய தேர்வாணையத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். டி.ஜி.பி ரேஸில் யார், யார் இருக்கிறார்கள், அதில் யாருக்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

1986-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான மிதிலேஷ்குமார் ஜா, அடுத்த மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். டி.ஜி.பி-யாக நியமிக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதப் பணிக்காலம் இருக்க வேண்டும். அதனால் மிதிலேஷ்குமார் ஜா-வை தமிழக டி.ஜி.பி-யாக நியமிக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. அடுத்து 1987 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பட்டியலில் ரயில்வே துறை டி.ஜி.பி-யாகப் பணியாற்றிவரும் சைலேந்திரபாபு இருக்கிறார். இவர்தான் சீனியாரிட்டி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் ஓய்வுபெறவிருக்கிறார். தி.மு.க-வின் ஆதரவு இருப்பதால் சைலேந்திர பாபு டி.ஜி.பி ரேஸில் முன்னிலையிலிருக்கிறார் என்கிறார்கள்.

தீயணைப்புத்துறை டி.ஜி.பி-யாக உள்ள கரன் சின்ஹா, 2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். இவரும் டி.ஜி.பி ரேஸில் 2-ம் இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. டி.ஜி.பி பிரதீப் வி பிலிப், ஓய்வு பெற இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருப்பதால் அவரின் பெயர் பட்டியலில் இல்லை என்கின்றனர். 1988 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா, அயல்பணியில் உள்ளார். இவர், 2025-ம்ஆண்டு, ஜூலை மாதத்தில் ஓய்வு பெற உள்ளார். அதனால் இவரும் இந்த ரேஸில் 3-வது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது . சஞ்சய் அரோரா, நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர்.

டி.ஜி.பி அலுவலகம்
டி.ஜி.பி அலுவலகம்

சிறைத்துறை டி.ஜி.பி-யாக இருக்கும் சுனில்குமார் சிங் , 1988-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ் அதிகாரி. இவர், 2022-ம் ஆண்டு அக்டோபரில் ஓய்வுபெற உள்ளார். அதனால் இவரும் டி.ஜி.பி ரேஸில் 4-வது இடத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி-யாக இருக்கும் கந்தசாமி, 1989-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் 2023-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஓய்வு பெற உள்ளார். தி.மு.க-வுக்கு வேண்டப்பட்டவராகக் கருதப்படும் இவரும் டி.ஜி.பி ரேஸில் இருந்துவருகிறார். சிபிசிஐடியில் பணியாற்றும் டி.ஜி.பி ஷகீல் அக்தர், 2022-ம் ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெற உள்ளார். இவரும் ரேஸில் உள்ளார். கந்தசாமிக்கும் ஷகீல்அக்தருக்கும் தி.மு.க ஆட்சி வந்ததும் முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டன. டி.ஜி.பி அந்தஸ்திலிருக்கும் 1989-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ் அதிகாரியான ராஜேஷ்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், அவரின் பெயர் ரேஸில் இல்லை என்கிறார்கள். 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பேட்ஜ் அதிகாரியான பிரஜ் கிஷோர் ரவி (பி.கே.ரவி) 2023-ம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற உள்ளார். இவரும் டி.ஜி.பி ரேஸில் இருந்து வருகிறார். இந்த ஏழு ஐ.பி.எஸ் அதிகாரிகளில் மூன்று பேரின் பெயர்களை யூ.பி.எஸ்.சி தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதில் ஒருவரை தமிழக சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக மாநில அரசு நியமிக்கும். இதில் சைலேந்திர பாபு சீனியாரிட்டி அடிப்படையிலும் தகுதி அடிப்படையிலும் முதலிடத்தில் இருந்துவருகிறார் என்கிறார்கள். அதனால் தமிழகத்தைச் சேர்ந்த சைலேந்திர பாபுவை சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவருக்கு அடுத்த சாய்ஸாக டி.ஜி.பி கந்தசாமி இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. புதிய டி.ஜி.பி யார் என்ற அறிவிப்பு நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு