Published:Updated:

திமுக அமைச்சரவையின் முதல் இலாகா மாற்றம்; யார் இந்த ராஜகண்ணப்பன்... மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

ராஜகண்ணப்பன்

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை, அதிரடியாக துறை மாற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தச் சூழலில் ராஜகண்ணப்பனின் பின்னணி குறித்து ஆராய்வோம்.

திமுக அமைச்சரவையின் முதல் இலாகா மாற்றம்; யார் இந்த ராஜகண்ணப்பன்... மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை, அதிரடியாக துறை மாற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தச் சூழலில் ராஜகண்ணப்பனின் பின்னணி குறித்து ஆராய்வோம்.

Published:Updated:
ராஜகண்ணப்பன்

தொடர்ச்சியானப் புகார்களின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை, அதிரடியாக துறை மாற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தச் சூழலில் ராஜகண்ணப்பனின் பின்னணி குறித்து ஆராய்வோம்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்து அரசியலுக்கு வந்த ராஜகண்ணப்பன், சிவகங்கை மாவட்ட முக்கியப் புள்ளியாக அ.தி.மு.க-வில் வலம்வந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஜெ.அணி - ஜா.அணி என இரண்டாகப் பிரிந்திருந்தது. அதில், ஜெயலலிதா பக்கம் நின்றவர் கண்ணப்பன். அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். அந்தச் சமயம் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்த காரணத்தால், ஜெ-ஜா அணிகள் இணைந்தவுடன் கண்ணப்பனைத் தனது ஆஸ்தான தளபதிகளில் ஒருவராக வைத்துக்கொண்டார் ஜெயலலிதா.

அமைச்சர் சிவசங்கர் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
அமைச்சர் சிவசங்கர் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

1991-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோது, திருப்பத்துார் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த கண்ணப்பனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது. அன்றைக்கு ஜெயலலிதாவின் நிழலாக அறியப்பட்ட சசிகலாவின் ஆசியும் கண்ணப்பனுக்கு இருந்ததால், இரண்டுபேரும் கண்ணப்பனுக்கு நல்ல துறையை ஒதுக்க முடிவெடுத்தார்கள். அதன்படி பொதுப்பணி, மின்சாரம், நெடுஞ்சாலை ஆகிய மூன்று முக்கியத் துறைகளைக் கண்ணப்பனுக்கு ஒதுக்கினார்கள். ஒரே நபரிடம் இத்தனை பொறுப்புகளை ஒதுக்கியதைப் பார்த்து மிரண்டுபோனார்கள் அ.தி.மு.க-வினர்.

ஒருகட்டத்தில் அ.தி.மு.க-வின் கஜானாவையே கண்ணப்பனை நம்பி ஒப்படைத்தார் ஜெயலலிதா. இன்றைக்கு பொதுப்பணித்துறையில் பேசப்படும் பேக்கேஜ் சிஸ்டம் முறையை 1991 காலத்திலேயே நடத்திக்காட்டியவர் கண்ணப்பன். அவரது சமூகத்தினர் பலரையும் ஒப்பந்ததாரர்களாகக் களத்தில் இறக்கினார். அன்றைக்கு ஜெயலலிதா அரசு மீது எழுந்த ஊழல் புகார்களுக்குக் கண்ணப்பனும் ஒருகாரணம் என்றால் அது மிகையல்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதா
ஜெயலலிதா

கண்ணப்பன் கார் போயஸ் கார்டனுக்கு வருகிறது என்றால், கார்டன் கதவுகள் தன்னால் திறக்கும் என்பார்கள் அன்றைய அ.தி.மு.க-வினர். தென் மாவட்டங்களில் கண்ணப்பனுக்கு உள்ள சமூகச் செல்வாக்கு, கட்சி - ஆட்சி இரண்டையும் வழிநடத்தும் பக்குவம் போன்றவற்றைக் கண்டு ஜெயலலிதாவே மிரண்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

குறிப்பாக 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியதும், கண்ணப்பனை வீட்டிற்கு அழைத்து காரணம் கேட்டுள்ளார் ஜெயலலிதா. அப்போது “நீங்க என்ன ஆட்சி பண்ணீங்க. கூட அந்த அம்மாவை வச்சுகிட்டு கொஞ்சம் நஞ்சமா ஆட்டம் போட்டீங்க..” என்று கண்ணப்பன் கர்ஜித்ததைப் பார்த்து ஷாக்காகிவிட்டாராம் ஜெயலலிதா. அதன்பிறகு போட்டி அ.தி்.மு.க-வை தொடங்கும் முடிவுக்கு வந்த கண்ணப்பன், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்தார். அவர் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்துச் சென்றுள்ளன. கண்ணப்பனின் இந்த செல்வாக்கைக் கண்டு அதிர்ந்த ஜெயலலிதா அ.தி.மு.க மீண்டும் ஒரு பிளவை சந்திக்கக் கூடாது என்று முத்துசாமியை வைத்துக் கண்ணப்பனை ஆஃப் செய்ய முயன்ற சம்பவங்கள் எல்லாம் அப்போது நடந்திருக்கின்றன. இப்படி ஜெயலலிதாவுக்கே டஃப் கொடுத்த கண்ணப்பனை ஜாக்கிரதையாகவே கையாள வேண்டும் என்று ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி சொல்லிவந்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

2,000-ம் ஆண்டில் அ.தி.மு.க-லிருந்து வெளியேறிய கண்ணப்பன், ‘மக்கள் தமிழ்த் தேசம்’ என்ற கட்சியைத் தொடங்கி, 25 லட்சத்துக்கு மேற்பட்டவர்களைத் திரட்டி மாநாடு நடத்தியது தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளையும் மிரளவே செய்தது. அந்தக் கூட்டத்தைக் காட்டியே 2001-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சிறிய கட்சிகளை உள்ளடக்கி மூன்றாவது அணியை ஏற்படுத்தினார்.

2006-ல் தனது கட்சியைக் கலைத்துவிட்டு, தி.மு.க-வில் இணைந்து எம்.எல்.ஏ-வானார். 2009-ல் தி.மு.க-வை விட்டு வெளியேறிய கண்ணப்பன், எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்டார். பின்னர், ஜெயலலிதா மறைந்து எடப்பாடி-பன்னீர்செல்வம் தலைமையில் சிலகாலம் இருந்த கண்ணப்பன், பா.ஜ.க-வுடனான அ.தி.மு.க கூட்டணியை விமர்சித்து கட்சியை விட்டு வெளியேறி, மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார்.

ராஜ கண்ணப்பன்
ராஜ கண்ணப்பன்

வந்த வேகத்தில் எம்.எல்.ஏ சீட் பெற்று, அமைச்சராகவும் அமர்ந்து காலங்காலமாக தி.மு.க-வில் இருக்கும் நிர்வாகிகளிடம் கெத்து காட்டினார். அமைச்சர் ஆனது முதலே கண்ணப்பன் குறித்தும், அவரது போக்குவரத்துத்துறை குறித்தும் பலவாராகச் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. `கிடைக்கும் வருமானத்தைப் பல அமைச்சர்கள் அச்சம் மற்றும் மரியாதைக் காரணமாக மேலிடத்துக்குக் கொடுத்துவருகையில், கண்ணப்பன் அதில் குறிவைத்ததுதான் மேலிடத்துக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதனால்தான், எந்த ஒரு ஆட்சியும் செய்திராத வகையில், சொந்த அமைச்சர் துறைக்குள்ளேயே மாநில அரசுக்குச் சொந்தமான லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து ரெய்டு நடத்தப்பட்டது' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எழிலகத்திலுள்ள போக்குவரத்துத்துறை ஆணையர் நடராஜ் அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டில் கணக்கில் வராத 35 லட்சம் ரூபாய் சிக்கியது. அவரை மடக்கி விசாரித்ததில், ஆதிமுதல் அந்தம் வரை ராஜகண்ணப்பன் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார் நடராஜ்.

அப்போதே நேரம் பார்த்துக்கொண்டிருந்தது தி.மு.க அரசு. இந்நிலையில், பி.டி.ஓ ஒருவரைச் சாதியைச் சொல்லித் திட்டிய தகவல் வைரலாகவே, உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலாகாவை மாற்றிக்கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism