Published:Updated:

`செருப்பு வீச்சு முதல் தள்ளுமுள்ளு வரை' அதிமுக Vs அமமுக... தொண்டர்கள் மோதலுக்கு யார் காரணம்?

ஜெயலலிதா - அதிமுக
News
ஜெயலலிதா - அதிமுக

``பழனிசாமி & கம்பெனியினர்போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் ஈன புத்தி எங்களுக்குக் கிடையாது." - டி.டி.வி.தினகரன்

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக இதுவரை நடந்துவந்த அ.தி.மு.க - அ.ம.மு.க தொண்டர்களிடையிலான வார்த்தை யுத்தம், முதன்முறையாக நேரடியான கைகலப்பில் முடிந்திருக்கிறது. 'தி.மு.க அரசாங்கம்தான் இதற்குக் காரணம்' என அ.தி.மு.க தரப்பிலும், 'ஆட்சியில் இருந்ததால்தான் இத்தனை காலம் தப்பித்தார்கள்' என அ.ம.மு.க-வினரும் விளக்கம் தருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க தொண்டர்களும், அ.ம.மு.க தொண்டர்களும் காலை முதலே ஜெயலலிதாவின் நினைவிடம் அமைந்திருக்கும் மெரினா கடற்கடரையில் கூடினர். காலை 10 மணியளவில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். `ஜெயலலிதாவின் தொண்டர்களாக ஒன்றுபடுவோம். நம் கழகம் ஓர் இரும்புக்கோட்டை. அதை எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது' என நினைவிடத்தில் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றபோது, அ.ம.மு.க தொண்டர்கள் அவரது காரைச் சூழ்ந்துகொண்டு அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதனால், அந்த இடம் பரபரப்பானது. எடப்பாடி பழனிசாமியின் வாகனத்துக்கு முன்பாக செருப்பு ஒன்றும் வந்து விழ பதற்றம் மேலும் அதிகரித்தது.

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து, அ.தி.மு.க தொண்டர்களும் அங்கு வர இரு பிரிவினருக்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டது. அதன் உச்சகட்டமாக, அ.தி.மு.க - அமமுக தொண்டர்களுக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டது. இரண்டு கட்சித் தொண்டர்களுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க அம்மா பேரவை துணைச் செயலாளர் மாறன்,``டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின்பேரில் எடப்பாடி பழனிசாமிமீது ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அந்தத் தாக்குதலில் நான் காயமடைந்தேன். தினகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்மீது போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சென்னை மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

ஆனால், ``எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகத் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன். பழனிசாமி & கம்பெனியினர்போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் ஈன புத்தி எங்களுக்குக் கிடையாது. அதுவும் நாங்கள் போற்றி வணங்குகிற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரும், இதயதெய்வம் அம்மா அவர்களும் துயில்கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்துகொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப்போல மனசாட்சி துளியும் அற்ற துரோகக் கும்பல் அல்ல. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயகரீதியாக அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழகக் காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும்'' என தன் ட்விட்டர் பக்கத்தில் டி.டி.வி.தினகரன் விளக்கமளித்திருக்கிறார்.

ஜெயலலிதா நினைவிடத்தில்  தினகரன்
ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன்

இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். ``அம்மாவின் நினைவுதினத்துக்கு அ.தி.மு.க - அ.ம.மு.க தொண்டர்கள் வருவார்கள் என்பது தமிழக அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும். ஒரே இடத்தில் கூடும்போது பிரச்னைகள் உண்டாகும் என்பதும் தெரியும். வேண்டுமென்றேதான் இரண்டு கட்சித் தொண்டர்களையும் ஒரே நேரத்தில் காவல்துறையினர் அனுமதித்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் பிரச்னை இருப்பதுபோல வெளியில் தெரிய வேண்டும் என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். அதற்காக, அ.ம.மு.க-வினர் செய்த செயல்களைச் சரி என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்கள்மீது நாங்கள் புகாரளித்திருக்கிறோம். சட்டப்படியான நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்போம். ஆனால், சரியாக நேரம் ஒதுக்கி இரு கட்சித் தொண்டர்களையும் தனித்தனியாகப் பிரித்து அனுமதித்திருந்தால் இந்தப் பிரச்னைகளுக்கான தேவையே இருந்திருக்காது. அரசியல் காரணங்களுக்காக இந்த அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது" என்றனர் காட்டமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், அ.ம.மு.க-வினரிடம் இது குறித்து கேட்டபோது, ``அதெல்லாம் ஒன்றும் இல்லை. இத்தனை காலம் ஆட்சியிலிருந்தார்கள். அளவுக்கு அதிகமான போலீஸ் பாதுகாப்போடு வலம்வந்தார்கள். இப்போது அப்படி இல்லை. அதனால், அவர்களைப் பிடிக்காத அ.தி.மு.க-வின் நலனை விரும்பும் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். இனி அவர்கள் செல்கிற இடங்களிலெல்லாம் இது போன்ற எதிர்ப்புகளை நீங்கள் காணலாம். கட்சித் தேர்தலைக்கூட ஜனநாயக முறைப்படி நடத்தாதவர்கள், குண்டர்களை வைத்து கட்சித் தொண்டர்களைத் தாக்குபவர்கள் இது போன்ற எதிர்ப்புகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும். ஆனால், எங்கள் தலைமைக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. உண்மையான அ.தி.மு.க தொண்டர்களின் கொந்தளிப்பாகத்தான் இதை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்''என்றனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா

இந்த விவகாரத்தில் தி.மு.க தரப்பிலோ, ``இது போன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளைக் கண்டுகொள்ளும் இடத்தில் தி.மு.க இல்லை. மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி எங்கள் தலைவர் ஸ்டாலின் இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். இவர்களைப் பற்றி நினைப்பதற்கே அவருக்கு நேரமிருக்காது. இது அவர்களின் உட்கட்சி விவகாரம். தோதான நேரத்தில், அவர்கள்தான் அனுமதி கேட்டிருக்க வேண்டும். தங்களின் தவறுகளை மறைக்க அரசின்மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறார்கள்'' என்கிறார்கள்.