Published:Updated:

செந்தில் பாலாஜிக்குப் புது `செக்', ராமதாஸ் சொன்ன அந்தத் தலைவர் யார்? - கழுகார் அப்டேட்ஸ்!

செந்தில் பாலாஜி மற்றும் ராமதாஸ்
செந்தில் பாலாஜி மற்றும் ராமதாஸ்

``65 நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் பேருந்து இயக்கம் தொடங்கியுள்ளது. மக்கள் பல்ஸை அறிந்துவிட்டு வருகிறேன். வாட்ஸ்அப் செக் செய்யவும்’’ - பேசிவிட்டு போனை கட் செய்தார் கழுகார். சிறிது நேரத்தில் வாட்ஸ்அப்பில் தகவல்கள் கொட்டத் தொடங்கின.

ஐ.பி.எஸ் டிரான்ஸ்ஃபர் தாமதம் ஏன்?

ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களைப் பேசி முடிக்க, கடந்த மே 29-ம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கவிருந்த உயர்மட்டக் குழு கூட்டம் திடீரென ரத்தானது. `கொரோனா ஊரடங்குத் தளர்வுகுறித்தான விவாதத்தில் முதல்வர் பிஸியாக இருந்ததால் கூட்டம் நடைபெறவில்லை’ என்கிறார்கள். விசாரித்ததில், `பாதி ஆபீஸருங்க தி.மு.க சார்பு நிலைப்பாட்டுல இருக்காங்க. மீதி இருக்குற ஆளுங்கள எங்க, எந்தப் பதவிக்குப் போடுறது... பேசாம விடுங்க. அடுத்த வாரம் பார்த்துக்கலாம்’ என முதல்வர் தரப்பிலிருந்து கோபத்துடன் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதத்திலிருந்து பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நிலைமைதான் பாவம்... ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள்!

25 லட்சம் கொரோனா காணிக்கை...`கலகலப்பு’ கொடுத்த நம்பிக்கை!

சொத்துகள், நகைகளைப் பறித்துவிட்டதாக தன் மனைவி கொடுத்த புகாரிலும், மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து சொத்துக்களை அபகரித்த புகாரிலும் சிக்கிய வாணியம்பாடி நகரப் பொறுப்பாளர் சாரதிகுமாரை சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க தலைமை அதிரடியாக நீக்கியது. இந்தநிலையில் மாவட்டத்தில் கோலோச்சும் கலகலப்பான தி.மு.க முக்கியப் புள்ளி, ``விடுய்யா, நான் உனக்குப் பதவி வாங்கித் தர்றேன்’’ என்று சாரதிகுமாருக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக வாணியம்பாடி முழுவதும் பேச்சு ஓடுகிறது. இந்த நம்பிக்கையில் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பழையபடி சாரதிகுமார் தலைகாட்டுகிறாராம்.

ஏலகிரி மலையில் அந்த தி.மு.க முக்கியப் புள்ளிக்கு சொகுசு பங்களா இருக்கிறது. சமீபத்தில் அந்த பங்களாவுக்குக் குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் சென்ற புள்ளியை சாரதிகுமார் விழுந்து விழுந்து கவனித்தாராம். தலைவரின் பாதத்தில் 25 லட்ச ரூபாயைக் காணிக்கையாக சாரதி வைத்ததும் உற்சாகத்தில் வாய் பிளந்தவர், ``தம்பி, உன்னை `தலைமையேற்க வா’னு தலைமையே கூப்பிடப்போகுது பாரு’’ என ஆசீர்வதித்தாராம். தன்னுடைய பெயரில் கொரோனா நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அந்த 25 லட்சம் ரூபாயை கட்சி நிர்வாகிகளிடம் அந்தப் புள்ளி கொடுத்துள்ளார் என்கிறது வேலூர் தி.மு.க வட்டாரம்.

`நம்ப வேண்டாம்!’
ராமதாஸ் கொளுத்திப்போட்ட தலைவர் யார்?

`நானும் கலைஞரும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மூத்த அரசியல் தலைவரைக் குறிப்பிட்டு அவரை நம்ப வேண்டாம் என்று கலைஞர் சொன்னார்’ என்று சமீபத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ட்விட்டரில் கொளுத்திப்போட... `ராமதாஸ் சொன்ன சிதம்பர ரகசியம் என்னவாக இருக்கும், யார் அந்தத் தலைவர்?’ என சமூக வலைதளங்களில் பட்டிமன்றமே நடைபெறுகிறது. தேசியக்கட்சி ஒன்றின் நிரம்பப் படித்த அறிவார்ந்த பிரமுகர்தான் அந்தத் தலைவராம். ``கலைஞருக்கும் அந்தத் தலைவருக்கும் இருந்த உரசல் ஊரறிந்த செய்தி. ஆனால், கலைஞர் இதைச் சொன்னாரா இல்லையா என்பது அந்த இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அதில் கலைஞர் இறந்துவிட்டார். அதனால், அவர் தரப்பிலிருந்து மறுப்பு வராது. தி.மு.க கூட்டணியில் குழப்பம் வர வேண்டும் என்பதற்காகவே இத்தனை நாள் எதுவும் சொல்லாமல் இப்போது இப்படி ஒரு ட்வீட் தட்டிவிட்டிருக்கிறார் ராமதாஸ்” என்கிறார்கள் உடன்பிறப்புகள்!

ஜேம்ஸ் பாண்ட்?

தி.மு.க அனுதாபியான பிரமுகர் ஒருவர் சுகாதாரத்துறையின் அனைத்து மட்டங்களிலும் தொடர்பில் உள்ளவர். முன்னாள் சங்கப்பிரமுகரான அவருக்கு ஜேம்ஸ் பாண்ட் என்ற செல்லப்பெயரும் உண்டு. அந்த அளவுக்குக் கோட்டையின் ஓட்டை, உடைசல்களை அறிந்தவர். ஜூன் 1-ம் தேதியிலிருந்து ஜேம்ஸ் பாண்ட் களத்தில் இறங்கிவிட்டார் என்பதுதான் கோட்டையில் பரபரக்கும் ஹாட் நியூஸ். புது பாணியில் ஏதாவது ஊழல்கள் நடந்தனவா, மீடியேட்டர்கள் நடமாட்டம் இருக்கிறதா, துறை அமைச்சரின் பெயரைச் சொல்லிக்கொண்டு தலைமைச்செயலகத்தில் எவ்வளவு பேர் வலம்வருகிறார்கள், சுகாதாரத்துறை முறைகேடு புகார்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று ஆதாரங்களுடன் தகவல் சேகரித்துவருகிறாராம் ஜேம்ஸ் பாண்ட். சுகாதாரத்துறையில் நியமிக்கப்படும் டாக்டர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனங்களுக்கு `பரிமாற்றங்கள்’ எந்த ரூட்டில் நடக்கிறது என்பதை துப்பறிவதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட முதல் அசைன்மென்ட் என்கிறார்கள்.

உபசரிக்கும் சென்னை போலீஸ் கமிஷனர்... உற்சாகத்தில் போலீஸார்!

கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 64 நாள்களில் (ஜூன் 2 வரை) சென்னை காவல்துறையில் சுமார் 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து, குணமடைந்து பணிக்குத் திரும்பும்போது, அவர்களுக்கு கபரசுரக் குடிநீர் கொடுத்து வரவேற்று உபசரிக்கிறார் மாநகர கமிஷனர் விஸ்வநாதன். இப்படிதான் சிகிச்சையில் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய கூடுதல் கமிஷனர் தினகரனுக்கு ஜூன் 1-ம் தேதியன்று பாண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளித்தார் விஸ்வநாதன். அதே நாளில் கொரோனாவிலிருந்து மீண்ட மேலும் 31 போலீஸாருக்கும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது!

உளவுத்துறையால் பாதிக்கப்பட்ட துரை!

தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்குத் தாவினார் வி.பி.துரைசாமி. பத்து நாள்களுக்கு மேலாகிவிட்டது. அவருக்கு அங்கே பெரிய பதவி ஒன்றை ரிசர்வ் செய்து வைத்திருப்பதாக பா.ஜ.க பிரமுகர்கள் தூண்டில் வீசியிருந்தார்கள். ஆனால், இதுவரை பதவி கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லையாம். பலத்த நிசப்தம் நிலவுவதால் பதற்றத்தில் இருக்கிறதாம் துரைசாமி தரப்பு. ``துரைசாமி தி.மு.க-வில் இருந்த காலகட்டத்தில் பா.ஜ.க தலைவர்களை கிண்டலும் கேலியாக மேடைகளில் வறுத்தெடுத்த ஆடியோக்களை மத்திய உளவுத்துறையினர் டெல்லி மேலிடத்துக்குப் பார்வைக்கு அனுப்பியதன் விளைவுதான் இதற்குக் காரணம்” என்கிறார்கள் உளவுத்துறை வட்டாரத்தில்!

யார் அந்த பி.எம்.டபிள்யூ மேடம்?

கடந்த 2015-16 காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் இப்போது தி.மு.க-வில் இருக்கிறார். அவர் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் வேலைகளுக்காக நடந்த லஞ்சப் பணப் பரிவர்த்தனைகள் குறித்த புகார்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரித்துவருகிறது. இதில் சமீபத்தில், `பி.எம்.டபிள்யூ மேடம்’ என்றொரு புதிய கேரக்டர் தெரியவந்திருக்கிறதாம். சென்னை கே.கே. நகரில் உள்ள போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் பணியில் இருந்தவர் அவர் என்கிறார்கள்.

தனியார் பள்ளிகளிடம் வசூல் வேட்டை!

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் படி (G.O. No.199, Revenue and disaster management department), 2020-21 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. 2019-20க்கான நிலுவைக் கட்டணத்தையும் கேட்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். வேன் கட்டணம், பராமரிப்புக் கட்டணம், கல்விக் கட்டணம் என டிசைன் டிசைனாக வசூலித்து வந்த தனியார் பள்ளிகள், அரசின் இந்த உத்தரவால் ஆடிப்போயுள்ளனர். இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தையே அரசு திடீரென ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது எனப் பதறுகிறார்களாம்.

அதனாலேயே தனியார் பள்ளிகளை எவ்வளவு சீக்கிரம் திறக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாகத் திறக்க ஆயத்தமாகிவருகின்றனர். இந்தச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அரசின் அனுமதியைப் பெற்றுத் தருவதாக, தனியார் பள்ளிகள் தரப்பிலிருந்து ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்துவருகிறது ஒரு `உதவியாளர்கள்’ கும்பல் ஒன்று. திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு கல்விக் குழுமம் மொத்தமாக 50 லட்ச ரூபாய் கொடுத்திருப்பதாகத் தகவல். இப்போது கொடுத்திருக்கும் லஞ்சத்தொகையையும் சேர்த்தே பெற்றோர்கள் தலையில் கட்டணமாகக் கட்டுவார்கள் என்பதே கல்வியாளர்களின் கவலை!

`ஏசி’யில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு `ஓசி’ காய்கறி!

கொரோனா காலத்தில் காய்கறி விநியோகம் தட்டுப்பாடின்றிக் கிடைக்க, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பாகக் காய்கறி பைகள் விற்பனை செய்யப்பட்டன. 100 ரூபாய் மதிப்பிலான பையில் 14 வகையான காய்கறிகள் இடம்பெற்றிருந்தன. மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த இந்தக் காய்கறி பைகள் இப்போது பெரும்பாலும் கிடைப்பதில்லை. விசாரித்தால், ``சில ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து என்னென்ன காய்கறிகள் வேண்டும் என லிஸ்ட் முதல்நாளே தோட்டக்கலை துறைக்கு ஆர்டர் வந்துவிடுகிறது. அவர்கள் கேட்கும் காய்கறிகளை அழகாக பேக் செய்து அதிகாரிகளின் வீடுகளுக்கே நேரில் தோட்டலைக்கலைத்துறையினர் சப்ளை செய்கிறார்கள். மிச்சமீதி இருக்கும் காய்கறிகளை அரசு அலுவலகங்கள் வாசலில் வைத்து விற்றுவிட்டு கிளம்பிவிடுகின்றனர். நாள் முழுவதும் வாடாமல் வதங்காமல் ஏசியில் பணியாற்றும் அந்த அதிகாரிகளின் சம்பளமே லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும். அவர்களுக்கு இப்படி இலவசமாக காய்கறி கொடுத்தால், பொதுமக்களுக்கு எங்கேயிருந்து காய்கறி பை கொடுக்க முடியும்?” என்கிறார்கள் நேர்மையான தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்!

கும்பகோணம் குஸ்தி!

கும்பகோணத்தில் தி.மு.க-வின் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் அசோக்குமார். இவரின் மனைவி காயத்திரி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக உள்ளார். கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்கள் 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 65 லட்ச ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அ.தி.மு.க தரப்பில் புகார் வாசிக்கப்படுகிறது.

ஒன்றியத் தலைவரின் கணவர் அசோக்குமாரோ, ``கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதற்கு ஜி.எஸ்.டி வரி மட்டும் 18 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அதையும் சேர்த்துதான் மொத்தம் 90 லட்சம் கணக்காகிறது. இதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை’’ எனக் கூறிவருகிறார். தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ-வான சாக்கோட்டை அன்பழகன் இருவரின் கீழ் தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் கோஷ்டிகளாகச் செயல்படுவதே இந்தப் பிரச்னை பெரிதாவதற்குக் காரணம் என்கிறது லோக்கல் தி.மு.க.

அடுத்த கட்டுரைக்கு