பிரீமியம் ஸ்டோரி

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முக்கியக் கட்சிகளில் அடுத்தகட்ட அதிரிபுதிரிக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. அதுபோலவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் யார் என்பது குறித்த பஞ்சாயத்து பரபரப்பாகியிருக்கிறது!

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் பதவி என்பது கிட்டத்தட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு நிகரானது. அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் நடக்கும் அனைத்துத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுடன் சட்டப் பேரவைத் தலைவரும் இடம்பெறுவார். வேட்பாளர்கள் தேர்வுகளிலும் முக்கியப் பங்கு வகிப்பார். இதனாலேயே தற்போது அந்தக் கட்சியில் பேரவைத் தலைவருக்கான போட்டி அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் யார்?

மே 7-ம் தேதி சென்னைக்கு வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு வந்தவர், மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த்தை சந்தித்துவிட்டுச் சென்றார்’ என்று மழுப்பினார்கள் சத்திய மூர்த்தி பவனின் நிர்வாகிகள் சிலர்.

ஆனால், கட்சியின் உள்வட்டாரங்களில் விசாரித்ததில், “சட்டப் பேரவைத் தலைவர் பதவி தொடர்பாக ஆலோசனை நடந்தது உண்மைதான். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.ஜி.பிரின்ஸ் மற்றும் விஜயதரணி ஆகியோர் அந்தப் பதவிக்காக முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் மேலிடத்திலிருந்து இருவர் தலைமையிலான மேற்பார்வைக்குழு தமிழகம் வந்து, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் யார் என்பது குறித்து எம்.எல்.ஏ-க்களிடம் கருத்து கேட்டோ, தேர்தல் நடத்தியோ அறிவிக்கும்” என்றார்கள்.

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்காக இரண்டு தரப்பும் எப்படியெல்லாம் காய்நகர்த்துகின்றன என்பது குறித்து கட்சியின் தென்மாவட்ட சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “பிரின்ஸ், விஜயதரணி இருவருமே மூன்று முறை எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்திருக்கிறார்கள் என்கிற அடிப்படையிலும், எம்.எல்.ஏ-க்களில் அவர்களைத் தவிர சீனியர்கள் யாரும் இல்லை என்ற வகையிலும் சட்டப்பேரவைத் தலைவர் பதவியைக் கேட்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வெற்றிபெற்ற இருவருமே காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க வேட்பாளர்களைத் தோற்கடித்திருக் கிறார்கள். சீனியாரிட்டி அடிப்படையில் பதவியைப் பெறுவதற்கு இருவருக்குமே சம அதிகாரம் இருந்தாலும், பிரின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஏனெனில், அவர் யாருடனும் முரண்பாடு காட்ட மாட்டார், சீனியர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வார். அதனாலேயே கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சில எம்.பி-க்களின் ஆதரவு பிரின்ஸுக்கு இருக்கிறது. காங்கிரஸில் அவர் சார்ந்த சமூகத்தின் எம்.எல்.ஏ-க்களும் அதிகம் இருக்கிறார்கள். தவிர, கடந்த முறை சட்டப் பேரவைத் துணைத் தலைவராக இருந்த அனுபவமும் அவருக்குக் கைகொடுக்கும். அதனால், எப்படியாவது பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் நேரில் சென்று ஆதரவு கேட்டுக்கொண்டிருக்கிறார்” என்றவர்கள், விஜயதரணி பற்றியும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்...

“அதிரடி முடிவுகளுக்குப் பெயர்பெற்றவர் விஜயதரணி. நிர்வாகத்தைத் திறம்பட நடத்துபவர், ஒருமுறை முடிவு எடுத்துவிட்டால் யார் பேச்சையும் கேட்க மாட்டார். சொந்தக் கட்சியிலேயே சீனியர் என்பதற்காக கூழைக் கும்பிடு எல்லாம் போட மாட்டார். பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நான்கு பேர் இந்த முறை சட்டப்பேரவைக்குள் அடியெடுத்துவைக்கின்றனர். இவர்கள் மத்திய அரசின் ஆதரவுடன் ஆளும் கூட்டணிமீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார்கள். அவர்களுக்கு நெத்தியடிபோல பதில் சொல்ல விஜயதரணியால்தான் முடியும்.

காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் யார்?

அதேசமயம், ‘2016-ல் அ.தி.மு.க-வுக்குச் செல்ல முயன்றார்; இந்தமுறை சீட் கொடுக்கவில்லை என்றால் பா.ஜ.க-வில் இணைந்திருப்பார். சென்னையிலேயே தங்கியிருப்பதால், தொகுதி மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வலுவாக இருப்பதால்தான் விஜயதரணியால் வெற்றிபெற முடிந்தது’ என்றெல்லாம் ஒரு டீம் மேலிடத்தில் அவரைப் பற்றி போட்டுக்கொடுத்திருக்கிறது. கடந்த முறை சட்டப்பேரவைத் தலைவராக வேண்டும் என்று விஜயதரணி காய்நகர்த்தியபோதும் இதே சிக்கல்களைத்தான் சந்தித்தார். அப்போது சட்டப்பேரவைத் தலைவராக கே.ஆர்.ராமசாமி தேர்வு செய்யப்பட்டார். அதனால், இந்தமுறை பதவியைப் பிடித்தே தீர வேண்டும் என்று இவரும், அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களையும் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார்” என்றார்கள்.

இதற்கிடையே ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையும் சட்டப்பேரவைத் தலைவர் ரேஸில் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ‘‘தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் செல்வப்பெருந்தகையை போனில் அழைத்து ‘சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும்’ என்று கூறியுள்ளார்கள். இதனால் தலைவர் ரேஸில் மூன்றாவது நபராக செல்வப்பெருந்தகை களமிறங்கியிருக்கிறார்’’ என்கிறார்கள்.

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு