Published:Updated:

சிவசேனாவை உடைத்து உத்தவ் தாக்கரே அரசை உருக்குலைத்த பட்னாவிஸ்... யார் இவர்?

தேவேந்திர பட்னாவிஸ்

கங்காதர் பட்னாவிஸ், அப்போதைய அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் இந்திரா என்ற பெயரிலான பள்ளியில் படிக்க மாட்டேன் என கூறிய தேவேந்திர பட்னாவிஸ், வேறு பள்ளியில் சேர்ந்தார்.

சிவசேனாவை உடைத்து உத்தவ் தாக்கரே அரசை உருக்குலைத்த பட்னாவிஸ்... யார் இவர்?

கங்காதர் பட்னாவிஸ், அப்போதைய அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் இந்திரா என்ற பெயரிலான பள்ளியில் படிக்க மாட்டேன் என கூறிய தேவேந்திர பட்னாவிஸ், வேறு பள்ளியில் சேர்ந்தார்.

Published:Updated:
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவியேற்கவிருக்கிறது. பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி நடத்திவருகிறது. அவருடைய அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனாவைச் சேர்ந்த 40 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

இதோடு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, பா.ஜ.க-வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்படி அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். சிவசேனா கட்சியில் மொத்தமுள்ள 56 எம்.எல்.ஏ-க்களில் 30-க்கும் மேற்பட்டோர் எதிரணியில் உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அந்த மாநில ஆளுநர் பகத் சிங் கோஷாரி நேற்று உத்தரவிட்டார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது உருக்கமான உரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கூட்டணித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தவர், "எதிர்பாராத வகையில் நான் ஆட்சிக்கு வந்தேன், அதே பாணியில் நான் வெளியே செல்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவில் ஆளுநரைச் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உத்தவ் தாக்கரே முதல்வராகத் தொடருமாறு ஆளுநர் மாளிகை கேட்டுக்கொண்டிருக்கிறது. உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிய பா.ஜ.க-வினர் புதிய ஆட்சி அமைக்க இன்று ஆளுநரைச் சந்தித்து உரிமைக் கோருகிறார்கள். மகாராஷ்டிராவில் மீண்டும் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் விரைவில் பதவியேற்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியும், 12 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடமும் பெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ‘விரைவில் அமைக்கப்படவிருக்கும் அரசில் அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்துகொள்வது குறித்து பா.ஜ.க-வுடன் தனது அணி எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதுவரை அமைச்சகங்களின் பட்டியல் பற்றிய விவாதங்களை நம்ப வேண்டாம். இது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்’ என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

அனைத்து எம்.எல்.ஏ-க்களும் மும்பையில் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க கேட்டுக்கொண்டதையடுத்து, பட்னாவிஸ் இல்லத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் மகாராஷ்டிரா பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் மூத்த தலைவர்கள் கிரிஷ் மகாஜன், பிரவின் தரேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கிடையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ‘அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு தலைமை தாங்கி ஜூன் 22 முதல் கவுஹாத்தியில் தங்கியிருந்த ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ் சேர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யார் இந்த தேவேந்திர பட்னாவிஸ்?

நாக்பூர் மாவட்டத்தில் 1970-ம் ஆண்டு, ஜூலை 22-ம் தேதி பிறந்தவர் பட்னாவிஸ். இவரின் தந்தை கங்காதர் பட்னாவிஸ் நாக்பூரிலிருந்து மகாராஷ்டிரத்தில் மேலவை உறுப்பினராக இருந்தார். அவசரகாலத்துக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பெயரால் இயங்கிவந்த பள்ளியில் தேவேந்திர பட்னாவிஸ் படித்துவந்தார். இந்த நிலையில் ஜனசங்கத்தில் உறுப்பினராக இருந்த கங்காதர் பட்னாவிஸ் , அப்போதைய அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அதைத் தொடர்ந்து கங்காதர பட்னாவிஸ் கைதுசெய்யப்பட்ட நிலையில் இந்திரா என்ற பெயரிலான பள்ளியில் படிக்க மாட்டேன் என கூறிய தேவேந்திர பட்னாவிஸ், வேறு பள்ளியில் சேர்ந்தார். நாக்பூர் அரசு சட்டக் கல்லூரியில் 1992-ம் ஆண்டு சட்டப் படிப்பு படித்தவர், தந்தை ஜனசங்கத்தில் பணியாற்றியதுபோல் 1990-களில் பா.ஜ.க-வில் இணைந்தார். பா.ஜ.க மாணவரணித் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டார்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

இதையடுத்து ராம்நகர் வார்டில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் முதன்முறையாக வெற்றிபெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு வார்டு உறுப்பினராக இருந்த பட்னாவிஸ், நாக்பூர் மாநகராட்சியின் இளம் மேயராகவும் தேர்வுசெய்யப்பட்டார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் இளம் வயது மேயர்களில் இரண்டாவது மேயர் என்ற பெருமையைப் பெற்றார். 1999-ம் ஆண்டு நாக்பூர் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றார். அன்று முதல் 2019-ல் நடந்த சட்டசபைத் தேர்தல் வரை நாக்பூர் எம்.எல்.ஏ-வாகத் தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். 2014-ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை இல்லாதபோதும், சிவசேனா ஆதரவுடன் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அவர் வெற்றிபெற்று தனது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்தார்.

பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே
பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே

2019-ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றன. 145 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களைக் கைப்பற்றிய அந்தக் கூட்டணி உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்தது. முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்தக் கூட்டணி உடைந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உடன் சேர்ந்து அரசை அமைத்தது. இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2019-ம் ஆண்டு தனது 49 வயதில் இரண்டாவது முறையாக குறுகியகாலத்தில் முதல்வராக பட்னாவிஸ் இருந்தார். இப்போது ஏற்பட்டுள்ள ஆட்சிக் கவிழ்ப்புகுப் பிறகு மூன்றாவது முறையாக முதல்வர் பதவி பொறுப்பேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். இவருக்கு அம்ருதா பட்னாவிஸ் என்ற மனைவியும், திவிஜா பட்னாவிஸ் என்ற மகளும் இருக்கின்றனர்.

மோடி,  அமித் ஷா
மோடி, அமித் ஷா

மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில், அங்கிருந்த மாநிலக் கட்சிகளுக்குள் உட்புகுந்து, அவர்களுக்குள் இருக்கும் முரண்களைக் கையாண்டு, அந்தக் கட்சிகளைக் காணாமல் செய்து, பாஜக-வை வளர்த்தெடுக்க அந்தத் தலைவர்கள், நிர்வாகிகளையெல்லாம் பா.ஜ.க-வின் தலைவர்களாக மாற்றியதோ, அதே போன்றதொரு நிலையைத்தான் இப்போது மகாராஷ்டிராவிலும் நிகழ்த்தியிருக்கிறது பா.ஜ.க. இது இந்தியா முழுவதும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!