இலங்கையின் ‘காலி முகத்திடலி’ல், கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கிய அரசுக்கு எதிரான போராட்டம் 100 நாள்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் விளைவாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியைத் துறந்தார். பின்னர், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகியதோடு, நாட்டைவிட்டும் தப்பியோடினார். இதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, ‘பதில் அதிபரா’கச் செயல்பட்டுவருகிறார். `Gotta Go Home’ எனத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது `ரணில் கோ ஹோம்’ என்று மாறியிருக்கிறது. ஜூலை 18 முதல் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகிறது இலங்கை.

மும்முனைப் போட்டி!
ஜூலை 14-ம் தேதியன்று தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய. இதையடுத்து, பதில் அதிபராகப் பதவியேற்றார் ரணில். நாடாளு மன்ற வாக்கெடுப்பின் மூலம் அடுத்த அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மட்டுமே ரணில் அதிபராக இருக்கப்போவதால், அவரை அங்கே ‘பதில் அதிபர்’ என்று அழைக்கின்றனர். ஜூலை 20-ம் தேதியன்று புதிய அதிபரைத் தேர்ந்தெடுப் பதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், அதிபர் பதவியிலிருந்த ஒருவர் விலகி, அதன் பிறகு புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதன்முறை.
புதிய அதிபருக்கான இந்தத் தேர்தலில், ‘பதில் அதிபர்’ ரணில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த டலஸ் அழகம்பெரும ஆகிய மூவருக்கிடையே போட்டி நிலவுகிறது. இவர்களைத் தவிர களமாட முயன்று வரும் சிலருக்கு, பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதே கள நிலவரம். இலங்கை அரசியலை உற்றுநோக்கும் சிலர், ``ரணில், விவசாயிகளுக்கான கடன்களை அதிரடியாக தள்ளுபடி செய்திருக் கிறார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வரும் நிலையிலிருப்பதாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சி செய்துவருகிறார்.
ரணில் கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே எம்.பி என்பதால், ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்களை வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். சஜித், எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். டலஸும் தனது கட்சி எம்.பி-க்களுடன் பேசிவருகிறார். ஆக மொத்தத்தில் மூவருமே குதிரைப் பேரம் நடத்திவருகிறார்கள். சஜித் - டலஸ் இடையேகூட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. எனவே, யார் அதிபராவார், யார் பிரதமராவார் என்பதை கணிப்பது சிரமமாக இருக்கிறது’’ என்கின்றனர். இந்த மும்முனைப் போட்டியில் முந்தப்போவது யார் என்பது இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் அன்று பெரும் பாலும் தெரிந்துவிடும். மேலும், அதே நாளில், ஜூலை 9-ம் தேதி நடந்ததைப்போல மிகப்பெரிய கலவரங்கள் வெடிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் இலங்கை பத்திரிகையாளர்கள்.

நாடு திரும்பும் கோத்தபய?
அதிபர் மாளிகைக் கதவுகளை உடைத்துக்கொண்டு ஜூலை 9-ம் தேதி அன்று மக்கள் உள்ளே நுழைய, அங்கிருந்து தப்பிச் சென்றார் கோத்தபய. அருகிலிருந்த ராணுவ முகாமில் தங்கிக்கொண்டு பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக ஜூலை 13 அன்று, மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நசீத்தின் உதவியோடு, மாலத்தீவுக்குத் தப்பிச்சென்றார். இந்தியத் தயாரிப்பான `AN32’ ரக விமானப்படை விமானத்தில் மாலத்தீவுக்குச் சென்றவருக்கு, அங்கும் கடும் எதிர்ப்புகள் எழவே, சிங்கப்பூருக்குப் பறந்தார். சிங்கப்பூரில் இருந்துகொண்டு இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடையப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், எந்த நாட்டிலிருந்தும் அவருக்கு கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை.
இலங்கையிலுள்ள ‘தமிழன்’ நாளிதழின் ஆசிரியர் சிவராமசாமி இதுகுறித்து நம்மிடம் பேசினார். ``ஈழப் போரின்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கோத்தபயவை பல்வேறு நாடுகளும் போர்க் குற்றவாளியாகப் பார்க்கின்றன. அதனால் எந்த நாடும் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை. `15 நாள்களுக்கு மேல் இருக்கக் கூடாது’ என்று சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டிருப்பதால், மீண்டும் இலங்கைக்குத் திரும்ப கோத்தபய திட்டமிட்டுவருகிறார். இங்கு வந்தால், ‘முன்னாள் அதிபர்’ என்ற சிறப்புரிமை காரணமாக அவருக்குப் பாதுகாப்பு, தங்குவதற்கு இடம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்’’ என்றார்.

தமிழ் அமைப்புகளின் விருப்பம்!
இலங்கையிலுள்ள தமிழ் அமைப்புகள் சில, ``கோத்தபயவை நாட்டைவிட்டு விரட்டிய மக்கள் புரட்சி கொண்டாடப்படவேண்டியதுதான். ஆனால், இந்தப் போராட்டத்துக்கிடையே அங்கே வந்த எம்.பி சரத் பொன்சேகாவை, போராட்டக் காரர்கள் மேடையேற்றிக் கொண்டாடுகின்றனர். ஈழப் போரின்போது ராணுவப் படைத் தளபதியாக இருந்து தமிழர்களைக் கொன்று குவித்த போர்க் குற்றவாளி அவர். அவரை மக்கள் கொண்டாடும் போது, மீண்டும் இந்த நாடு ஒரு சிங்கள-பௌத்த பேரினவாத நாடாகவே இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது. இஸ்லாமியர்கள், தமிழர்கள் என இந்த நாட்டின் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம உரிமை வழங்கப்படும் நாடாக இலங்கை இருக்க வேண்டும். அப்படியான நாட்டை உருவாக்கத்தான் இந்த மக்கள் புரட்சி பயன்பட வேண்டும்’’ என்கின்றன.
மக்களின் நிலை?
இலங்கையில் எரிபொருள், உணவு என அத்தியாவசியப் பொருள்களுக்கான திண்டாட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. காலி முகத்திடலில் போராடும் சிலர், ``கோத்தபய தப்பியோடியது எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி. நாட்டுக்குச் சாதகமான மாற்றம் கிடைக்கும்போதே எங்கள் போராட்டங்கள் முடிவுக்கு வரும்’’ என்கிறார்கள்.
இந்த ஆண்டு இறுதிக்குள், இலங்கையின் பொருளாதாரம் மேலும் ஆறு சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று எச்சரித்திருக்கிறார் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர். அதிபர் நாற்காலிக்காகக் குதிரைப் பேரத்தில் ஈடுபடும் அரசியல் தலைவர்களிடம், நாட்டை மீட்டெடுக்க என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை!