Published:Updated:

டெல்லி வன்முறை: கபில் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டும் அரசியல் பின்னணியும்!

கபில் மிஸ்ரா
கபில் மிஸ்ரா ( facebook )

ஆம் ஆத்மியில் இருக்கும்போதே பா.ஜ.க-வுக்கு நெருக்கமாக இருந்துள்ளார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தொடர்பான பிரசாரங்களில் தனது கட்சிக்கு எதிராகப் பேசியுள்ளார்.

டெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் சாலையில் இறங்கி இந்தச் சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் போராட்டங்கள் டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளான ஜாஃப்ராபாத், மஜ்பூர் உள்ளிட்ட சில இடங்களில் பரவியது. இந்த போராட்டக்களங்களில் வன்முறைகள் வெடித்ததால் கடந்த சில தினங்களாகப் போர்க்களமாக மாறியது. இந்த வன்முறையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ.க-வின் முக்கிய ஐகானாக இருக்கும் கபில் மிஸ்ராவின் கருத்துகள்தான் இத்தகைய வன்முறைக்கு அடிப்படைக் காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கபில் மிஸ்ரா
கபில் மிஸ்ரா
twitter

யார் இந்தக் கபில் மிஸ்ரா?

நவம்பர் 13-ம் தேதி 1980-ம் ஆண்டு டெல்லியில் கபில் மிஸ்ரா பிறந்துள்ளார். இவருடைய தந்தை ரமேஷ்வர் மிஸ்ரா பிரபல எழுத்தாளராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். காமன் வெல்த் போட்டி தொடர்பான ஊழல்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியுள்ளார். இதுதொடர்பான புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். கபில் மிஸ்ராவின் தாயான அன்னபூர்னா மிஸ்ரா, பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மேயராகவும் இருந்துள்ளார்.

தலைநகரை மையமாகக் கொண்டு `யூத் ஃபார் ஜஸ்டிஸ்' என்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து கபில் மிஸ்ரா நிறுவினார். அதன்வழியாகப் பல்வேறு செயல்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார். தன்னுடைய செயல்பாடுகள் வழியாக கபில் மிஸ்ரா, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டார். காமன்வெல்த்துக்கு எதிராகவும் தொழிலாளர்களின் சட்டம் தொடர்பான பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்துள்ளார். பின்னர், 2012-ம் ஆண்டு ஆத்மி கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

`டெல்லி வன்முறையைக்  கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி!'- யார் இந்த ஐ.பி.எஸ் ஶ்ரீவஸ்தவா?

ஆம் ஆத்மியின் சார்பாக 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு, 2015-ல் நடைபெற்ற தேர்தலில் கராவல் நகரில் போட்டியிட்டு சுமார் 44,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டெல்லி அமைச்சரவையில் இவருக்கு நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டது. சம்ஸ்கிருத மொழியில் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களில் ஒருவராகவும் கவனம் பெற்றார். பதவிக் காலத்தில் யமுனா நதியை சுத்தப்படுத்துவது தொடர்பாக அதிக முயற்சிகளை எடுத்துக்கொண்டார்.

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மீது வாட்டர் டேங்கர் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எழுப்பினார். 2017-ம் ஆண்டு இந்த ஊழல் தொடர்பான விசாரணைகளை அரவிந்த் கெஜ்ரிவால் தாமதப்படுத்துவதாகவும் அவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகளை கூறினார். பின்னர் அமைச்சரவையிலிருந்தும் விலக்கப்பட்டார். இவர் எழுப்பிய குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கத் தவறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மியில் இருக்கும்போதே பா.ஜ.க-வுக்கு நெருக்கமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கபில் மிஸ்ரா
கபில் மிஸ்ரா
facebook

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தொடர்பான பிரசாரங்களில் தனது கட்சிக்கு எதிராகவே பேசியுள்ளார். கட்சிக்கு எதிரான செயல்பாடுகள் சபாநாயகர் கவனத்துக்குச் சென்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். ஆனால், சில நாள்களிலேயே மனோஜ் திவாரி உள்ளிட்ட பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் இவர் சிக்கி வருகிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பா.ஜ.க நடத்திய பேரணியில் தேச துரோகிகள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். நாடு முழுவதிலுமிருந்து இதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ட்விட்டரில் ``சிறிய பாகிஸ்தான் நகரில் உருவாக்கப்படுகிறது. பாகிஸ்தானியர்கள் ஷஹீன் பாக்கில் நுழைந்துள்ளனர். சட்டமன்றத் தேர்தலன்று டெல்லியின் சாலைகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போட்டி நடைபெறும்" போன்ற கருத்துகளை வெளியிட்டார். இதனால், அவர்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. பிரசாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் அவருக்குத் தடை விதித்தது. இதனால், பா.ஜ.க தலைவர்களும் கபில் மிஸ்ராவுக்கு எதிராகப் பேசி வந்தனர். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தார்.

`கலவரத்தைத் தூண்டினாரா கபில் மிஸ்ரா?' - பா.ஜ.க-விலிருந்தே எழுந்த எதிர்ப்புக் குரல்

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் பகுதியில், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள், அங்குள்ள மெட்ரோ நிலையத்துக்கு அருகில் கூடி போராட்டம் நடத்தினர். இதைக் கண்டித்த கபில் மிஸ்ரா, ``ஷாகின் பாக் போல டெல்லியின் மற்றொரு சாலையும் மறைக்கப்பட்டுவிட்டது. இப்படியே போனால், பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாது’ என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில், `ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதே ஜாஃப்ராபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’ என ட்விட்டரிலேயே அழைப்பு விடுத்தார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் வந்தனர். எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுவே மோதலாக மாறியது. பின்னர், இரண்டு நாள்கள் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வந்தன.

கபில் மிஸ்ரா
கபில் மிஸ்ரா
facebook

இந்த வன்முறைகள் தொடர்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஹர்ஷ் மந்தர், பரா நக்வி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் பா.ஜ.க-வைச் சேர்ந்த அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கபில் மிஸ்ரா பேசிய வீடியோவை நீதிபதிகள் ஒளிபரப்பச் சொல்லியுள்ளனர்.

பேச்சைக் கேட்ட நீதிபதிகள், ``பா.ஜ.க தலைவர்கள் இவர் பேசிய கருத்துகளை கவனித்திருப்பார்கள் என நினைக்கிறோம். இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க யாரையாவது அணுக வேண்டிய அவசியம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ``சட்ட அதிகாரியாக இந்தப் பா.ஜ.க தலைவர்கள் 3 பேர் மீதும் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டுமா அல்லது நேரம் இருக்கிறதா என்று சொல்லுங்கள்?" என்று கோபத்துடன் பேசியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் தற்போது கபில் மிஸ்ராவுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

`நீ இந்துவா... முஸ்லிமா; ஆடையைக் கழற்று..!'- டெல்லி வன்முறையில் பத்திரிகையாளரின் `திகில்' அனுபவம்
அடுத்த கட்டுரைக்கு