Published:Updated:

ஹசன் முகமது ஜின்னா: கவனம்பெற்ற தமிழ்நாடு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நியமனம்! - யார் இவர்?

ஸ்டாலின் - ஜின்னா
ஸ்டாலின் - ஜின்னா

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் நியமனத்தைப்போலவே தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிபதிகளின் ஒப்புதலுடன் நியமிக்கப்படுபவர் என்பதால் அந்தப் பதவி கூடுதல் கவனம் பெறுகிறது. யார் இந்த ஹசன் முகமது ஜின்னா?

தி.மு.க அரசு பதவியேற்றது முதல் நிர்வாகத்திலும், அவற்றை நிர்வகிக்கும் அதிகாரிகள் நியமனத்திலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தலைமைச் செயலாளராக இறையன்பு, முதல்வர் ஆலோசனைக்குழுவில் உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்தது தொடங்கி மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவில் பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோரை நியமித்ததுவரை தமிழக அரசின் நடவடிக்கைகளுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் எழுந்துள்ளன. இவற்றைப்போல நீதித்துறையிலும் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அரசு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் நியமனத்திலும் மிகுந்த கவனத்துடனேயே செயல்பட்டுவருகிறது என அனைவரும் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் தமிழக அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னா நியமனத்தையும் பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

ஹசன் முகமது ஜின்னா
ஹசன் முகமது ஜின்னா

நீதித்துறையின் மற்ற பிரிவுகளைத் தமிழக அரசே நியமனம் செய்துகொள்ளலாம் என்றாலும், குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நியமனத்தில் அவர்மீது எந்தக் குற்றமும் வழக்கும் இல்லை எனவும், அவரது நடத்தைகள் குறித்தும் நீதிபதிகளின் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்னரே தலைமை குற்றவியல் வழக்கறிஞரை அரசு நியமித்துக்கொள்ள முடியும்.

வெ.இறையன்பு: தமிழ் உணர்வாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் - தலைமைச் செயலர் கடந்து வந்த பாதை!

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஹசன் முகமது ஜின்னா 1977-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்திலுள்ள அத்திக்கடை கிராமத்தில் பிறந்தவர். 1996-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்டபோது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலையை அமைக்கக் காரணமாக இருந்தவர். மேலும், எத்திராஜ் கல்லூரி மாணவி ஷரிகா ஷா ஈவ் டீசிங் செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஆஜராகி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்ததோடு, ஈவ் டீசிங் தொடர்பாக முறையான சட்டம் உருவாகவும் காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா.

மெரினா கண்ணகி சிலை
மெரினா கண்ணகி சிலை

யுனெஸ்கோவின் ஆசிய - பசிபிக் மண்டல மையம் உட்பட பல்வேறு முக்கிய குழுக்களில் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். மற்ற துறைகளைப்போலவே குற்றவியல் துறையிலும் அரசின் நியமனத்துக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு எந்த அளவுக்கு ஹசன் முகம்மது ஜின்னா நியாயமாக நடந்துகொள்கிறார் என்பது அவரது செயல்பாடுகள் மூலமே அறிய வரும். மக்கள் பக்கம் நின்று சரியான தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே தற்போது வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னாவிடம் அனைவரும் எதிர்பார்ப்பது.

அடுத்த கட்டுரைக்கு