Published:Updated:

'ஆன்லைன் ரம்மி வழக்கில் தப்பாட்டம் ஆடியது யார்?' - முட்டிமோதும் 'அதிமுக - திமுக' பின்னணி அரசியல்

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களின் பின்னணியில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான பணப்புழக்கம் இருந்துவருகிறது. எனவே, விளையாட்டுக்கான தடையை நீக்குவதற்கு, அதிகாரவர்க்கங்களை வசப்படுத்துவதில் ஆரம்பித்து சட்டப்போராட்டம் வரையிலாக எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.

'ஆன்லைன் ரம்மி வழக்கில் தப்பாட்டம் ஆடியது யார்?' - முட்டிமோதும் 'அதிமுக - திமுக' பின்னணி அரசியல்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களின் பின்னணியில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான பணப்புழக்கம் இருந்துவருகிறது. எனவே, விளையாட்டுக்கான தடையை நீக்குவதற்கு, அதிகாரவர்க்கங்களை வசப்படுத்துவதில் ஆரம்பித்து சட்டப்போராட்டம் வரையிலாக எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.

Published:Updated:
ஆன்லைன் ரம்மி

`ஆன்லைன் ரம்மி' விளையாட்டுக்கான தடை விலகியதற்குக் காரணம், 'தி.மு.க அரசின் அலட்சியமே' என்று அ.தி.மு.க-வும், `சட்டத்தை சரிவர இயற்றாத அ.தி.மு.க அரசே காரணம்' என தி.மு.க-வும் வழக்கம்போல் குற்றச்சாட்டுகளால் ஒருவரையொருவர் அடித்துக்கொள்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்த இளைஞர்கள் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகின. இதையடுத்து, 'இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்துவரும் இது போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை அரசே ஏன் தடை செய்யக் கூடாது' என மாநில அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து கடந்தகால அ.தி.மு.க அரசு, 2020-ம் ஆண்டு, நவம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக ஓர் அவசர தடைச் சட்டத்தைப் பிறப்பித்தது. இந்தச் சட்டத்தால் பாதிப்புக்குள்ளான ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தடையை விலக்கக் கோரி நீதிமன்றப் படியேறின.

நீதிமன்ற விசாரணையின்போது, `லட்சக்கணக்கான இளைஞர்களின் பொருளாதாரத்தைப் பறித்துக்கொள்வதோடு அவர்களது வாழ்வையும் பலிகொண்டுவரும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்குமாறு பொதுமக்களும் சில அமைப்புகளும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது' என்றது அரசுத் தரப்பு.

ஆனால், எதிர்த் தரப்பினரோ `ஆன்லைன் விளையாட்டுகளால், இளைஞர்கள் பலர் உயிரை இழக்க நேரிடுவதால், தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தோம் என அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. அப்படியென்றால், ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிற ஜல்லிக்கட்டு விளையாட்டிலும்கூட இளைஞர்கள் பலர் இறக்க நேரிடுகிறதுதானே...' என்று வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில், `இந்த விவகாரத்தில், தடைச் சட்டம் என்பது பொத்தாம்பொதுவாக இருக்கக் கூடாது. உரிய விதிமுறைகளுடன் இயற்றப்பட வேண்டும். அப்படி புதிதாகச் சட்டம் இயற்ற அரசுக்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான தற்போதைய தடைச் சட்டத்தை நீக்குகிறோம்' எனத் தீர்ப்பளித்தது.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

இதையடுத்து சுறுசுறுப்பான ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், மீண்டும் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில், பல்வேறு அதிரடிச் சலுகைகளை அறிவித்து கடைவிரிக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால், அரசியல் அரங்கிலோ, `தி.மு.க அரசு, இந்த வழக்கில் உரியமுறையில் வாதாடாமல், அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதாலேயே இப்படியோரு தீர்ப்பு கிடைத்திருக்கிறது. `விடியலைத் தருவோம்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இளைஞர்களை இருட்டிலே தள்ளிவிட்டார்கள்' என்று அ.தி.மு.க-வின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொதிப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க தரப்பில் பதில் அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் ரகுபதி, `தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோதே, ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று அப்போதைய அ.தி.மு.க அரசுக்கு கோரிக்கை வைத்தது. இந்தநிலையில், அவசரகதியில் அ.தி.மு.க அரசு தடைச் சட்டத்தை இயற்றிவிட்டதாலேயே, நீதிமன்றம் இந்தச் சட்டத்தை நீக்கியுள்ளது. எனவே, விரைவில் உரிய விதிமுறைகளுடன்கூடிய புதியதொரு தடைச் சட்டத்தை தி.மு.க அரசு இயற்றும்' என்றார்.

இந்த விவகாரத்தில், உண்மையிலேயே 'விளையாடியவர்கள் யார்...' என்றக் கேள்வியோடு பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

''ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு பிரச்னை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமானது அல்ல.... நாடு முழுவதுக்குமான பிரச்னையும்கூட. காசுவைத்து விளையாடுகிற இது போன்ற விளையாட்டுகளை 'கேம் ஆஃப் ஸ்கில்' (Game of Skill) என்று சொல்லிக்கொள்கிறார்கள். அது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில், இதே போன்ற வாதத்தை முன்வைத்துத்தான் கடந்த காலத்தில் குதிரைப் பந்தயத்துக்கான தடையையும் விலக்கிக்கொண்டார்கள். குதிரையேற்றம் செய்வதற்கு உண்மையிலேயே திறமை வேண்டும்தான். அதை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால், குதிரை மீது பந்தயம் கட்டிப் பணம் ஜெயிப்பதென்பது எந்த வகையில் திறமையில் சேரும்?

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களின் பின்னணியில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான பணப்புழக்கம் இருந்துவருகிறது. இவ்வளவு பெரிய வருமானம் கொடுக்கக்கூடிய துறையாக இது இருப்பதால், இந்த நிறுவனங்களெல்லாம் விளையாட்டுக்கான தடையை நீக்குவதற்கு, அதிகாரவர்க்கங்களை வசப்படுத்துவதில் ஆரம்பித்து சட்டப் போராட்டம் வரையிலாக எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்தான். இந்தச் சூழ்நிலையில், இந்தப் பண பலத்தை முறியடித்து, தடையை நீட்டிக்கச் செய்ய வேண்டுமானால், சட்டத்தின் எந்தவோர் இடத்திலும் இடைவெளி இல்லாதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

'இயற்றப்பட்ட சட்டம் உரிய விதிமுறைகளை உள்ளடக்கியதாக இல்லை' என்று சொல்லி நீதிமன்றம் தடையை விலக்கியிருக்கிறது. எனவே, அ.தி.மு.க அரசுதான் சரிவர சட்டம் இயற்றவில்லை என்று தி.மு.க குற்றம் சாட்டுவது உண்மையாகவும் இருக்கலாம். மற்றபடி அதுபற்றிக் கருத்து சொல்வதற்கு நான் சட்ட நிபுணர் கிடையாது.

'அரசுத் தரப்பில் உரிய முறையில் வாதத்தை முன்வைத்து வாதாடத் தவறிவிட்டார்கள்' என்று அ.தி.மு.க-வினர் சொல்வதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. தீர்ப்பு வெளியான நாளன்றுகூட, அரசுத் தரப்பில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மட்டுமே அமர்ந்திருக்கிறார். ஆனால், எதிர்த் தரப்பிலோ புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இடம்பெற்றிருக்கிறார்கள்... இது எப்படிச் சரி வரும்? எனவே, அ.தி.மு.க., தி.மு.க என இந்த இரண்டு கட்சிகள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

இப்போது, தமிழக அரசு சொல்லியிருப்பதுபோல், புதிதாக ஒரு சட்டத்தை, எந்தவிதப் பழுதுமின்றி இயற்ற வேண்டும் அல்லது மேல்முறையீடு செல்ல வேண்டும். லாட்டரியை எப்படித் தடை செய்தோமோ அதேபோல், இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழிப்பதற்கும் கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் ஓரணியில் திரண்டு நின்று எதிர்த்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்!'' என்கிறார் அழுத்தமாக.

ராதாகிருஷ்ணன் - ரவீந்திரன் துரைசாமி
ராதாகிருஷ்ணன் - ரவீந்திரன் துரைசாமி

அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமியும் இதே கருத்தை முன்மொழிகிறார். அவர் பேசும்போது, ''அ.தி.மு.க., தி.மு.க என இரண்டு அரசுகளுமே இந்த விவகாரத்தில் உண்மையோடுதான் செயல்பட்டுவருகின்றன என்றுதான் நான் நினைக்கிறேன். சட்டத்தை இயற்றும்போது, சில விதிகளை அ.தி.மு.க அரசு கவனிக்கத் தவறியிருக்கலாம். மற்றபடி அவர்களுக்கும் இதில் எந்தவித உள்நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. தி.மு.க தரப்பிலும்கூட, ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யக் கோரி எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சொன்னார்கள். இப்போதும் புதிய தடைச் சட்டத்தை இயற்றப்போவதாக அறிவித்துவிட்டார்கள்! எனவே, விரைவில் தடைச் சட்டம் மீண்டும் அமலுக்கு வந்துவிடும் என்று நம்பலாம்!'' என்கிறார்.