மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட மேகாலயாவில் வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் அங்கு, தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில், காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்குள்ள மாநிலங்களில் ஒன்றாக மேகாலயா இருந்துவருகிறது. 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 21 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தபோதிலும், அதனால் ஆட்சியமைக்க முடியவில்லை.

நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி 20 தொகுதிகளைப் பிடித்தது. பா.ஜ.க-வால் இரண்டு இடங்களிலேயே வெற்றிபெற முடிந்தது. அங்கு, தேசிய மக்கள் கட்சியின் தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதில், பா.ஜ.க-வும் இடம்பெற்றது. ஒருங்கிணைந்த ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மலைவாழ் மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அந்த அரசில் இடம்பெற்றன.
கடந்த ஓராண்டாகவே பா.ஜ.க-வுக்கும் முதல்வர் கான்ராட் சங்மாவுக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. ‘பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது’ என்று கான்ராட் சங்மா அறிவித்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு கான்ராட் சங்மாவின் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். இந்த நிலையில், வரும் 27-ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 10-15 தொகுதிகளை பா.ஜ.க பிடிக்கும் என்று அதன் மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மௌரி கூறியிருக்கிறார்.

இன்னொரு புறம், மேகாலயாவில் கணிசமான இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முனைப்புக் காட்டிவருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 21 எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸ் பெற்றிருந்த நிலையில், அவர்களில் பலரை திரிணாமுல் காங்கிரஸ் தன் பக்கம் இழுத்துவிட்டது. இந்த நிலையில், சமீபத்தில் மேகாலயாவுக்குச் சென்ற மம்தா பானர்ஜி, ‘மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது’ என்று குற்றம்சாட்டினார்.
மேலும், அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, “மேகாலயா மாநிலம் அதன் மண்ணின் மைந்தர்களால் ஆளப்பட வேண்டும். அதற்கு உதவ திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது.
மேகாலயாவில் பெண்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை திரிணாமுல் காங்கிரஸ் நோக்கமாகக்கொண்டிருக்கிறது. அதற்காக, மேகாலயாவின் ஒவ்வொரு இல்லத்தை நிர்வகிக்கும் பெண்கள் கணக்குகளிலும் மாதம் ரூ.1,000 நேரடியாகச் செலுத்தப்படும்” என்றார். பெரும் முயற்சிகளை மம்தா மேற்கொண்டாலும், மேகாலயா மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்கு இருப்பதால்தான், 21 தொகுதிகளில் கடந்த முறை ஜெயிக்க முடிந்தது. ஆனாலும், காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. அதன் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் வேறு கட்சிகளுக்குத் தாவிவிட்டனர். கடந்த தேர்தலின்போது இருந்த அதே செல்வாக்கு தற்போதும் காங்கிரஸுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனாலும், காங்கிரஸின் செல்வாக்கு பெரிதாகச் சரிந்துவிடவில்லை.

இந்தச் சூழலில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்கும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார். மேகாலயாவில் 14 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கிறது. அந்த வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய அறிக்கையை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுவோம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
இந்தத் தேர்தலில், பா.ஜ.க-வும் திரிணாமுல் காங்கிரஸும் போட்டியைக் கொடுக்கும் கட்சிகளாகக் களத்தில் இருந்தாலும், முந்தைய தேர்தலைப் போலவே, தேசிய மக்கள் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவ வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.