Published:Updated:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு... வரியைக் குறைக்கவேண்டியது மத்திய அரசா, மாநில அரசா?

பெட்ரோல் நிலையம்

ஐந்து மாநிலத் தேர்தலையொட்டி நூறு நாள்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிந்த பிறகு தினமும் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கவேண்டியது மத்திய அரசா, மாநில அரசா?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு... வரியைக் குறைக்கவேண்டியது மத்திய அரசா, மாநில அரசா?

ஐந்து மாநிலத் தேர்தலையொட்டி நூறு நாள்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிந்த பிறகு தினமும் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கவேண்டியது மத்திய அரசா, மாநில அரசா?

Published:Updated:
பெட்ரோல் நிலையம்

உத்தரப்பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தலுக்கு முன்பாக, நூறு நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுகள் கடந்த மார்ச் 10-ம் தேதி வெளியாகின. அதன் பிறகு, சிறிய இடைவெளிக்குப் பிறகு தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டெ வந்தது.

பெட்ரோல்
பெட்ரோல்

``பெட்ரோல், டீசல் விலையை அரசு நிர்ணயிப்பதில்லை. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தே, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது” என்று மத்திய அரசு சொல்லிவரும் நிலையில், தேர்தல் நேரத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியை எதிர்க் கட்சிகள் தொடர்ந்து எழுப்பிவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெட்ரோலுடன் போட்டி போட்டுக்கொண்டு டீசல் விலையும் உயர்ந்துகொண்டிருக்கிறது. இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 110.85 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.100.94 ஆகவும் இருக்கிறது. இதனால், காய்கறிகள், பழங்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துகொண்டிருக்கிறது. பல்வேறு வரிகளை அளவுக்கு அதிகமாக மத்திய அரசு விதிப்பதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சித்துவருகிறார்கள்.

பெட்ரோல்
பெட்ரோல்

ஆனால், `பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள்தான் காரணம்’ என்று பா.ஜ.க அல்லாத கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களில பா.ஜ.க-வினரும், பா.ஜ.க ஆதரவாளர்களும் கூறிவருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையில் மூன்று ரூபாயைக் குறைத்தது. டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்று தி.மு.க அரசை அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் விமர்சித்துவருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள்தான் காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பெட்ரோல் விலை மீது மாநில அரசு வாட் வரியை விதிக்கிறது. வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளைத் தாம் கேட்டுக்கொண்டதாகவும், மாநில அரசுகள் வாட் வரியைக் குறைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ள பிரதமர், இதுதான் பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் மார்ச் 27-ம் தேதி பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது திடீரென பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு குறித்து பிரதமர் பேச ஆரம்பித்தார்.

மோடி
மோடி

“பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் குறைப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநில அரசுகளும் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று அப்போது மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், சில மாநிலங்களின் அரசுகள் வரிகளைக் குறைக்கவில்லை” என்றார் பிரதமர் மோடி.

மேலும் பேசிய மோடி, ”தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் மீதான வரிகள் குறைக்கப்படவில்லை. அதனால், அந்த மாநிலங்கள் விலை உயர்வால் ஏற்படும் சிரமங்களைச் சந்திக்கின்றன. அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பது, அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதனால், அண்டை மாநிலங்களும் பாதிக்கப்படுகின்றன” என்றார்.

பிரதமரின் குற்றச்சாட்டை மறுத்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் , “முதல்வர்களுடனான சந்திப்பில், கடந்த நவம்பரில் மக்கள் மீதான பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை பிரதமர் மோடி குறிப்பிட்டார். அப்போது, ‘சில மாநிலங்கள் ஒரே நேரத்தில் வரியைக் குறைத்திருந்தாலும், சில மாநிலங்கள் இந்த நன்மையை மக்களுக்கு வழங்கவில்லை. மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு செவிசாய்க்கவில்லை. அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து வரிச்சுமையுடன் இருக்கிறார்கள்’ என்று பிரதமர் மோடி கூறினார்.

ஆனால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன்பாகவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெட்ரோல் மீதான வாட் வரியை ஸ்டாலின் தலைமையிலான அரசு குறைத்தது. அந்தக் குறைப்பின் மூலம் தமிழக மக்களுக்கு லிட்டருக்கு ரூ.3 குறைவாக நிவாரணம் கிடைத்தது. இதனால் மாநில அரசுக்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டது. மக்கள் மீதான சுமையைக் குறைக்க இந்த வரி குறைப்பு செய்யப்பட்டது.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

2014-ம் ஆண்டு, பிரதமர் மோடி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மத்திய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமானம் உயரவில்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதேநேரத்தில், மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியைக் குறைக்கிறது. 2020-21 ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.3,89,622 கோடியாக இருந்தது. இது 2019-20-ம் ஆண்டில் இருந்த ரூ.2,39,452 கோடியைவிட 63 சதவிகிதம் அதிகம்.

ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்த பிறகு, மாநிலங்கள் தங்கள் சொந்த வரிகளை வசூலிப்பதற்கும், வருவாயை உயர்த்துவதற்கும் கணிசமான அதிகாரங்களை இழந்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு கூடுதலாக நிறைய செலவு செய்யவேண்டியிருக்கிறது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி இழப்பீடு முறை 30.6.2022 அன்று முடிவடைகிறது. இழப்பீடு முறையை நீட்டிக்குமாறு பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தத் தெளிவும் இல்லை. மாநில அரசுகளால் மேலும் வரி குறைப்பு செய்ய இயலாது. அது மாநில அரசின் பொருளாதாரத்துக்கு உகந்தது அல்ல. இதை மத்திய அரசு கவனிக்கும் என்று நம்புகிறோம்” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார்.

ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்குப் பிறகு மாநில அரசுகளின் நிதியாதாரம் சுருங்கிவிட்டது. இன்னொருபுறம், இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசின் வருவாய் அதிகரித்துள்ளது என்பதைப் புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. மத்திய அரசு சொல்வதற்கு முன்பாகவே, தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டுவிட்டது. இன்னும் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால், மாநில அரசு நிர்வாகத்தை எப்படி நடத்தும் என்ற கேள்வியை மாநில அரசின் தரப்பில் எழுப்புகிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மாநில அரசுகளுக்கு வந்துகொண்டிருந்த பெரும்பாலான வரிகள் ஜி.எஸ்.டி மூலமாக மத்திய அரசுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் பலர் வலியுறுத்துகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism