Published:Updated:

அ.தி.மு.க பொதுச் செயலாளர் அதிகாரம், அரசின் துணைச் செயலாளருக்கு போனது ஏன்?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியின் அதிகாரம், அரசின் துணைச் செயலாளருக்கு மடை மாற்றப்பட்டதா? எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கொண்டு வந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

பொதுச் செயலாளர் அறைக்கு வெளியே ஜெயலலிதா
பொதுச் செயலாளர் அறைக்கு வெளியே ஜெயலலிதா ( விகடன் )

`கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' - அ.தி.மு.க பைலா-வின் 20-வது விதி இது.

அ.தி.மு.க பைலா
அ.தி.மு.க பைலா

தமிழகத்தில் அ.தி.மு.க-வில் மட்டும்தான் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்கான வாக்குரிமை, கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. 'பொதுக்குழு உறுப்பினர்களில் இருந்து தலைமை தேர்வு செய்யப்படுவது சரியாக இருக்காது' என எண்ணிய எம்.ஜி.ஆர், 'கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என்கிற விதியை கட்சியின் பை-லாவில் கொண்டுவந்தார்.

இந்த விதியின்படிதான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அ.தி.மு.க -வின் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்டு வந்தார்கள். இந்த சட்டதிட்ட விதிக்கு இன்னொரு பெருமையும் இருக்கிறது. கட்சியின் எந்த விதியையும் உருவாக்கவோ, திருத்தம் செய்யவோ, நீக்கவோ பொதுக்குழுவுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், `கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என்கிற விதியை மாற்றவோ திருத்தவோ முடியாது. இந்த ஏற்பாட்டை எம்.ஜி.ஆர் செய்துவிட்டுப் போனார். ஜெயலலிதாவும் அதனைப் பின்பற்றிவந்தார்.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
விகடன்
`ஈழத்தமிழர்' துரோகம், பிண அரசியல்... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.கவின் பதில் என்ன?

அ.தி.மு.க-வின் அதிகாரம் அனைத்தும் 'பொதுச் செயலாளர்' பதவிக்குத்தான் உண்டு. இந்த பொதுச் செயலாளரைவிட கட்சிக்கே சம்பந்தம் இல்லாத 'துணைச் செயலாளர்' ஒருவருக்குதான் அதிகாரம் உண்டு என்பதை இப்போது நிரூபித்திருக்கிறது, 'குடியுரிமை திருத்தச் சட்டம்' குறித்து நடந்த வாக்கெடுப்பு.

`கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என எம்.ஜி.ஆர் கொண்டுவந்த விதியை ஜெயலலிதா மாற்றவில்லை. பன்னீரும் எடப்பாடியும் மாற்றிவிட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிவிட்டார்கள். சரி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்காவது அதிகாரம் இருக்கிறதா என்றால், அவர்களுக்கும் இல்லை என்பது போல சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. முதல்வர் அலுவலகத்தில் இருக்கிற ஒரு அரசு துணைச் செயலாளருக்குத்தான் அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதைப் போட்டுடைத்திருக்கிறார், அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.

பொதுச் செயலாளர் அறையில் இருந்து வெளியே வரும் ஜெயலலிதா
பொதுச் செயலாளர் அறையில் இருந்து வெளியே வரும் ஜெயலலிதா
விகடன்

"தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'குடியுரிமை மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்' என்றார்'' என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.

மூன்று முறை எம்.எல்.ஏ, சட்டமன்ற காங்கிரஸ் கொறடா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், மாநிலங்களவை எம்.பி, ராஜ்யசபா அ.தி.மு.க துணைத் தலைவர் என இத்தனை பதவிகளை வகித்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், மூத்த அரசியல்வாதி. அவர் சொன்ன இந்தத் தகவல், அ.தி.மு.க-வின் அடித்தளத்தையே தகர்த்திருக்கிறது. “அ.தி.மு.க எம்.பி-யே இப்படிச் சொல்கிறார் என்றால், அ.தி.மு.க யார் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார், தி.மு.க பொருளாளர் துரைமுருகன்.

ராஜ்யசபாவில் எஸ்.ஆர்.பலசுப்பிரமணியம்
ராஜ்யசபாவில் எஸ்.ஆர்.பலசுப்பிரமணியம்
குடியுரிமை மசோதா... எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கொள்கைக்கு உலை... எடப்பாடி, பன்னீர் கொடுத்த விலை!

இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''ஒரு மசோதாவுக்கு வாக்களிப்பது அ.தி.மு.க தலைமை எடுக்கவேண்டிய கொள்கை முடிவு. அதை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்து, ஒருவர் மூலம் தெரிவிக்கலாமே தவிர, தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர் ஒருவர் மூலம் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் போன்ற அனுபவமிக்க மாநிலங்களவை உறுப்பினரிடமே இப்படித் தெரிவித்திருப்பது, மிகுந்த வேதனை தருகிறது. எஸ்.ஆர்.பி அவர்களுக்கே இந்த நிலைமை என்றால், அ.தி.மு.க-வில் உள்ள மற்ற எம்.பி-க்கள் இந்த மசோதாவில் யாருடைய நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து வாக்களித்துள்ளார்கள் என்பதை யூகிக்க முடிகிறது'' என்று சொல்லியிருக்கிறார்.

குடியுரிமை மசோதாவை பெரும்பாலான எதிர்க் கட்சிகள் எதிர்ப்பதற்குக் காரணமே சிறுபான்மையினர், ஈழத் தமிழர்கள் ஆகியோரை சட்ட வரம்புக்குள் கொண்டு வராததுதான். இந்த மசோதாவை ஆதரித்து வாக்களிப்பது என்கிற அ.தி.மு.க-வின் முடிவை, அரசு துணைச் செயலாளர் ஒருவர் எடுக்கிறார் எனும் போது, அ.தி.மு.க-வின் தலைமை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ''மத்திய பி.ஜே.பி அரசின் ஏஜெண்டுகளாக தலைமைச் செயலகத்தில் அமர வைக்கப்பட்டிருக்கும் ஒரு சில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா'' எனச் சந்தேகம் எழுப்புகிறார் துரைமுருகன்.

துரைமுருகன்
துரைமுருகன்
விகடன்

அரசின் துணைச் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதன் மூலம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லையா? கட்சியின் பொதுச் செயலாளரைவிட அரசின் துணை செயலாளர்தான் அதிகாரம் பொருந்தியவர் எனச் சொல்லி, எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வீற்றிருந்த பொதுச் செயலாளர் பதவியை அசிங்கப்படுத்திவிட்டார்கள். அதில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. இவர்கள் இருவரும் வழிநடத்தி வந்த 'பொதுச் செயலாளர்' பதவியை ஒழித்து, அந்த பதவியை தங்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனப் பிரித்துக் கொண்ட பன்னீரும் எடப்பாடியும் கட்சிக்கே தொடர்பில்லாத துணைச் செயலாளருக்கு அதிகாரத்தைத் தூக்கிக் கொடுத்த அவலத்தை ரத்தத்தின் ரத்தங்கள்தான் தாங்கிக் கொள்ள வேண்டும்.

கட்சியின் அதிகாரத்தை அரசின் துணை செயலாளருக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பழைய சம்பவம் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஜெயலலிதாவுடன் பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவுடன் பன்னீர்செல்வம்
விகடன்

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அ.தி.மு.க-வின் அமைப்பு தேர்தல்கள் நடத்தப்படும். கடைசியாக 2014-ம் ஆண்டு உள்கட்சித் தேர்தல் நடைபெற்ற போது 'பொதுச் செயலாளர்' பதவிக்கு ஜெயலலிதா போட்டியிட்டார். ஜெயலலிதா சார்பில் வேட்புமனுவைப் பன்னீர்செல்வம்தான் தேர்தல் அதிகாரியாக இருந்த அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியனிடம் 2014 ஆகஸ்ட் 20-ம் தேதி வழங்கினார். ஜெயலலிதாவின் வேட்புமனுவை வழிமொழிந்து பன்னீர்செல்வம் கையெழுத்தும் போட்டிருந்தார். ஜெயலலிதா மீண்டும் அ.தி.மு.க பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செலுத்தி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 2,467 பேர் விருப்ப மனு அளித்தார்கள். 2,467 பேரில் பன்னீர்செல்வமும் எடப்பாடியும் அடக்கம். வேறுயாரும் மனுத் தாக்கல் செய்யாததால் 7-வது முறையாகப் போட்டியின்றி பொதுச் செயலாளராக அன்றைக்குத் தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா.

பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டபோது
பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டபோது

பன்னீர்செல்வம் வழிமொழிந்து... வேட்புமனுவைத் தாக்கல் செய்து... விருப்ப மனு அளித்த உன்னதமான பொதுச் செயலாளர் பதவிக்கான அதிகாரத்தை முத்துமாரியம்மன் கோயில் பிரசாரம் போல அரசின் துணைச் செயலாளருக்குத் தூக்கிக் கொடுத்திருக்கிறார். தலைவி இருந்து உத்தரவிட்ட பதவியில் சசிகலாவே உட்காரக் கூடாது என 'தர்மயுத்தம்' நடத்திய பன்னீர்செல்வம், இப்போது அரசின் துணைச் செயலாளரை அமரவைத்துவிட்டார். ''அ.தி.மு.க அதன் தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா? அல்லது பி.ஜே.பி அரசின் ஏஜெண்டுகளாக தலைமைச் செயலகத்தில் இருக்கும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா? என துரைமுருகன் கேட்ட கேள்விக்குப் பதில் இல்லை.

பன்னீரும் எடப்பாடியும்
பன்னீரும் எடப்பாடியும்

எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் சுட்டிக் காட்டும் அரசின் துணைச் செயலாளர் முதல்வர் எடப்பாடி அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த துணைச் செயலாளர், முதல்வரின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திடம் பேசினார் என வைத்துக் கொண்டால் இங்கே எடப்பாடியின் கைதான் ஓங்கியிருக்கிறது. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் டம்மி ஆக்கப்பட்டாரா? முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் முதல்வரின் உத்தரவுக்குத்தான் கட்டுப்படுவார்கள். அதன்படி எடப்பாடி உத்தரவுக்கு அந்த துணை செயலாளர் கட்டுப்பட்டு நடந்திருந்தால் பன்னீர்செல்வத்துக்குக் கட்சிக்குள் என்ன அதிகாரம் இருக்கிறது? இல்லை நேரடியாக மத்திய பி.ஜே.பி. அரசின் கட்டளையைச் சொல்லக் கூடிய இடத்தில் அந்த துணைச் செயலாளர் இருந்திருந்தால் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் கட்சிக்குள் எந்த அதிகாரமும் இல்லை என்பதுதான் அர்த்தம் ஆகிறது.

ஜெயலலிதா
ஜெயலலிதா
விகடன்

''நிர்ப்பந்தம் காரணமாகக் குடியுரிமை மசோதாவை ஆதரித்தோம்'' - இதைச் சொன்னதும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்தான்.