Published:Updated:

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

ஓ.பி.எஸ்.  இ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ். இ.பி.எஸ்

- கண்டுபிடிக்கலாம் வாங்க

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

- கண்டுபிடிக்கலாம் வாங்க

Published:Updated:
ஓ.பி.எஸ்.  இ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ். இ.பி.எஸ்
மிழக சட்டசபைத் தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுடன் மல்லுக்கட்டுவதற்குமுன், கட்சிக்குள்ளேயே ‘போர்’ முற்றியிருக்கிறது அ.தி.மு.கவில்! அக்கட்சி சார்பாக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுவது யார் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே சர்ச்சை சரவெடி வெடித்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்..? கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்கோடு அலசுவோம்!
பணிவு பன்னீர்
பணிவு பன்னீர்

`முதல்வன்' படம் பார்த்தபோது தமிழக மக்கள் மத்தியில் எழுந்த கேள்வி, `இப்படியெல்லாம் ஒருவர் முதல்வராக முடியுமா?' என்பது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானபோதோ, `இவர்கூட முதல்வராக முடியுமா?' என்றே விவாதங்கள் ஓடின. ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எனப் பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாகத்திறமை, தலைமைப்பண்பு, மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை முழுமையாகவோ பெரும்பான்மையாகவோ பெற்றவர்கள்தாம் அதற்கு முன்பு முதல்வராக இருந்தவர்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ பெரியகுளத்தில் டீக்கடை வைத்திருந்த சாதாரண அ.தி.மு.க தொண்டர். 2001-ல்தான் முதன்முறையாக அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர். ஆனால், முதல்முறை எம்.எல்.ஏ ஆனவருக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது தமிழக வரலாற்றில் அதிசயம்தான். அதற்கான காரணம், ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறித்த டான்சி வழக்கின் தீர்ப்பு. சட்டத்தடைகள் நீங்கியபிறகு மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டும்' என்பார்கள். ஆனால் முதல்வராகும் அதிர்ஷ்டம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூன்றுமுறை கதவைத் தட்டியது. இரண்டாம் முறை பன்னீர்செல்வம் முதல்வராகும் வாய்ப்பையும் நீதிமன்றத் தீர்ப்புதான் வழங்கியது. ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி' என்று 2014-ல் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு, அவரை பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைத்ததால் முதல்வரானார் ஓ.பி.எஸ்.

விசுவாசி எடப்பாடி
விசுவாசி எடப்பாடி

சட்டப்படி மட்டுமே பன்னீர்செல்வம் முதல்வர். `மக்களின் முதல்வர் ஜெயலலிதா' என்றே ஜெயா டிவியில் செய்தி வாசிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வமும் சட்டமன்ற முதல்வர் அறையில் முதல்வர் நாற்காலியில் அமரவில்லை. மேல்முறையீட்டுக்குப் பின் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். இரண்டுமுறை முதல்வராக இருந்தபோதும் கடைசிவரை அவர் ஜெயலலிதாவிடம் பணிவு பன்னீர்செல்வமாகவே இருந்தார். பாபா ராம்தேவுக்கே சவால் விடும் வகையில் வளைந்து குனிந்து வணக்கம் வைப்பது, மேலே பறக்கும் ஹெலிகாப்டருக்குக் கும்பிடு போடுவது முதல் கீழே இருக்கும் கார் டயரைத் தொட்டு வணங்கியதுவரை விதவிதமாய் விசுவாச வித்தைகள் காட்டினார் ஓ.பன்னீர்செல்வம்.

2016 டிசம்பர் 5-ல் ஜெயலலிதா இறந்ததும் மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது வரலாற்றுச்சிறப்புமிக்க இரு சம்பவங்கள் நடந்தன. தமிழக வரலாற்றில் முதன்முறையாக தலைமைச்செயலாளர் அறையிலேயே ரெய்டு நடந்தது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து மகத்தான மக்கள் போராட்டம் வெடித்தது. டெல்லி சென்ற பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியைப் பெற்று `ஜல்லிக்கட்டு நாயகன்' என்று அவர் ஆதரவாளர்களால் அழைக்கப்பெற்றார். ஆனால் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக அறவழியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் வன்முறையில் முடிந்ததும் காவல்துறையே ஆட்டோக்களுக்குத் தீ வைத்து வெறியாட்டம் நடத்தியதும் பன்னீர்செல்வம் ஆட்சியில் விழுந்த அழிக்க முடியாத கரும்புள்ளி.

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

இரண்டே மாதங்கள்தான். அதுவரை போயஸ்கார்டன் திரைமறைவில் செயல்பட்டு வந்த சசிகலா முதன்முதலாக அரசியல் அரங்கத்துக்குள் வந்தார். ஜெயலலிதாவைப் போலவே நடையுடை பாவனைகளை மாற்றி நவரசங்களையும் பொழிந்தார். தமிழக முதல்வராக சசிகலா அ.தி.மு.க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் பதவி விலகவேண்டிய நிலை. ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற ஓ.பி.எஸ் 40 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டார். ஜெயலலிதா ஆன்மா தன்னுடன் பேசியதாகவும் தன்னை முதல்வர் பதவியிலிருந்து விலக சசிகலா நிர்பந்திக்கிறார் என்றும் தெரிவித்த பன்னீர்செல்வம், சசிகலா குடும்ப ஆதிக்கம் ஒழியும்வரை தர்மயுத்தம் தொடரும் என்றார். சசிகலா மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்குப் போராளி இமேஜைப் பெற்றுத்தந்தது.

கூவத்தூர் குதிரைபேரக் காட்சிகள் நடுவே, சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் `ஜெயலலிதாவும் சசிகலாவும் குற்றவாளி' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, சசிகலாவும் சிறைக்குச் செல்லும் நேரம் வந்தது. தினகரனுக்கும் தனக்கும் விசுவாசியாக இருப்பார் என்று எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. மத்திய பா.ஜ.க அரசு கொடுத்த நிர்பந்தம், கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நிலை பன்னீர்செல்வத்தையும் பழனிச்சாமியையும் இணையவைத்தது. தமிழ் சினிமா க்ளைமாக்ஸில் காதல் ஜோடிகளைப் பெற்றோர் சேர்த்துவைப்பதைப்போல பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் கைகளை இணைத்துச் சேர்த்துவைத்தார் அப்போதைய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். ``மோடி சொல்லித்தான் இருவரும் இணைந்தோம்" என்று பின்னாளில் ஓ.பன்னீர்செல்வமே ஒப்புக்கொண்டார்.

தினகரன் கட்டம் கட்டப்பட, கட்சியில் பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர், ஆட்சியிலோ எடப்பாடி முதல்வர், பன்னீர்செல்வம் துணைமுதல்வர் ஆனார்கள். பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவரும் முதல்வராகக் காரணம் மக்கள் மன்றம் அல்ல, நீதிமன்றம். ஜெயலலிதா சிறைக்குப்போனதால் பன்னீர்செல்வமும் சசிகலா சிறைக்குப்போனதால் பழனிசாமியும் முதல்வர் ஆனார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் கதை `முதல்வன்' அர்ஜுன் கதை என்றால் எடப்பாடி பழனிசாமியின் கதை `அமைதிப்படை' நாகராஜ சோழன் கதை.

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

ஓ.பன்னீர்செல்வத்தையாவது 2001-ல் அவர் முதல்வரானதிலிருந்து தமிழக மக்களுக்குத் தெரியும். எடப்பாடி பழனிசாமியோ ஜெயலலிதா தினந்தோறும் ஆக்கியும் தூக்கியும் விளையாடுகிற எத்தனையோ அ.தி.மு.ககாரர்களில் ஒருவர். ஜெயலலிதா அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் எடுத்த புகைப்படத்தில் கடைசிவரிசையில் கடைசி ஆளாக நின்றிருப்பார் பழனிசாமி. ஆனால், ஒரு திடுக் திருப்பத்துக்குப் பிறகு, ‘கொங்கு பெல்ட்டில் இருந்து ஒரு முதல்வர்’ என விஸ்வரூபமெடுத்து நின்றார் இ.பி.எஸ்.

மூன்றுமாதக் குழந்தைபோல் தவழ்ந்து எந்த சசிகலா காலைத் தேடிப்பிடித்து வணங்கினாரோ அந்த சசிகலாவுக்கும், தன்னை முதல்வராக்கிய தினகரனுக்கும் சேர்த்து அல்வா கொடுத்தார் பழனிசாமி. அதோடு நிற்கவில்லை, மூன்றுமுறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் ஓரங்கட்டி வைத்ததுதான் பழனிசாமியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.

`எந்த சாமிக்கு அர்ச்சனை செய்வது? நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான்!’ என்று பழனிசாமி புகழ்பாடி விளம்பரங்கள் உருவாக்கப்பட்டன. கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதைப்போல எடப்பாடிக்கும் டாக்டர் பட்டம் கிடைத்தது. ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் என்று அமைச்சர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எடப்பாடியைப் புகழ்கின்றனர். மறந்தும் இந்தப் பாராட்டுகள் பன்னீர்செல்வத்துக்குப் போவதில்லை. எல்லாம் சரி. ஆனால், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருவரின் ‘தமிழக முதல்வர்’ செயல்பாடுகள் எப்படி இருந்தன?

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

ஓ.பன்னீர்செல்வம் இரண்டுமுறை முதல்வராக இருந்தபோதும் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதா மற்றும் சசிகலா விருப்பத்தின்பேரிலேயே அமைந்தன. அதிலும் இரண்டாம் ஆட்சிக்காலம் முழுவதும் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றத்துக்கு எதிரான போராட்டங்கள், மேல்முறையீட்டு வேலைகள் ஆகியவைதான் நடந்தனவே தவிர, வேறு வேலைகள் பெரிதாக நடக்கவில்லை. ஜெயலலிதா இருந்தவரை அமைச்சர்கள் உட்பட கட்சிக்காரர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்தார்கள். பேட்டிகள் கொடுப்பதோ பத்திரிகையாளர்களைச் சந்திப்பதோ ஜெயலலிதாவும் செய்ததில்லை; மற்றவர்களையும் செய்ய விட்டதில்லை. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததில்லை. அவர் அதிகநேரம் நடத்திய முதல் பிரஸ்மீட், ஜெயலலிதா சமாதியில் ‘தர்மயுத்தம்’ தொடங்கியபோதுதான். மூன்று முறை ஆட்சிக்காலத்தில் நினைவில் வைத்துக்கொள்ளும்படி நடந்த ஒரே சம்பவம் ‘ஜல்லிக்கட்டு’தான்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது காட்சிகள் மாறியிருந்தன. அதுவரை அடக்கப்பட்டிருந்த கட்சிக்காரர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. அறிக்கைகள், பத்திரிகையாளர் சந்திப்பு என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லோருமே பிஸியானார்கள். இதில் நல்லது, கெட்டது இரண்டுமே நடந்தது. ஓர் அமைச்சரைத் துறைசார்ந்த விளக்கம் கொடுப்பதற்குக்கூட ஜெயலலிதா அனுமதித்ததில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி காலத்தில் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக முன்வைத்தார். விஜயபாஸ்கர் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து வெளிப்படையாக விளக்குகிறார். இவையெல்லாம் அவசியமானவை.

அதே சமயம், ‘அம்மா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை’, ‘மோடி எங்கள் டாடி’ என்று திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கேலிக்கூத்தாக்குவதும் நடக்கிறது. ஜெயக்குமாருக்குப் பாடவும் தெரியும் என்பதும் செல்லூர் ராஜுவுக்குள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி ஒளிந்திருக்கிறார் என்பதும் தெரியவந்ததும் எடப்பாடி ஆட்சியில்தான்.

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

ஜெயலலிதா, ஓ.பி.எஸ் போல அல்லாமல் தொடர்ச்சியாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் எடப்பாடி, எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். அதிகாரிகள் ஜெயலலிதாவை அணுகமுடியாத நிலை இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளைக் கலந்தாலோசித்துப் பல முக்கிய முடிவுகளை எடுக்கிறார். அதேநேரம் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முதல் இ-பாஸ் வரை தெளிவில்லாமல் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டேயிருப்பது ஒரு முதல்வராக மைனஸ்தான்.

ஜெயலலிதா இருந்தவரை எதிர்க்கட்சிக்காரர் களுடன் அன்னந்தண்ணி புழங்கக்கூடாது என்று தடை விதித்திருந்தார். ஆனால் மூன்றாவதுமுறை ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானபோது தி.மு.கவுடன் நட்புபேணி அரசியல் நாகரிகம் காத்தார். ‘பன்னீர்செல்வம் ஸ்டாலினுடன் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும்’ இருந்ததாகக் குற்றச்சாட்டையே முன்வைத்தார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை சகாக்களும் மாற்றுக்கட்சிகளுடன் மரியாதையும் நட்பும் காட்டுவது வரவேற்கத்தக்க மாற்றங்கள்.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிமீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சேலம் எட்டுவழிச்சாலை போராட்டம், குட்கா ஊழல் குற்றச்சாட்டுகள் தொடங்கி சம்பந்திக்கு கான்ட்ராக்ட் கொடுத்ததாக விமர்சனங்கள் என்று பல கரும்புள்ளிகள். `நடப்பது பி.ஜே.பி ஆட்சிதான்', `மத்திய அரசு சொன்னதற்கெல்லாம் தலையாட்டுகிறார்', `மாநில அரசின் உரிமைகளை அடகுவைத்துவிட்டார்' என்று கடும் குற்றச்சாட்டுகள் அள்ளிவீசப்படு கின்றன. இவையெல்லாம் வெளியில் வைக்கப்படும் விமர்சனங்கள். ஆனால் கட்சியில் கடந்த நான்காண்டுகளில் தன்னை எடப்பாடி நிலைநிறுத்திவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 39 தொகுதிகளில் அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது. வென்ற ஒரே நாடாளுமன்ற வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத். இது தனிப்பட்ட முறையில் பன்னீர்செல்வத்தின் வெற்றி. ஆனால் ‘கட்சியின் முழுவெற்றிக்கும் பாடுபடாமல் தன் மகன் வெற்றியை மட்டும் தக்கவைத்துக்கொண்டார்’ என்று கட்சிக்காரர்கள் மத்தியில் பன்னீர்செல்வத்துக்கு அதிருப்தி அதிகரித்தது. மறுபுறத்திலோ `ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க காணாமல்போகும்' என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக தி.மு.க-வுக்கு மாற்று இன்னும் அ.தி.மு.க-தான் என்று நிரூபித்து, `கட்சியைக் காப்பாற்றியவர்' என்ற பெயர் எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்தது. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தாலும் இடைத்தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார் எடப்பாடி. அடுத்து வந்த இடைத்தேர்தல்களில் விக்கிரவாண்டி போன்ற தி.மு.க தொகுதியையும் தட்டிப் பறித்தது அ.தி.மு.க.

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

சரி... இப்போது இந்தக் கேள்விக்குப் பதில் நீங்களே சொல்லுங்கள்... எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்... இருவரில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

இவர்கள் இருவருமே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வாக்காளர்களின் அமோக ஆதரவுடன் தேர்தலில் வென்று, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகோபித்த வரவேற்புடன் முதல்வராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் அல்லர். சந்தர்ப்பவசத்தால் முதல்வர் பதவியை எட்டிப் பிடித்தவர்கள். அதைத் தக்க வைக்கப் போராடியதிலேயே ஆட்சிக்காலத்தைச் செலவிட்டவர்கள். இதைவைத்து இவர்களை ‘தமிழகத்தின் சிறந்த முதல்வர்கள்’ பட்டியலில் இடம்பெறச் செய்ய முடியுமா?

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

ஒரு சிறந்த முதல்வர் என்பதற்கான தகுதிகள் என்னென்ன? நேர்மை, மக்கள் நலனைச் சிந்திக்கும் மனம்... செயல்படுத்தும் குணம், நிர்வாகத்திறமை, மாநில உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் போர்க்குணம், கடைக்கோடி மக்கள்வரை கவனத்தில்கொண்டு ஆட்சி நடத்துவது, எதிர்காலத் தலைமுறைக்கும் சேர்த்துத் தொலைநோக்குப் பார்வையில் சிந்திப்பது, எதிர்க்கட்சியினரையும் அரவணைக்கும் ஜனநாயகப் பண்பு, மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மை, நல்ல கருத்து எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், மாறியுள்ள காலச்சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும் விதம், ஆட்சியின்போது செய்த சாதனைகளால், ஆட்சிக்காலத்துக்குப் பிறகும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருப்பது.... இவையும் இதற்கு மேலுமான சிறப்பியல்புகள்தானே..!

இந்தக் குணங்களும் தகுதிகளும் இருவரில் எவருக்கு அதிகமோ, அவரே சிறந்த முதல்வர் வேட்பாளர்.

இவர்கள் இருவரில் ஒருவர் அப்படியான சிறந்த முதல்வர் வேட்பாளரா என உங்களால் தீர்க்கமாகத் தீர்மானிக்க முடிந்தால், நீங்களே சிறந்த வாக்காளர்!

ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

அடையாளம்

ஓ.பி.எஸ் - டீக்கடைக்காரர்

இ.பி.எஸ் - `நானும் விவசாயிதான்!'

தேர்தல் வெற்றி - தோல்வி

ஓ.பி.எஸ் - எந்தத் தேர்தலிலும் தோற்றதில்லை

இ.பி.எஸ் - இரண்டுமுறை சட்டமன்றத் தேர்தல்களிலும் இரண்டுமுறை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தோல்வியடைந்தார்.

இமேஜ்

ஓ.பி.எஸ் - சசிகலா எதிர்ப்பால் `தர்மயுத்த போராளி' இமேஜ்.

இ.பி.எஸ் - எளிமையான முதல்வர், எளிதில் அணுகக்கூடியவர் என்ற இமேஜ்.

குடும்ப அரசியல்

ஓ.பி.எஸ் - மகனை எம்.பி ஆக்கி வாரிசு அரசியலுக்கு வித்திட்டது, சகோதரர் ஓ.ராஜா மீது ஏராளமான குற்றச்சாட்டுகள்.

இ.பி.எஸ் - சம்பந்திக்கு கான்ட்ராக்ட் பணிகள் கொடுப்பதாகக் குற்றச்சாட்டு.

சாதி அரசியல்

ஓ.பி.எஸ் - முக்குலத்தோர் அரசியல். இந்த அடையாளம்தான் இவரை சசிகலாவுக்கு நம்பிக்கைக்கு உரியவராகவும் நெருக்கமாகவும் ஆக்கியது.

இ.பி.எஸ் - கொங்குவேளாளர் அரசியல் - மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு இருந்த செல்வாக்கு இவருக்கு உதவியது.

குற்றச்சாட்டுகள்

ஓ.பி.எஸ் - சேகர் ரெட்டியுடனான தொடர்பு, சகோதரர் மீதான முறைகேட்டுக் குற்றச்சாட்டுகள்.

இ.பி.எஸ் - குட்கா ஊழல், சத்துணவு முட்டை வாங்கியதில் ஊழல், சம்பந்திக்கு கான்ட்ராக்ட் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள்.

சம்பவங்கள்

ஓ.பி.எஸ் - ஜல்லிக்கட்டுப் போராட்டம், போலீஸ் வன்முறை.

இ.பி.எஸ் - தூத்துக்குடித் துப்பாக்கிச்சூடு சம்பவம், எட்டுவழிச்சாலைப் போராட்டம்.

சாதனைகள்

ஓ.பி.எஸ் - முதல்வரானதே சாதனைதான். ஜல்லிக்கட்டுக்காக அனுமதி வாங்கித் தந்ததால் `ஜல்லிக்கட்டு நாயகன்' என்று ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டது.

இ.பி.எஸ் - பிளாஸ்டிக் தடை, காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு - அவிநாசித் திட்டம்.

கட்சியில் சாதனை

ஓ.பி.எஸ் - சசிகலாவுக்கு எதிராக எழுந்த முதல் குரல்.

இ.பி.எஸ் - ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை நிலைநிறுத்தியது.