Published:Updated:

உள்ளாட்சி ரேஸ்: `தேர்தல் அரசியலில் கைதேர்ந்தவர்கள் மோதும் களம்!’ - கோவை மாநகர் யாருக்கு?

கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியைத் தங்களது கோட்டையாகத் தக்கவைக்க அ.தி.மு.க-வும், கடந்தகாலத் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க-வும் அனல்பறக்க மோதிக்கொண்டிருக்கின்றன.

உள்ளாட்சி ரேஸ்: `தேர்தல் அரசியலில் கைதேர்ந்தவர்கள் மோதும் களம்!’ - கோவை மாநகர் யாருக்கு?

கோவை மாநகராட்சியைத் தங்களது கோட்டையாகத் தக்கவைக்க அ.தி.மு.க-வும், கடந்தகாலத் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க-வும் அனல்பறக்க மோதிக்கொண்டிருக்கின்றன.

Published:Updated:
கோவை மாநகராட்சி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி தனி கவனம் ஈர்த்துள்ளது. கோவையைத் தங்களது கோட்டையாகத் தக்கவைக்க அ.தி.மு.க-வும், கடந்தகாலத் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க-வும் அனல்பறக்க மோதிக் கொண்டிருக்கின்றன.

வேலுமணி - செந்தில் பாலாஜி
வேலுமணி - செந்தில் பாலாஜி

அ.தி.மு.க-வின் வெற்றியைத் தக்கவைக்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், தி.மு.க-வை வெற்றிபெறவைக்க அமைச்சர் செந்தில் பாலாஜியும் வியூகங்களை வகுத்துவருகின்றனர். கோவை மாநகராட்சித் தேர்தல் களத்துக்கு முன்பு, மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள பிரச்னைகளைத் தெரிந்துகொள்வோம்.

கோவையைப் பொறுத்தவரை அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் சொந்த ஊர். அவர் கண் அசைவில்தான் கோவை மாநகராட்சி இயங்கிவந்தது. இதனால் ஏராளமான ஊழல் புகார்களும் வட்டமடித்தன. கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியபோது, அவருடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

ஒவ்வோர் ஆண்டும் மாநகராட்சி பட்ஜெட்டின்போது நிதிப்பற்றாக்குறை எகிறிக்கொண்டே போகிறது. ஆட்சி மாறியவுடன் திட்டப்பணிகளுக்குப் பணம் இல்லாமல், ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் ரத்துசெய்யப்பட்டன.

தடுக்கி விழுந்தால் மேம்பாலம், ஸ்மார்ட் சிட்டி பணி, அடுத்து மெட்ரோ ரயில் திட்டம் வரை அடுக்கினாலும், கோவை மாநகராட்சியில் பல இடங்களில் சரியான சாலைகள் இல்லை. ரூ.3,167 கோடிக்கு கோவை குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது.

கோவை
கோவை

போக்குவரத்தும் பாடாய்ப்படுத்துகிறது. பல இடங்களில் பாதாளச் சாக்கடை பணிகள் முழுமையாக முடியவில்லை. தேர்தலில் வெற்றிபெற்று அரியணை ஏறுபவர்களுக்கு இந்தப் பிரச்னையைச் சரிசெய்யவே இரண்டு, மூன்று ஆண்டுகளாகும்.

2016-ம் ஆண்டிலிருந்தே கோவை மாநகராட்சியைக் கைப்பற்ற அ.தி.மு.க வியூகங்களை வகுத்துவருகிறது. கோவையைப் பொறுத்தவரை தேர்தல் பணிகளில் எப்போதும் அ.தி.மு.க-தான் வேகம் காட்டும். ஆனால், செந்தில் பாலாஜி வருகையால், தி.மு.க-வும் இந்த முறை களத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கடந்த காலங்களில் தி.மு.க-வை வதைக்கும் உட்கட்சிப்பூசல் பஞ்சாயத்து இப்போதும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

வேட்பாளர் தேர்வு, கூட்டணிகளுக்கு சீட் ஒதுக்கியது என்று அனைத்திலும் பஞ்சாயத்துதான். செந்தில் பாலாஜியின் கார், வீட்டை முற்றுகையிட்டும் உடன்பிறப்புகள் எதிர்ப்புகளைக் காட்டினர்.

வேட்பாளர் பட்டியலில் தி.மு.க-வைப் போல, அ.தி.மு.க-விலும் பஞ்சாயத்து நிலவுகிறது. பல சீனியர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. சீட் கேட்ட பலரிடம் லட்சத்தில் வெட்டுங்கள் என்று கூறவே பதறியிருக்கிறார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள். அதேநேரத்தில் புதிதாக வந்தவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள செல்வந்தவர்களுக்கு வாரி வழங்கியுள்ளனர்.

அதிமுக கோவை மேயர் ரேஸ்
அதிமுக கோவை மேயர் ரேஸ்

வேலுமணியின் நிழலாக வலம்வருபவரும், `நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் மனைவி சர்மிளாதான் மேயர் வேட்பாளர் என்று கூறப்பட்டுவந்தது. கடைசி நேர ட்விஸ்ட்டாக, கிருபாலினி என்பவரை டிக் செய்திருக்கிறதாம் அ.தி.மு.க. இதன் காரணமாக வேலுமணியின் ஆதிக்கத்துக்கு எதிராக, ஆங்காங்கே கலகக்குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

பாஜக தனித்துக் களமிறங்குவது அதிமுக-வுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜக கூட்டணியில் இல்லாததால், சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக அறுவடை செய்யும் என்றும், பல இடங்களில் அதிமுக - பாஜக `லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங்கில்’ செயல்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தி.மு.க-விலும் மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் விஷயத்தில் தாரளமாக விளையாடியுள்ளனர். சீட் கிடைக்காத ஆத்திரத்தில் சில இடங்களில் உடன்பிறப்புகள் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க-வைப் பொறுத்தவரை சீனியர் அடிப்படையில் மீனாலோகு, மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் மனைவி லக்குமி இளஞ்செல்வி, புறநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி மகள் நிவேதா ஆகியோர் மேயர் ரேஸில் உள்ளனர்.

ஆனால் மேயர் விஷயத்தில் கட்சித் தலைமையோ, செந்தில் பாலாஜியோ எந்த முடிவும் செய்யவில்லை. வெற்றிபெற்ற பிறகுதான் மேயர் விஷயத்தில் முடிவு செய்யப்படும். அதுவும் சர்ப்ரைஸாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

`களப்பணிகளை பொறுத்தவரை, தேர்தல் முடியும்வரை கட்சிக்காரர்கள் யாரும் தூங்கவே கூடாது’ என்று வேலுமணி சொல்லிவருகிறார்.

வேலுமணி
வேலுமணி

தி.மு.க-வுக்கு இணையாகச் செலவு செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒரு பக்கம் சந்திரசேகர் மனைவி ஷர்மிளா, மற்றொரு பக்கம் புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மனைவி கிருபாலினி என்று இருவரையும் இறக்கிவிட்டுள்ளார்.

“தேர்தலில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தி.மு.க-வுக்கு இணையாகச் செலவு செய்ய வேண்டும் என்று வேலுமணி முடிவு செய்திருக்கிறாராம். தி.மு.க எவ்வளவு வைட்டமின்களை இறக்குகிறதோ, அதற்கு இணையாக அல்லது அவர்களுக்கு ஒருபடி மேல் சென்று வைட்டமின்களைக் கொடுப்போம். தி.மு.க-வை எளிதில் வெற்றிபெற விட மாட்டோம்” என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

கோவை
கோவை

ஆனால் களத்தில் அ.தி.மு.க-வில் பெரிய அளவுக்கு உற்சாகம் தென்படவில்லை. ஒருசில இடங்களில் வேட்பாளர்களுக்கு தலைமையிடமிருந்து ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பு பரப்புரைக்குச் செல்பவர்களுக்கு, அ.தி.மு.க-வில் ரூ.500 பேட்டா, உணவு, மது வகைகள் எல்லாம் கொடுப்பார்கள். இந்த முறை பல இடங்களில் ரூ.100-300-தான் கொடுக்கின்றனராம்.

அப்படியே தி.மு.க பக்கம் வந்தால் செலவு செய்வதற்காகவும், தேர்தல் களப்பணிக்காகவும் கரூரிலிருந்து செந்தில் பாலாஜியின் படைகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தினசரிச் செலவுக்காக அந்தந்த வார்டு பொறுப்பாளர்களிடம் ரூ.25,000 வரை கொடுக்கப்படுகிறதாம். பரப்புரைக்கு வருபவர்களுக்கே தினசரி ரூ.500 வரை கொடுக்கின்றனர். ஓட்டுக்கு வைட்டமின் `ப’, பரிசுப் பொருள்களை கொடுக்கவும் தி.மு.க திட்டமிட்டுள்ளதாம்.

வேலுமணி, செந்தில் பாலாஜி இருவருமே தேர்தல் அரசியலில் கைதேர்ந்தவர்கள்தான். கோவை அரசியல் செந்தில் பாலாஜிக்கு புதிது என்பது ஒரு மைனஸ். அதேநேரத்தில் ஆளுங்கட்சியாக இருப்பது தி.மு.க-வுக்கு ப்ளஸ். கோவை மக்களின் எண்ண ஓட்டங்களை விரல்நுனியில் வைத்திருப்பது அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ்.

கோவை
கோவை

தற்போதைய சூழல் வைட்டமின் `ப’ விஷயத்தில் அ.தி.மு.க-வைவிட தி.மு.க கை சற்றே ஓங்குவது அ.தி.மு.க-வுக்கு மைனஸ். கட்சிகளில் நிலவும் உட்கட்சிப்பூசல்கள் இருவருக்குமே மைனஸ். இப்படி எல்லாவற்றிலும் சம பலமாக இருப்பதால், கோவை மாநகராட்சியில் கடுமையான போட்டி நிலவிவருகிறது!