Published:Updated:

உள்ளாட்சி ரேஸ்: மார்ச் 4-க்கு தயாராகும் திமுக; தவிக்கும் அதிமுக! -நெல்லை மாநகராட்சி யாருக்கு?

திருநெல்வேலி மாநகராட்சி

ஸ்மார்ட் சிட்டி பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம் போன்றவற்றால் மாநகரம் முழுவதுமிருக்கும் சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. தாமிரபரணிக் கரையோரம் வசிக்கும் மக்களே குடிநீர் இன்றித் தவிக்கும் நிலை போன்றவற்றைக் களையவேண்டிய கடமைகள் புதிய மேயருக்குக் காத்திருக்கின்றன.

உள்ளாட்சி ரேஸ்: மார்ச் 4-க்கு தயாராகும் திமுக; தவிக்கும் அதிமுக! -நெல்லை மாநகராட்சி யாருக்கு?

ஸ்மார்ட் சிட்டி பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம் போன்றவற்றால் மாநகரம் முழுவதுமிருக்கும் சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. தாமிரபரணிக் கரையோரம் வசிக்கும் மக்களே குடிநீர் இன்றித் தவிக்கும் நிலை போன்றவற்றைக் களையவேண்டிய கடமைகள் புதிய மேயருக்குக் காத்திருக்கின்றன.

Published:Updated:
திருநெல்வேலி மாநகராட்சி

திருநெல்வேலி மாநகராட்சி

தமிழகத்தின் ஆறாவது மாநகராட்சியாக 1996-ல் உருவானது திருநெல்வேலி மாநகராட்சி. நான்கு மண்டலங்களை உள்ளடக்கிய இந்த மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் இருக்கின்றன. இதுவரை நடந்த ஐந்து தேர்தல்களில் தி.மு.க இரண்டு முறையும், அ.தி.மு.க மூன்று முறையும் வெற்றிபெற்றிருக்கின்றன. நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நெல்லை மாநகராட்சியில் இந்த முறை மேயர் பொறுப்பைக் கைப்பற்றப்போவது யார் என்ற போட்டி ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 2,03,879 ஆண் வாக்காளர்களும், 2,12,473 பெண் வாக்காளர்களும், 37 இதர பிரிவினரும் என மொத்தம் 4,16,389 வாக்காளர்கள் உள்ளனர். வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 490 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறை தி.மு.க கூட்டணியை எதிர்த்து அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ., மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசியல் கட்சிகளில் சீட் கிடைக்காத சிலர் போட்டி வேட்பாளர்களாகக் களமிறங்கி நெருக்கடியைக் கொடுத்துவருகிறார்கள். இது தவிர, வார்டுகளில் செல்வாக்குகொண்ட சிலர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள். தி.மு.க-வைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட்களையும் ம.தி.மு.க-வுக்கு இரு இடங்கள், மார்க்சிஸ்ட், ம.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஓர் இடம் என இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு 47 இடங்களில் போட்டியிடுகிறது.

நெல்லை மாநகராட்சி அலுவலகம்
நெல்லை மாநகராட்சி அலுவலகம்

அ.தி.மு.க சார்பாக 55 வாடுகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதில், ஒரு வேட்பாளர் வாபஸ் பெற்றது போக 54 வார்டுகளில் போட்டியிடுகிறது. பா.ஜ.க 48 இடங்களிலும் அ.ம.மு.க 40 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 30 இடங்களிலும், தே.மு.தி.க சார்பாக 19 இடங்களிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கூட்டணிக் கட்சியான தி.மு.க இடம் ஒதுக்காததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார்டில் தனித்துப் போட்டியிடுகிறது. தி.மு.க-வும் அ.தி,மு.க-வும் 46 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றன. மாநகராட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 408 பேர் போட்டியிடுகிறார்கள்.

முட்டி மோதும் வேட்பாளர்கள்!

தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் தகிக்கத் தொடங்கியிருக்கிறது. மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி, தி.மு.க-வின் கோட்டை. நெல்லை சட்டமன்றத் தொகுதி தற்போது பா.ஜ.க வசம் இருக்கிறது. அதனால் அதிக இடங்களைக் கைப்பற்றும் முனைப்புடன் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பி.எஸ் பிரசாரம்
அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பி.எஸ் பிரசாரம்

தி.மு.க., அ.தி.மு.க-வினருக்கு இணையான வேகத்துடன் பா.ஜ.க., ம.நீ.ம., நாம் தமிழர் வேட்பாளர்கள் பிரசாரம் செய்கிறார்கள். சுயேச்சை வேட்பாளர்களும் சில இடங்களில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு வேகமாகச் செயல்படுவதால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

நெல்லை மாநகராட்சி மேயர் கனவுடன் அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த முன்னாள் எம்.பி-க்கள் விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி ஆகியோருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்களின் மேயர் கனவும் தகர்ந்துவிட்டது. அத்துடன், முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோரும் சீட் கேட்டு முட்டி மோதியும் சீட் கொடுக்கப்படவில்லை.

தச்சை சுப்பிரமணியன், கோட்டையப்பன் கருப்பசாமி
தச்சை சுப்பிரமணியன், கோட்டையப்பன் கருப்பசாமி

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகன் பிரபாகரன் மேயர் கனவுடன் சீட் கேட்டார். அவருக்கும் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரான அப்துல் வஹாப் சீட் கொடுக்க மறுத்துவிட்டார். மாலைராஜா, பிரபாகரன் ஆகியோருக்காகக் கட்சியின் சீனியர் அமைச்சர்கள் பலர் சிபாரிசு செய்தபோதிலும் ஒரு வார்டு சீட்கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

மேயர் கனவில் மிதக்கும் வேட்பாளர்கள்!

நெல்லை மாநகராட்சி மேயர் பதவி, பொதுப்பிரிவில் இருப்பதால் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மேயர் பொறுப்பை எதிர்பார்த்து களமிறங்கியிருக்கிறார்கள். ஆனால், ``மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப் தனக்கு நெருக்கமான ஒருவருக்கு அல்லது தன் கைமீறிச் செல்லாத நபருக்கு மட்டுமே சிபாரிசு செய்து மேலிடத்திலிருந்து மேயர் பொறுப்பைப் பெற்றுத் தருவார்” என்கிறார்கள் கட்சியினர்.

கோகுலவாணி மற்றும் மகேஸ்வரி
கோகுலவாணி மற்றும் மகேஸ்வரி

தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.ராஜா, பகுதிச் செயலாளர் சுப்பிரமணியன், மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகேஸ்வரி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கோட்டையப்பன் கருப்பசாமி, மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, முன்னாள் மாநகர இளைஞரணி அமைப்பாளர் எஸ்.வி.சுரேஷின் மனைவி கோகுலவாணி ஆகியோர் மேயருக்கான ரேஸில் இருக்கிறார்கள்

துணை மேயருக்கான கோதாவில், முன்னாள் துணை மேயராக இருந்த விஸ்வநாத பாண்டியனின் மருமகள் பிரபா சங்கரி, மூளிக்குளம் பிரபுவின் மனைவி ரேவதி ஆகியோர் இருக்கிறார்கள். மேயர் பொறுப்பு கிடைக்காவிட்டால் அந்தப் போட்டியில் இருப்பவர்களும் துணை மேயர் கோதாவில் இறங்குவார்கள்.

ரேவதி மற்றும் சுதா
ரேவதி மற்றும் சுதா

தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஏ.எம்.மூர்த்தி, தன் மனைவி சுதாவை துணை மேயராக்க வேண்டும் என்கிற கனவுடன் செயல்பட்டுவருகிறாராம். மேயர், துணை மேயர் பொறுப்புகளைக் கைப்பற்ற வைட்டமின்களை கோடியில் கொட்டவும் சில வேட்பாளர்கள் தயாராகிவருகிறார்களாம்.

கோபத்தின் உச்சத்தில் வாக்காளர்கள்!

வேட்பாளர்களில் சிலர் மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர் பொறுப்புகளைக் கைப்பற்றும் கனவுகளுடன் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், மாநகராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் இருப்பதால் வாக்காளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் காரணமாக நெல்லை மாநகரத்துக்குள் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாகக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துகளைச் சந்திக்கும் அவலம் நேர்கிறது.

மேயர் போட்டியில் இருக்கும் கே.ராஜூ மற்றும் வில்சன் மணித்துரை
மேயர் போட்டியில் இருக்கும் கே.ராஜூ மற்றும் வில்சன் மணித்துரை

2006-ல் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டச் சாலை கிடப்பில் போடப்பட்டுள்ளது, 2012-ல் ரூ.19 கோடி மதிப்பில் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டு 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை அதுவும் முழுமையடையவில்லை.

நெல்லை மாநகராட்சியில் பாளையங்கோட்டை முதல் டவுன் வரையிலும் மாற்றுப் பாதைகள் இல்லாமல் இருப்பதால் போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. மாற்றுச் சாலைப் பணிகள், இணைப்புச் சாலைகள் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணம்.

நகரத்துக்குள் தாமிரபரணி ஆறு ஓடியும் குடிநீர் பிரச்னை இதுவரை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.
நெல்லை மக்கள்

இது தவிர, நெல்லை மாநகராட்சிப் பகுதியின் பல இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. வற்றாத ஜீவநதி என வர்ணிக்கப்படும் தாமிரபரணி ஆறு ஊருக்கு நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், குடிநீருக்காக மக்கள் தவிக்கும் நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படாததும் மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவாக முடித்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

1996-ல் மாநகராட்சியாக உருவான நெல்லையில் இதுவரை பாதாளச் சாக்கடைத் திட்டம் முழுமையடையவில்லை. மாநகரம் முழுவதும் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி விரைவில் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதும் வாக்காளர்களின் நீண்டகாலக் கோரிக்கை.

குண்டும் குழியுமான சாலைகள்
குண்டும் குழியுமான சாலைகள்

பாளையங்கோட்டை தியாகராயநகர் பகுதியிலுள்ள ரயில்வே கிராஸிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணிகளில் 80 சதவிகிதம் முடிவடைந்துவிட்டன. ரயில்வே தண்டவாளத்தின் மீது பாலம் அமைக்கவேண்டிய பணி மட்டுமே பாக்கியிருக்கிறது. அது முடிவடையாமல் இழுத்துக்கொண்டே இருப்பதுடன், குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதும் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.

பணமும் பரிசுப்பொருள்களும்!

நெல்லை மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு இணையாக அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்களைக் கொடுக்கத் தயாராகிவருகிறார்களாம். நெல்லையில் உள்ள வேட்பாளர்களில் 16 பேருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வின் முன்னாள் துணை மேயர் கணேசன்
அ.தி.மு.க-வின் முன்னாள் துணை மேயர் கணேசன்

அ.தி.மு.க தரப்பில் முன்னாள் துணை மேயர் கணேசன் மேயர் அல்லது துணை மேயருக்கான போட்டியில் இறங்குவார் என்கிறார்கள். பா.ஜ.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தீவிர பிரசாரம் செய்கிறார். தேர்தல் முடிவுக்குப் பிறகே அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என்கிறார்கள், பாரதிய ஜனதா கட்சியினர்.

நெல்லை மாநகரத்தில் சில வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வைட்டமின்களைக் கொடுக்கிறார்கள். அரிசிப் பை, குத்துவிளக்கு, குங்குமச் சிமிழ், சில்வர் பாத்திரம் என பரிசுமழை கொட்டுகிறது. குறிப்பாக மேயர், துணை மேயர் கோதாவில் இருக்கும் வேட்பாளர்களின் வார்டுகளில் பணமழை பொழிகிறதாம்.

போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்
போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

நெல்லை மாநகராட்சி மேயருக்கு மறைமுகத் தேர்தல் நடக்கவிருப்பதால் வார்டு கவுன்சிலர்களாகத் தேர்வாகும் நபர்கள் மேயரைத் தேர்வு செய்யவுள்ளனர். அதனால் இப்போதே சில வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மேயர் வேட்பாளர் என நினைப்பவர்கள் செலவு செய்கிறார்களாம்.

பாஜக தனித்து நிற்பது, அதிமுக-வுக்கு மைனஸ் ஆகிவிடுகிறது. ஆளுங்கட்சி பலம், பிரசார வேகம், வியூகம், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு என திமுக தற்போது நெல்லை களத்தில் முந்தி நிற்கிறது. திமுக-வின் கவனமெல்லாம் மார்ச் 4-ல் நடைபெறும் மேயருக்கான மறைமுகத் தேர்தல்தானாம். அந்த அளவுக்கு நம்பிக்கையோடு வலம்வருகிறார்கள் உடன்பிறப்புகள்.

எது எப்படியிருந்தாலும் வாக்காளர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பது வாக்கு எண்ணிக்கை தினமான பிப்ரவரி 22-ம் தேதி தெரிந்துவிடும்!