Published:Updated:

உள்ளாட்சி ரேஸ்: நாகர்கோவில் மாநகரை கைப்பற்றுகிறதா பாஜக?! - முதல் மேயர் யார்?

நாகர்கோவில் மாநகராட்சி

நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை பிடிக்கும் கனவில் பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் களத்தில் உள்ளன. ஒரு கவுன்சிலருக்கு 20 லட்சம் ரூபாயும், 5 சென்ட் பிளாட்டும் கொடுக்க தயாராகிய முக்கியப்புள்ளியால் பரபரத்துகிடக்கிறது தேர்தல் களம்!

உள்ளாட்சி ரேஸ்: நாகர்கோவில் மாநகரை கைப்பற்றுகிறதா பாஜக?! - முதல் மேயர் யார்?

நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை பிடிக்கும் கனவில் பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் களத்தில் உள்ளன. ஒரு கவுன்சிலருக்கு 20 லட்சம் ரூபாயும், 5 சென்ட் பிளாட்டும் கொடுக்க தயாராகிய முக்கியப்புள்ளியால் பரபரத்துகிடக்கிறது தேர்தல் களம்!

Published:Updated:
நாகர்கோவில் மாநகராட்சி

நாகர்கோவில் மாநகராட்சி - சில சவால்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில். நாகராஜர், கோயில் கொண்டு அரசாட்சி செய்வதால் இந்த நகரத்துக்கு நாகர்கோவில் என பெயர்வந்தது எனக் கூறுவது உண்டு. நூறு ஆண்டுகளாக நகராட்சியாக இருந்த நாகர்கோவில் கடந்த 2019-ல் அ.தி.மு.க ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவிலில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. கடைகள், வீடுகள் மூலம் வரி வசூல் செய்வதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டுதான் மாநகராட்சி இயங்குகிறது.

நாகர்கோவில் நகராட்சியின் 52 வார்டுகளும் அப்படியே மாநகராட்சி ஆக்கப்பட்ட நிலையில் இப்போது ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு ஒரு வார்டில் குறைந்தது 3000 வாக்காளர்கள் வரும் வகையில் 52 வார்டுகளும் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

பா.ஜ.க வேட்பாளர் மீனாதேவ்
பா.ஜ.க வேட்பாளர் மீனாதேவ்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு இப்போது வரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.100.38 கோடி வருவாய் வருகிறது. குடிநீர் கட்டணம் மூலம் ரூ.11.90 கோடி வருவாய் வருகிறது. ஆனாலும் பட்ஜெட்டில் 20 சதவீதம் தொகை துண்டுவிழுகிறது. 20 சதவீதம் நிதி பற்றாக்குறையை சமாளிப்பதுடன், பொதுமக்கள் பாதிக்காத அளவில் நிதிநிலையை அதிகரிப்பது `முதல்' மேயருக்கு பெரும் சவாலாக இருக்கும். பாதாள சாக்கடைத் திட்டம் சுமார் பத்து ஆண்டுகளாக முடியாமல் இழுத்துக்கொண்டு இருக்கிறது. அந்த திட்டத்தை முடிப்பது சிக்கலாகத்தான் இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாகர்கோவில் சிறிய நகரம் என்றாலும் வாகன போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் உள்ளது. கமிஷனராக சரவணகுமார் இருந்த சமயத்தில் வேப்பமூடு ஜங்சன், வடசேரி, கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதி சாலைகளை விரிவாக்கம் செய்தார். அனைத்துச் சாலைகளையும் இருவழி சாலையாக மாற்றி நாகர்கோவிலில் சுமுகமான போகுவரத்தை கொண்டுவர திட்டமிட்டிருந்தார் சரவணகுமார். அதற்குள் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் மாநகார கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சாலை விரிவாக்கப் பணிகள் அப்படியே நின்றுவிட்டன. இப்போது சில பிரதான கட்சிகளின் கவுன்சிலர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கமிஷனராக சரவணகுமாரை கொண்டுவருவோம் என கூறி வாக்கு சேகரிக்கிறார்களாம்.

தி.மு.க வேட்பாளர் மகேஷ்
தி.மு.க வேட்பாளர் மகேஷ்

எனவே சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது கன்னி மேயருக்கு சவாலான பணியாக இருக்கும். வலம்புரிவிளை உரக்கிடங்கில் குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்றுவோம் என எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல் சமயத்திலும் வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால் மலைபோல குவிந்துகிடக்கும் குப்பையை அகற்றுவது என்பது சிக்கலான சவால். புதிய மேயருக்காக நாகர்கோவில் ஸ்டேடியம் அருகில் உள்ள கலைவாண அரங்கம் பகுதியில் புதிய மாநகராட்சி அலுவலகம் அமைந்து வருகிறது. மேயராகி, புதிய அலுவலகதில் கோலோச்ச தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க கட்சிகள் மும்முரமாக உள்ளன. 52 கவுன்சிலர்களில் 27 கவுன்சிலர்களின் ஆதரவைப் பெறுபவர் மேயர் ஆகலாம். ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதையே தற்போதைய கள நிலவரம் சொல்கிறது.

பாஜக vs திமுக vs அதிமுக!

நாகர்கோவில் நகராட்சியாக இருந்த சமயத்தில் சமீபத்தில் பா.ஜ.க இரண்டு முறை நகராட்சியை கைப்பற்றியுள்ளது. தி.மு.க-வும், காங்கிரஸும் சேர்மன் பதவியை அலங்கரித்துள்ளன. அ.தி.மு.க நகராட்சியை கைப்பற்றியது இல்லை. இந்த நிலையில் பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் இந்த முறை மாநகராட்சி சேர்மன் பதவியை பிடிக்க கடும் முயற்சியில் உள்ளன.

பா.ஜ.க-வில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவோடு மீனாதேவ் மேயர் ரேஸில் இருக்கிறார். அமைச்சர் மனோதங்கராஜ் ஆதரவோடு தி.மு.க-வில் மாநகர செயலாளர் மகேஷ், அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா ஆகியோரும் மேயர் ரேஸில் உள்ளனர்.

அ.தி.மு.க வேட்பாளர் ஸ்ரீலிஜா
அ.தி.மு.க வேட்பாளர் ஸ்ரீலிஜா

இந்த மூன்று வேட்பாளர்களுமே கடைசி நேரத்தில் மேயர் பதவியைபிடிக்க கவுன்சிலர்களை 'கவர் செய்யும்' அளவுக்கு தகுதி படைத்தவர்கள்தான். எனவே கவுன்சிலர்களுக்கான பேரம் கடைசி கட்டத்தில் பல லட்சங்கள் வரை போகும் என்கிறார்கள். முக்கிய கட்சியை சேர்ந்த ஒரு புள்ளி, ஒரு கவுன்சிலருக்கு 20 லட்சம் ரூபாயும், 5 சென்ட் பிளாட்டும் கொடுக்க இப்போதே தயாராகிவிட்டதாக செய்தி ஓடுகிறது. இந்த மூன்று கட்சிகளுமே, கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து வேட்பாளர்களிடமும் ஆதரவு கேட்டு இப்போதே மறைமுகமாக பேசிவருகின்றனராம். அ.தி.மு.க-வின் ஸ்ரீலிஜா அரசியலுக்கு புதுசு. அதேசமயம் பா.ஜ.க-வின் மீனாதேவ், தி.மு.க மகேஷ் ஆகியோர் மாநகரத்தில் பிரபலமான அரசியல்வாதிகள். எனவே மேயர் பதவியின் இறுதிச் சுற்றில் மகேஷ் மற்றும் மீனாதேவுக்கு நேரடி மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது!