Published:Updated:

நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றது யார்? கடம்பூர் ராஜூ கேள்வி

”நாடாளுமன்றத் தேர்தலில் யார் பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். இதை மறுக்க கனிமொழி தயாரா?” என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணல் காந்தியடிகளின் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”அ.தி.மு.கவினர் பணத்தின் மீது நம்பிக்கை வைத்துதான் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கூறியது குறித்து கேட்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ
நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ”நாடாளுமன்றத் தேர்தலில் யார் பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்பது தூத்துக்குடி மக்களுக்கு நன்கு தெரியும். பணம் கொடுத்து வெற்றி பெறவில்லை என கனிமொழி செல்லத் தயாரா? வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்தான் கனிமொழி. அவர் மற்றவர்களைப் பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது.காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கனிமொழி அப்படிக் கூறியுள்ளார். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. ” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “நாடு சுதந்திரம் பெற்ற பின்பு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். அதேபோல கடந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி காட்டியுள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து ரூ.5,750 கோடி ரூபாய்க்கு, படித்த 30 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் ஏற்பாட்டினை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ
நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும், அ.தி.மு.க அரசு பல நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து சாதனை படைத்து வருகிறது. அந்த சாதனைகளைப் பட்டியலிட முடியும். இதே போல, முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா?” என்றார்.