தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்த பின்னர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவார் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இந்தநிலையில், 19 மாதங்களுக்குப் பின்னர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்கும் நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நடந்தது. அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும்போது, ஆளுநருடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு அமைச்சர்கள் 34 பேரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படத்தில் சீனியர்கள் நின்றிருக்க அமைச்சர் உதயநிதி அமர்ந்திருந்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அமைச்சர்களின் இலாகா வாரியான தரவரிசைப் பட்டியலில் உதயநிதிக்கு எத்தனையாவது இடம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. மூத்த அமைச்சர்கள் பலரும் இருப்பதால் உதயநிதிக்கு 15-வது வரிசைக்குப் பிறகு இடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அமைச்சர்கள் பட்டியல் வரிசையில் 10-வது இடம் உதயநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ரகுபதி, முத்துச்சாமி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பி.கே.சேகர் பாபு ஆகியோர் உதயநிதிக்கு அடுத்தபடியாகத்தான் பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.
உதயநிதிக்கு வழங்கப்பட்டிருக்கும் 10-வது இடம் குறித்து விவரமறிந்தவர்களிடம் விசாரித்தோம். "மரபு அடிப்படையிலும், வரிசை எண் அடிப்படையிலும்தான் அமைச்சர்களுக்கு அதிகாரிகள் இடம் ஒதுக்குவார்கள். ஆனால், அமைச்சரவைக்கு முதல்வரே தலைவர் என்பதால், யாருக்கு எத்தனையாவது இடம் வழங்கலாம் என்பது குறித்து அவரே முடிவெடுக்கலாம். அந்த அடிப்படையிலேயே உதயநிதிக்கு 10-வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில்கூட இந்த அடிப்படையில்தான் அமைச்சர்கள் அமரவைக்கப்படுவார்கள்.

ஏற்கனவே, உதயநிதி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது முதல்வருக்குப் பின்னிருக்கை வரிசையில்தான் அமரவைக்கப்பட்டார். தற்போது அமைச்சர் என்பதாலும், 10-வது இடத்தில் இருப்பதாலும் சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமரவைக்கப்படுவார். குறிப்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்தபடியாக அவர்தான் வருவார். முன்னுரிமை கொடுக்கும் அடிப்படையிலேயே அவருக்கு இந்த நம்பர் ஒதுக்கப்பட்டிருக்கலாம். இனி தமிழக சட்டசபையில் அமைச்சர்களுக்கான இரண்டு வரிசைகளில் முதல் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார்" என்றார்கள்.