Published:Updated:

`பிரதமர் மோடி மீதான ஈர்ப்பே காரணம்!'- பா.ஜ.க-வில் இணைந்த நடிகை ஜெயலட்சுமி

பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான ஆட்சியின் காரணமாக, அந்தக் கட்சியில் சேர இருக்கிறார் நடிகை ஜெயலட்சுமி.

பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்த நடிகை ஜெயலட்சுமி
பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்த நடிகை ஜெயலட்சுமி

`பிரிவோம் சந்திப்போம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெயலட்சுமி. அதன்பிறகு கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தார், நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் உள்பட ஏராளமான படங்களிலும் முள்ளும் மலரும், பிரியமானவள் போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார். இவர் இன்று முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைய இருக்கிறார்.

நடிகை ஜெயலட்சுமி
நடிகை ஜெயலட்சுமி
Vikatan

இதுகுறித்துத் தகவல் அறிய நடிகை ஜெயலட்சுமியைத் தொடர்பு கொண்டோம். `` அவர் கொஞ்சம் பிஸியாக இருக்கிறார்" எனத் தெரிவித்த அவரின் வழக்கறிஞர் சார்லஸ், பா.ஜ.க-வில் ஜெயலட்சுமி இணையவிருப்பது குறித்து விரிவாகப் பேசினார்.

`` தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார் நடிகை ஜெயலட்சுமி. அண்மையில் பிரபலங்களுக்கு எதிராக `மீ டூ ' என்ற இயக்கத்தின் மூலம் அதிர்ச்சிகர குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர் சினிமா உலகைச் சேர்ந்த பெண்மணிகள் சிலர். நாடு முழுவதும் `மீ டூ ' புகார்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தவர் நடிகை ஜெயலட்சுமி.

கடந்த 2018-ல் நடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்அப்பில் பாலியல்ரீதியான தகவல் அனுப்பப்பட்டது. அதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தனர்.

இந்தியாவில் நடந்துவரும் பா.ஜ.க-வின் ஆட்சி மீது ஏற்பட்ட நம்பிக்கை, பிரதமர் நரேந்திரமோடியின் மீதான ஈர்ப்பு ஆகிய காரணங்களுக்காக பா.ஜ.க-வில் இணைவது தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி ஆலோசனை நடத்தினார்.

நடிகை ஜெயலட்சுமி
நடிகை ஜெயலட்சுமி

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடமும் பேசினார். இதன் தொடர்ச்சியாக, இன்று தி.நகரில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொன்னாரைச் சந்தித்துவிட்டு, பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார். தமிழக பா.ஜ.க மூலம் மக்கள் பணியாற்றுவதே ஜெயலட்சுமியின் ஆசை" என்றார்.