Published:Updated:

டார்கெட் ராமதாஸ்... ஆயுதம் விஜயகாந்த்! அ.தி.மு.க-வின் வில்லன் வியூகம்

ராமதாஸ்
ராமதாஸ்

அ.தி.மு.க-வின் இந்த வியூகத்தை எப்படி உடைக்கப்போகிறார் என்பதில் இருக்கிறது ராமதாஸின் 30 வருட அனுபவ அரசியல்.

``எப்படிண்ணே இருக்கீங்க. நம்ம வேட்பாளர் ஜெயிச்சுட்டாருல, அதான் உங்ககிட்ட வாழ்த்து வாங்கலாம்னு வந்தோம்...", சிரித்தபடியே விஜயகாந்திடம் கூறுகிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். ``ரொம்ப சந்தோஷம்ங்க. உங்க உழைப்புக்கு கிடைச்ச வெற்றி இது" என வாழ்த்துகிறார் விஜயகாந்த்.

விஜயகாந்த் சி.வி.சண்முகம்
விஜயகாந்த் சி.வி.சண்முகம்
ஸ்டாலின் Vs ராமதாஸ்... பற்றி எரியும் விவகாரம்... ரசிக்கும் அ.தி.மு.க!

விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற கையோடு, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தைப் பார்க்க புதிய எம்.எல்.ஏ முத்தமிழ்ச்செல்வனுடன் சி.வி.சண்முகம் சென்றபோதுதான் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது. விஜயகாந்தே எதிர்பார்த்திராத இச்சந்திப்பு அக்.25-ம் தேதி அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரு டஜன் பேர் இருக்க, எதற்காக விஜயகாந்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது அ.தி.மு.க? அங்கேதான் ஒளிந்திருக்கிறது ராமதாஸ் எதிர்ப்பு அரசியல்.

இந்த இடைத்தேர்தலை பா.ம.க-வுக்கு மிக முக்கியமானதாக ராமதாஸ் கருதினார். நாடாளுமன்றத் தோல்வியால் துவண்டிருக்கும் கட்சியினரை உசுப்பேற்றவும் வன்னியர்கள் மத்தியில் இன்றும் தான் ஒரு ஆளுமைதான் என பறைசாற்றவும் இத்தேர்தலை ராமதாஸ் பயன்படுத்திக்கொண்டார். பிரசாரம் தொடங்கிய சில நாள்களிலேயே, விக்கிரவாண்டி தேர்தல் களம், தி.மு.க - பா.ம.க கருத்து மோதலாக உருவெடுத்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்
 “இதற்கு முன்பு பஞ்சமி நில மீட்புக்கு குரல்கொடுத்திருக்கிறாரா ராமதாஸ்?”

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு அஸ்திரத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஏவ, அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ராமதாஸ், வன்னியர்களுக்கு தி.மு.க என்ன செய்தது? எனக் கேள்வி எழுப்பினார். அடுத்ததாக பஞ்சமி நிலப் பிரச்னை வெடித்து, முரசொலி அலுவலக வாசல் வரை வந்துள்ளது. விக்கிரவாண்டியில் அ.தி.மு.க வெற்றி பெற்றது தங்களால்தான் என்ரூ இருக்க வேண்டும் என்பதில் ராமதாஸ் கவனமாக இருந்தார். 35 பூத்துகள் அவரது நேரடிக் கண்காணிப்பில் இருந்தன. இதுபோக, பா.ம.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் இரவு பகலாக ஓட்டு வேட்டையாடினர். அதுவரையில் தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அ.தி.மு.க, களத்தில் வன்னியர் சமூக வாக்குகள் தங்கள் பக்கம் திரும்பியவுடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தே.மு.தி.க, த.மா.க, ச.ம.க கட்சித் தலைவர்களை களமிறக்கிய அ.தி.மு.க, அவர்கள் சுழற்சிமுறையில் தொகுதிக்குள் பிரசாரத்தில் இருக்குமாறு அட்டவணையைப் போட்டுக்கொண்டது. தேர்தல் களத்தில் பா.ம.க மட்டுமல்லாது, மற்ற கூட்டணிக் கட்சிகளும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பதாக அ.தி.மு.க காட்டிக் கொண்டது. இவ்வளவு மெனக்கெட்டு பா.ம.க-வின் வீரியத்தை கட்டுப்படுத்த அ.தி.மு.க முனைந்ததற்கு ராமதாஸின் சீட்டுக் கணக்குதான் காரணம்.

தே.மு.தி.க கொடிகளை அறுத்து எறியுமாறு ராமதாஸ் சீறிய காலமெல்லாம் உண்டு. இன்று, ஓரணிக்குள் பயணித்தாலும் இருதரப்பு நெஞ்சுக்குள்ளும் பகை நெருப்பு அணையவில்லை. இதை அ.தி.மு.க சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வை ஜெயிக்க வைப்பதன் மூலம், பா.ம.க பிரசாரத்தால்தான் வன்னியர் வாக்குகள் விழுந்ததாகக் கூறிக்கொள்ள ராமதாஸ் எண்ணினார். இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களில் அதிக எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கீடு பெறுவது அவர் வியூகம். அ.தி.மு.க-வுடன் இல்லாவிட்டாலும், வேறொரு கட்சியுடன் அணி சேரும்போதும் இது பயன்படலாம். ஆவடி, வேலூர், ஓசூர் மாநகராட்சிகளும் அவர் பார்வையில் இருந்தாக பா.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தில்தான், விஜயகாந்த் என்னும் குண்டை வெடிக்க வைத்துள்ளது அ.தி.மு.க

விஜயகாந்த்துக்கும் ராமதாஸுக்குமான மோதலின் வரலாறு நீளமானது. 2005-ல் தே.மு.தி.க-வை தொடங்கிய விஜயகாந்த், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். அதுவரையில் அப்பிரசாரத்தை கையில் வைத்திருந்த ராமதாஸ், தங்களுக்குப் போட்டியாக விஜயகாந்த் முளைத்துவிட்டதை ரசிக்கவில்லை. 2006-ல் தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட தே.மு.தி.க, 8.4 சதவிகித வாக்குகளைப் பெற்று தைலாபுரத்துக்கு பீதியைக் கிளப்பியது.

Vijayakanth
Vijayakanth

விருத்தாசலம் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் ஆர்.கோவிந்தசாமியைவிட 13,777 வாக்குகள் அதிகம் பெற்று, முதல்முறையாக விஜயகாந்த் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். வன்னியர் சமூகத்தினர் மத்தியில் தே.மு.தி.க-வுக்கு அபரிமிதமான வரவேற்பு எழுந்தது. தங்களது 5.6 வாக்குவங்கியில் ஓட்டை விழுந்துவிடுமோ என ராமதாஸ் அஞ்சிய தருணமது. தே.மு.தி.க கொடிகளை அறுத்து எறியுமாறு ராமதாஸ் சீறிய காலமெல்லாம் உண்டு. இன்று, ஓரணிக்குள் பயணித்தாலும் இருதரப்பு நெஞ்சுக்குள்ளும் பகை நெருப்பு அணையவில்லை. இதை அ.தி.மு.க சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

விஜயகாந்த்துக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலமாக, விக்கிரவாண்டி வெற்றியில் பா.ம.க-வுக்கு மட்டுமல்ல, தே.மு.தி.க-வுக்கும் பங்கு இருக்கிறது எனக் கூறிவிட்டனர். இதை ராமதாஸ் எதிர்த்தால், தே.மு.தி.க-வுடன்தான் அவர் சண்டையிட வேண்டியதிருக்கும். சண்டையை மூட்டிவிட்டு அ.தி.மு.க அமைதியாகிவிடும். இந்த முக்கியத்துவத்தை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பிரேமலதா முயன்றால், அவருக்கும் ஒரு செக் வைத்துள்ளது அ.தி.மு.க.

premalatha vijayakanth
premalatha vijayakanth

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க, இரண்டு தொகுதிகளில் டெபாஸிட் இழந்ததோடு, அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. தொடர்ச்சியான இரு தேர்தல்களில் 3 சதவிகித வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்றதால், மாநிலக் கட்சி என்கிற அந்தஸ்தையும் இழக்கவுள்ளது. தங்கள் வசமிருக்கும் முரசு சின்னமும் கையைவிட்டுப் போகும் நிலை. இந்நெருக்கடியில், பேரம் பேசுவற்கு பிரேமலதா முயற்சி செய்தாலும், அது பலிக்காது என்பது அ.தி.மு.க-வின் கணக்கு.

இந்தக் கூட்டல் கழித்தல் கணக்கில்தான், விஜயகாந்த்தை சந்தித்துள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம். அ.தி.மு.க-வின் இந்த வியூகத்தை எப்படி உடைக்கப்போகிறார் என்பதில் இருக்கிறது ராமதாஸின் 30 வருட அனுபவ அரசியல்.

அடுத்த கட்டுரைக்கு