Published:Updated:

`ரஜினி முடிவை யாரால் மாற்ற முடியும்?!' - அமைச்சர் கருத்தின் பின்னணி

ரஜினியின் அரசியல் என்ட்ரி யாருக்குச் சாதகமோ இல்லையோ அது அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக அமைந்துவிடும் என்று கட்சித் தலைமை கருதுகிறது.

``எந்த அமைச்சரும் ரஜினியிடம் பேசமாட்டார்கள். இங்கிருந்து கொண்டு துரோகம் செய்யும் கும்பல் இல்லை. எல்லோரும் எம்.ஜிஆர், ஜெயலலிதா மீது விசுவாசம் கொண்டவர்கள்தான்.”

- தியாகிகள் தினத்தன்று கிண்டியில் உள்ள தியாகிகள் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ``ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ள நிலையில் அமைச்சர்கள் சிலர் அவரிடம் பேசிவருவதாகச் செய்திகள் வருகின்றனவே” எனப் பத்திரிகையாளர்கள் கேட்க, அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்தான் இது.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தயாராகி வருகிறது. அதிலும் ஆளும்கட்சிக்குள் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் வேகமெடுத்து வருகின்றன. கட்சிக்குள் நிர்வாகிகள் அறிவிப்பு, கூட்டணியில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு, சசிகலா வருகைக்குப் பின்பு ஏற்படும் சலசலப்பைச் சமாளிப்பது என்று பலகட்ட தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது அ.தி.மு.க. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி முன்னாள் நிர்வாகியும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான கராத்தே தியாகராஜன் ``நவம்பர் மாதம் ரஜினி கண்டிப்பாகக் கட்சி தொடங்குவார்” என்று மீண்டும் உறுதியாகச் சொல்ல அரசியல் களத்தில் அமைதியாக இருந்த ரஜினி குறித்த பேச்சு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

உண்மையில் அ.தி.மு.க தரப்பு ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்கிற ஐயம் அந்தக் கட்சியைச் சேர்ந்த பலரிடமும் இருக்கிறது. காரணம் பா.ஜ.க தரப்பு ஆரம்பம் முதலே ரஜினியைத் தங்கள் பக்கம் கொண்டுவரும் எண்ணத்தில் இருக்கிறது. அ.தி.மு.க தலைமை வீக்காக இருப்பதால் ரஜினி தலைமையில் அணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று எண்ணியது அந்தக் கட்சி. ஆனால், ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்துத் தொடர்ந்து இழுத்தடிப்பதால் பா.ஜ.க தரப்பும் சோர்ந்துபோய்விட்டது.

ரஜினி - மோடி
ரஜினி - மோடி

இந்தநிலையில், ரஜினி ஒருவேளை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் இயக்கம் கண்டால் என்ன செய்வது என்று சில மாதங்களுக்கு முன்பாகவே அ.தி.மு.க-வில் பேச்சு எழுந்தது. ``அவரால் பெரிய அளவில் தாக்கம் இருக்காது” என்று ஒருபுறம் சொன்னாலும், பா.ஜ.க பின்புலம் அவருக்கு இருந்தால் அது அ.தி.மு.க-வுக்குச் சிக்கலாகிவிடும் என்று அச்சமும் மறுபுறம் இருந்தது. இந்த குழப்படிகளுக்கு மத்தியில்தான் அ.தி.மு.க அமைச்சர்கள் ரஜினியுடன் ரகசிய சந்திப்பு என்கிற செய்தி கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் கசிந்துவந்தது. அந்த அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்குத்தான் மறுப்பைத் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் பேசியபோது, ``ரஜினியின் அரசியல் என்ட்ரி யாருக்குச் சாதகமோ இல்லையோ அது அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக அமைந்துவிடும் என்று கட்சித் தலைமை கருதுகிறது. ஒருவேளை பா.ஜ.க கடைசி நேரத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதி செய்து, ரஜினியும் கட்சியைத் தொடங்கினால் ரஜினியைக் கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க முயலும். முதல்வர் வேட்பாளராக ரஜினியை முன்மொழிய பா.ஜ.க திட்டமிடும். ஏற்கெனவே பா.ஜ.க தரப்பிலிருந்து அப்படி ஒரு உத்தரவாதத்தை ரஜினிக்குக் கொடுத்துள்ளார்கள். ஆனால், ரஜினி தரப்பில், ``அ.தி.மு.க-வின் தற்போதைய தலைமையோடு கூட்டணி வைத்து முதல்வர் வேட்பாளராக தான் களம் இறங்க முடியாது'' என்று ஏற்கெனவே சொல்லியதாகத் தகவல் வெளியானது.

அ.தி.மு.க தலைமைக்கே மாற்று வேண்டும் என்று ரஜினி தரப்பில் வைக்கப்பட்ட டிமாண்ட் எடப்பாடிக்கே கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது. முதல்வர் பதவிக்கும் செக், தலைமைப் பதவிக்கும் வேட்டா என்று நினைத்து ரஜினியின் நிலைப்பாட்டை தெளிவாக அறிய விரும்பினார். அப்போது அவருக்கு நெருக்கமான இரண்டு அமைச்சர்கள் மூலம் ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ``அ.தி.மு.க விவகாரத்தில் தான் தலையிட விரும்பவில்லை'' என்று ரஜினி தரப்பில் சொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் ரஜினியின் அரசியல் மூவ்கள் ஆரம்பித்துவிட்டதாக அ.தி.மு.க தலைமைக்கு சில சமிக்ஞைகைகள் வந்துள்ளன.

அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள்
அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள்

ரஜினியும் கொரோனா ஊரடங்கு காரணமாக யாரையும் சந்திக்காமலிருந்து வருகிறார். இதனால் அவருக்கு நெருக்கமான ஒரு வழக்கறிஞரைச் சந்தித்துள்ளார்கள் மூத்த அமைச்சர்கள் இருவர். அவரிடம் ரஜினி ஒருவேளை கட்சி தொடங்கினால் அ.தி.மு.க என்ன செய்ய வேண்டும், அவரது மூவ் என்னவாக இருக்கும், முதல்வர் பதவி குறித்து அவரது பார்வை போன்ற விவரங்கள் அப்போது பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தியும் வெளியில் கசிந்த பிறகே இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. உண்மையில் அமைச்சர்கள் சிலர் ரஜினி தரப்புடன் தொடர்பில் இருப்பது உண்மை. ஆனால், அவர்கள் ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து எல்லாம் பேசுகிறார்களா என்பது குறித்த வெளிப்படையாக இப்போது சொல்ல முடியாது” என்கிறார்கள் அ.தி.மு.க தரப்பில்.

கந்த சஷ்டி விவகாரம்: வெடி வைத்த வேலுமணி... அ.தி.மு.க - தி.மு.க-வின் ஆடுபுலி ஆட்டம்!

ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு முன்பாகவே அமைச்சர்களுடன் ரஜினி சந்திப்பு நடத்தினாரா என்று ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது,

``கடந்த சில மாதங்களாகவே ரஜினியை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வருகிறார்கள். சிலரின் சந்திப்பு அதிகாரபூர்வ சந்திப்பாக இருக்கிறது. சிலரின் சந்திப்புகள் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் நடந்த ரகசிய சந்திப்புகளாக இருக்கின்றன. அ.தி.மு.க மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள். பா.ஜ.க சார்பில் சில முக்கியப் பிரமுகர்கள், கருணாநிதியின் வாரிசு எனப் பலரும் பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் வைத்து ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்த முடிவுகளை எடுக்க முடியாது. ஆனால், கடைசியாக ஒரு வழக்கறிஞர் மூலம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய விவகாரம் ரஜினியின் காதுக்குச் சென்றுள்ளது. அவரும் இதுகுறித்து விசாரித்திருக்கிறார்.

அ.தி.மு.க மீது உண்மையில் இப்போது ரஜினிக்குச் சரியான நிலைப்பாடு இல்லை. அதனால்தான் சாத்தான்குளம் விவகாரத்தில் கொஞ்சம் காட்டமாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அ.தி.மு.க-வுடன் இணைந்துதான் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று பா.ஜ.க அழுத்தம் கொடுத்தால் அதை ரஜினி ஏற்றுக்கொள்வது சந்தேகம். அவரது அரசியல் பார்வையும் அ.தி.மு.க-வின் பார்வையும் வேறு. ஒருவேளை அவர் கட்சி தொடங்கித் தேர்தலைச் சந்திக்கும் நிலை வந்தாலும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்றால் அ.தி.மு.க-வில் பலருக்கு கல்தா கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். இந்த விவரங்களை அறிந்துதான் அமைச்சர்கள் அந்த வழக்கறிஞரிடம் தங்களது இருப்பை எதிர்காலத்தில் உறுதி செய்துகொள்ளப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கெல்லாம் ரஜினி இடம்கொடுக்க மாட்டார்” என்கிறார்கள் அவர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மூலம் ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் - ரஜினி இடையே சந்திப்பு நடந்துள்ளது. தி.மு.க-வுடன் அப்போது கிஷோர் ஒப்பந்தம் போடவில்லை. அந்தச் சந்திப்பில் கிஷோர் சில வியூகங்களை ரஜினிக்கு வகுத்துச் சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் வழக்கம் போல் கேட்டுக்கொண்ட ரஜினி வணக்கம் சொல்லி கிஷோரை அனுப்பி வைத்தார். அந்த ஐ.ஏ.எஸ் நபர் டெல்லி மேலிடத்திடம், ``நான் ரஜினியைச் சரிக்கட்டுகிறேன்” என்று உறுதி கொடுத்தாகக் கூறப்படுகிறது. அந்தத் தகவல் ரஜினிக்குத் தெரிந்த பிறகு அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பலமுறை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை ரஜினி கொடுக்கவில்லை.

ஒருவர் மீது ரஜினிக்கு மாற்றுக்கருத்து வந்துவிட்டால் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிடுவார். அதிலும் அரசியல் விவகாரத்தில் மிகவும் உஷாராகவே இருக்கிறார். அனைவரிடமும் கருத்துகளை உள்வாங்கிக் கொள்கிறாரே தவிர, முடிவு என்பது அவர் மூளையில் உதிக்கும் விஷயத்தையே செய்கிறார்.

``ரஜினியிடம் பேசிவிட்டோம். ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் பேசிவிட்டோம்” என்று எந்த முடிவை எடுத்தாலும் அது கானல் நீராகவே போய்விடும். ரஜினியின் முடிவை ரஜினி மட்டுமே மாற்ற முடியும்... அது அவரது அரசியல் என்ட்ரியாக இருந்தாலும் சரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு