Published:Updated:

யார் இந்த அஜித் பவார்... சரத்பவாரின் முதுகில் குத்த காரணம் என்ன?

அமலாக்கத்துறை வழக்கை வைத்து பாரதிய ஜனதா கட்சி அஜித் பவாரை மிரட்டி பணிய வைத்துள்ளதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

அஜித் பவார்
அஜித் பவார்

ஒரே இரவில் எல்லாம் மாறியதுபோல... மகாராஷ்டிராவில் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் ஏறியிருக்கிறது பாரதிய ஜனதா. சரி... ஆட்சி அமைத்தாகிவிட்டது... இனி பிரச்னை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தால் அதுதான் இல்லை. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்ற, அடுத்த நிமிடமே, `பாரதிய ஜனதாவுக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை' என்று சரத்பவார் மறுத்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ள இந்த அஜித் பவார் யார், சரத்பவாரின் முதுகில் குத்த என்ன காரணம்?

ரோஹித் பவார், சரத் பவார், சுப்ரியே சுலே, அஜித் பவார்
ரோஹித் பவார், சரத் பவார், சுப்ரியே சுலே, அஜித் பவார்

சரத்பவாரின் மூத்த சகோதரர் ஆனந்த்ராவ் என்பரின் மகன்தான் இந்த அஜித் பவார். 2009-ம் ஆண்டு வரை, சரத் பவாருக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக இவர்தான் வருவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே அரசியலில் களமிறக்கப்பட, கட்சியில் சுப்ரியாவின் கை ஓங்கியது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தன் பேரன் ரோகித் பவாரையும் சரத்பவார் களமிறக்கினார்.

தற்போது ரோகித் பவாரும் எம்.எல்.ஏ ஆகியுள்ளார். சரத்பவாரின் மகள் மற்றும் பேரன் வருகை கட்சிக்குள் அஜித் பவாரின் செல்வாக்கை வெகுவாகக் குறைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ரோகித் பவார் முன்னிறுத்தப்பட்டார். தேசிய அரசியலுக்கு மகள் சுப்ரியா சுலே என்றும் மாநில அரசியலுக்கு பேரன் ரோகித் பவார் என்றும் சரத்பவார் முடிவு எடுத்தார். கட்சியில் தன் முக்கியத்தும் குறைந்ததையடுத்து, தருணம் பார்த்து சரத்பவாரின் முதுகில் அஜித் பவார் குத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அஜித் பவார்
அஜித் பவார்
`பட்னாவிஸின் ரகசிய சந்திப்பு; ஸ்விட்ச் ஆஃப் ஆன அஜித் பவார் போன்!- மகாராஷ்டிரா அரசியல் மாறிய பின்னணி

அஜித்பவார் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதவர். 2012-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக இருந்தார். அப்போது, அவர் வசமிருந்த நீர்வளத்துறை அமைச்சகத்தில் ஊழல் நடந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து , துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் கடும் வறட்சி ஏற்பட்டபோது, `மக்கள் சிறுநீரால் அணைகளை நிரப்பவும்' என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்தச் சர்ச்சை பேச்சுக்கு நாடு முழுவதுமிருந்து அவருக்குக் கண்டனம் குவிந்தது. இதற்கிடையே, மகாராஷ்ட்ர மாநில கூட்டுறவு வங்கியில் ரூ. 25,000 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகக் கூறி கடந்த செப்டம்பர் மாதத்தில் சரத்பவார் மற்றும் அஜித் பவார் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை வைத்து அஜித் பவாரை மிரட்டி மத்திய அரசு பணிய வைத்துள்ளதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ``மும்பை ஒர்லியில் நேற்று சிவசேனா, தேசியாவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், அஜித் பவாரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் எங்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசவில்லை. அவரின் உடல் மொழி வித்தியாசமாக இருந்தது. கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய அஜித் பவார் தன் வக்கீலை சந்திக்கப் போவதாகக் கூறினார். தேவேந்திர பட்னாவிஸ், `அஜித் பவார் இனிமேல் ஆர்தர் ரோடு சிறையில்தான் இருப்பார்' என்று ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். இந்த வழக்கை வைத்து பாரதிய ஜனதா கட்சி அஜித் பவாரை மிரட்டியுள்ளது'' என்கிறார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்
`குடும்ப அரசியல்; ஃபிளாஷ் பேக்!' - பா.ஜ.க வலையில் வீழ்ந்தாரா அஜித் `தாதா' பவார்?

சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே கூறுகையில், ``கட்சிக்கு துரோகத்தை இழைத்துவிட்ட அஜித் பவாருடன் இனிமேல் ஒரு போதும் என் தந்தை சேர மாட்டார். குடும்பத்துக்குள்ளும் அவரால் விரிசல் ஏற்பட்டுவிட்டது'' என்கிறார். இதற்கிடையே, சரத்பாவாருக்கு தெரியாமலேயே அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கடிதம் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் சரத்பவாரும் கேம் ஆடுவதாக மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.