Published:Updated:

``மூன்றாவது அணி என்பது, நானும் பைடனும் கூட்டணி வைப்பது மாதிரி!” - கார்த்தி சிதம்பரம் `நச்’

கார்த்தி சிதம்பரம்

“வெளிப்படையான, துடிப்பான, அடிக்கடி மக்களைச் சந்திக்கும், மக்கள் பார்வையில் படுகிற முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.” - கார்த்தி சிதம்பரம்

``மூன்றாவது அணி என்பது, நானும் பைடனும் கூட்டணி வைப்பது மாதிரி!” - கார்த்தி சிதம்பரம் `நச்’

“வெளிப்படையான, துடிப்பான, அடிக்கடி மக்களைச் சந்திக்கும், மக்கள் பார்வையில் படுகிற முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.” - கார்த்தி சிதம்பரம்

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்

அகில இந்திய காங்கிரஸுக்கான தலைவர் தேர்தலில், ‘சசி தரூர்தான் வெற்றிபெறுவார்’ என்ற காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆரூடம் பொய்த்து, மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றிருக்கிறார். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

“ ‘இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ என்று சசி தரூருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவுசெய்து வந்தீர்கள். சசி தரூரின் தோல்வியில் உங்களுக்கு வருத்தம் உண்டா?”

“இதில் எனக்கு என்ன வருத்தம்... நான் எதிர்பார்த்ததுபோலத்தான் தேர்தல் முடிவு வெளியாகியிருக்கிறது. ஆனாலும், சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றதே மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கிறது.”

ராகுல் காந்தி -சசி தரூர்
ராகுல் காந்தி -சசி தரூர்

“தமிழ்நாடு காங்கிரஸின் இன்றைய நிலை?”

“கர்நாடகாவில் அடுத்த ஆறு மாதங்களில் ஆட்சி அமைக்கப்போகிறோம். ஆனால், தமிழ்நாட்டில் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆட்சிக்கு வந்து. அதைப் பற்றி யாரும் பேசவில்லையே... இப்படியிருக்கும்போது எந்தக் குறியீடை வைத்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வளர்ந்திருக்கிறது என்று சொல்ல முடியும்?”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

``ஏன், கட்சி வளர்ச்சிக்காக நீங்கள் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கலாமே?”

“நான் செய்வதை ஆக்கபூர்வமாக ஏற்பார்களா என்று தெரியவில்லையே... ஓப்பன் மெம்பர்ஷிப்பையே நிறுத்த வேண்டும் என்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்கள், மிஸ்டு கால் கொடுத்து தொண்டர்கள் என்று மெம்பர் ஆக்குவதை நான் ஏற்கவில்லை. ஒரு சட்டமன்றத் தொகுதி என்று எடுத்துக்கொண்டால் நூறிலிருந்து இரு நூறு பேருக்குள்தான் உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாகத்தான் தேர்தல் வைத்து நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து மக்களை நாடிச் செல்ல வேண்டும். அப்படிச் செய்தால் கட்சியின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது தெரிந்து சில திட்டமிடல்களை முன்னெடுக்கலாம்.”

“ஒருவேளை, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட்டால் அதன் முதல்வர் வேட்பாளர் யார்?”

“தனித்துப் போட்டியிடும் தகுதியே இன்னும் காங்கிரஸுக்கு வரவில்லையே... அந்த விஷப் பரீட்சைக்கெல்லாம் போகக் கூடாது.”

சந்திரசேகர ராவ், ஸ்டாலின்.
சந்திரசேகர ராவ், ஸ்டாலின்.

``எதிர்வரும் 2024 தேர்தலில் மூன்றாம் அணி சாத்தியமா... மூன்றாம் அணி தோன்றாமல் இருக்க காங்கிரஸ் கட்சியின் வியூகம் என்னவாக இருக்கும்?”

``மாநிலக் கட்சிகளெல்லாம் கூட்டணி அமைப்பது கூட்டணியே கிடையாது. இதெல்லாம் பேப்பர் கூட்டணி. ஒரு பேச்சுக்கு டி.ஆர்.எஸ்., மம்தாவை எடுத்துக்கொண்டால்கூட என்ன பங்கீடு வைத்துக்கொள்வார்கள்... இது நானும் ஜோ பைடனும் கூட்டணி வைத்துக்கொள்வது மாதிரி. நான் அங்கே சீட் கேட்கப்போவதில்லை. அவர் இங்கே சீட் கேட்கப்போவதில்லை. எனவே, இவர்களெல்லாம் எதற்கு இந்தியாவிலுள்ள கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு, அகில உலக கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ளலாமே. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் அது கூட்டணி. ஒரு தேசியக் கட்சியோடு கூட்டணி வைக்காமல், இந்த மாநிலக் கட்சிகளெல்லாம் ஒன்று சேர்வது கூட்டணியே கிடையாது.”

“மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு மாநிலமாக ஆய்வுக்குச் செல்கிறார்களே?”

“ஒன்றிய அமைச்சர்கள் அவர்கள் அலுவலகத்திலேயே உட்காராமல் ஆய்வுக்குச் செல்வது நல்லதுதானே... இன்று இருக்கும் ‘ரிமோர்ட் வொர்க்கிங்கில்’ எல்லா ஆபீஸும் ஏன் டெல்லியில் இருக்கின்றன. அரசின் சில தலைமை அலுவலகத்தை பல ஊர்களுக்கு மாற்றலாமே... இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். ஏன் எல்லா அமைச்சர்களும் சென்னைக்கு வர வேண்டும்... மதுரை, திருச்சி, கோவை என்று வைத்தால் பல மணி நேரம் பயணம் செய்து சென்னைக்கு வரும் மக்கள் அவர்கள் பக்கத்திலேயே பார்த்துக்கொள்ளலாமே... இதனால் மக்கள் மனநிலை அவர்களுக்கும் புரிவதோடு, மக்களிடம் நேரடியாகத் தொடர்புகொள்ளவும் முடியும்.”

ஸ்டாலின் பேச்சு
ஸ்டாலின் பேச்சு

“தமிழகத்தில் தி.மு.க அரசின் ஆட்சி குறித்து உங்கள் பார்வை?”

“வெளிப்படையான, துடிப்பான, அடிக்கடி மக்களைச் சந்திக்கும், மக்கள் பார்வையில் படுகிற முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். அவருடைய இந்த ஸ்டைலை முழுமையாகப் பாராட்டுகிறேன்.”

“மற்றபடி நிர்வாகம்..?”

“முதல்வரின் செயல்பாடுகளோடு முடித்துக்கொள்கிறேன்.”

இந்தக் கேள்வி பதில்களோடு,

“காங்கிரஸில் நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்த ஜி-23 தலைவர்களில் ஒருவர் சசி தரூர். அவரை நீங்கள் ஆதரிப்பதற்கு ஏதும் உள்ளார்ந்த காரணங்கள் இருக்கின்றனவா?”

“கார்கேவின் வெற்றியை ஜி-23 தலைவர்களின் வெற்றியாக எடுத்துக்கொள்ளலாமா?”

“ ‘யார் தலைவராக வந்தாலும் நேரு குடும்பமே மானசிகத் தலைமையாக இருக்கும்’ என்று பேசியிருக்கிறீர்களே... அப்படியென்றால், புதிய தலைவர் ‘பொம்மை’ என்கிறீர்களா?”

“தமிழ்நாட்டு அரசியலை ‘உணர்ச்சி; கவர்ச்சி; வளர்ச்சி’ என்று விமர்சனம் செய்திருந்தீர்களே?”

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றிய உங்கள் மதிப்பீடு?”

போன்ற கேள்விகளுக்கு தனக்கே உரித்தான துடிப்புடன் 26/10/2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழுக்கு பதில் அளித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.