Published:Updated:

பீலா ராஜேஷ் ஏன் கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டார்? - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

பீலா ராஜேஷ்
News
பீலா ராஜேஷ்

அதிகாலையிலேயே கழுகாரிடமிருந்து `கூகுள் மீட்’ அழைப்பு. மொபைல் ஸ்கிரீனில் பார்த்தால், ஆளைக் காணோம். சற்றுநேரத்தில்... கைகளில் க்ளவுஸ், பாக்கெட்டில் சானிடைஸர், முகத்தில் முகக்கவசத்துக்கும் மேலே கண்ணாடிக் கூண்டு பாதுகாப்புவளையம், தோள்பட்டையில் ஃப்ளாஸ்க் என ஆஜரானார் கழுகார்.

``என்ன கழுகாரே... சந்திரயான் பயண ஏற்பாட்டைவிட பலமாக இருக்கிறதே!’’

``இன்று முழு ஊரடங்கின் இரண்டாவது அலை ஆரம்பம். அதுவும் இன்று முதல்நாள் என்பதால், வெகு ஜாக்கிரதையாகத்தானே இருக்க வேண்டும். அதிலும் அலுவலகத்துக்கு வருவதற்கு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகளை வேறு போட்டு வைத்திருக்கிறீர்” என்ற கழுகார்,

``சரி, நள்ளிரவிலிருந்து முழு ஊரடங்கு ஆரம்பமாகிவிட்டது. காவல்துறையின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்று விடிய விடிய ரவுண்ட்ஸ் சென்றேன். வெகு சிறப்பான ஏற்பாடுகள். வி.ஐ.பி வாகனங்களைக்கூட மடக்கி தைரியமாக விசாரித்த காவலர்களைக் கண்டபோது பெருமையாக இருந்தது. அவர்களைச் சுயமாக செயல்படவிட்டால் நாடே நன்றாக இருக்கும். ஆனால், எங்கே விடுகிறார்கள்” என்று பெருமூச்சு விட்டவர், ``முத்தாக பத்து `தகவல் புதையல்’களை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளேன்...’’ என்றபடி ஸ்கிரீனிலிருந்து விடைபெற்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இனி லத்தி சார்ஜ்!
ஊர் சுற்றினால் வழக்குப் பதிவு
ஊரடங்கு பணியில் போலீஸார்
ஊரடங்கு பணியில் போலீஸார்

தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கில், போலீஸுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி ஊர் சுற்றுபவர்கள், தேவையில்லாமல் மாவட்ட எல்லை தாண்டுபவர்கள், பிளாக்கில் சரக்கு வாங்க அலைபவர்கள் என `கொரோனா பரப்பாளர்களை’ கடுமையாகவே கவனிக்கும்படி போலீஸாருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பறந்திருக்கிறது. அட்வைஸ் செய்வது, கண்ணியமாகத் திருப்பி அனுப்பிவைப்பது எல்லாம் இந்த ஊரடங்கில் இருக்காதாம். தவறு செய்து கையில் சிக்கினால் வழக்குப்பதிவு நிச்சயம். கூடுதல் போனஸாக `பின்புறம்’ லத்தி சார்ஜும் உண்டாம். கவனம்... கவனம்... கவனம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சருக்கு கொரோனா... அலறும் மூத்த அமைச்சர்கள்!
``டெஸ்ட் எடுத்தா வீட்டுக்குப் போக வேண்டியதுதானய்யா!”

மூத்த அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. ஏற்கெனவே, அவருக்கு சர்க்கரை உச்சத்தில் இருப்பதால், தன்னை கொரோனா தடுப்புக்கான அமைச்சர்கள் குழுவில் இணைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆனால், ``அண்ணே... உங்களைப்போல சீனியரின் வழிகாட்டுதல் அவசியம் வேணும்'’ என்று அவரை வம்படியாகக் குழுவில் இணைத்துள்ளனர் மூத்த அமைச்சர்கள் சிலர். இதையடுத்துதான் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் வில்லங்கம் விளையாடிவிட்டது.

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்

ஜூன் 17-ம் தேதி, மாநகராட்சியின் அம்மா மாளிகையில் ஆய்வுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டத்தில் அன்பழகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். கூட்டத்தில் அன்பழகன் பேசிக் கொண்டிருக்கும்போதுதான், கொரோனா ரிசல்ட் பாசிட்டிவ் என்று தகவல் வந்திருக்கிறது. அப்போதுதான் அவர் ஏற்கெனவே கொரோனா டெஸ்ட்டுக்காக தனது சளியை சென்னை டி.எம்.எஸ்-ஸில் ஒப்படைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தத் தகவலை அறிந்த அந்தக் கூட்டத்தினர் அனைவருக்குமே கடும் அதிர்ச்சி. அன்பழகனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார், அமைச்சர் ஜெயக்குமார். சற்றுத்தள்ளி அமர்ந்திருக்கிறார், அமைச்சர் வேலுமணி. மாநகாரட்சிக்கே பாடம் எடுக்கும் ஆணையாளர் பிரகாஷும் அந்தக் கூட்டத்தில் ஆஜர்.

அதிர்ச்சியடைந்த மூத்த அமைச்சர்களில் ஒருவர், ``யோவ் டெஸ்ட் எடுத்தா நேரா வீட்டுக்குப் போய் க்வாரன்டீன்ல இருக்க வேண்டியதுதானே... இங்கு எதுக்குய்யா வந்த?” என்று உச்சஸ்தாயில் கத்தி தீர்த்துவிட்டாராம்! அலறி அடித்துகொண்டு ஓடியிருக்கிறார்கள் அதிகாரிகள், அமைச்சர்கள்! இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. ரிசல்ட்டுக்காக பீதியுடன் காத்திருக்கிறார்கள்!

அவதிப்பட்ட சீனியர் ஐ.ஏ.எஸ்

சமீப நாள்களாக, அதிகார பீடத்தின் மேல்மட்ட அளவில் கொரோனா பீதி ஆட்டிப்படைக்கிறது. கோட்டையில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அறிகுறி இல்லை என்றாலும், அனைவருக்குமே கொரோனா டெஸ்ட் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மூத்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வீட்டுக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் டெஸ்ட் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். அவர்களிடம் அதிகாரத் தோரணையில், ``எனக்கே டெஸ்ட்டா... யாரைக் கேட்டு வந்தீர்கள், உங்களை அனுப்பியது யார்? இதோ போனை போட்டு உங்களை வேலையை விட்டே தூக்குகிறேன் பார்” என்றெல்லாம் சவடால் விட்டிருக்கிறார் மூத்த அதிகாரி.

பணியாளர்களோ, அரசின் உத்தரவை பொறுமையாக விளக்கி, ``அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும்தான் பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறார்கள்” என்று அவரை சமாதானப்படுத்தி, பரிசோதனைக்கு சம்மதிக்கவைத்திருக்கிறார்கள். அப்படியும் ரொம்பவே பிகு செய்துகொண்டு மூக்கைக் காட்டியிருக்கிறார். மூக்கிலிருந்து சளி எடுக்க முற்பட்டபோது, பலமுறை ``டோன்ட் டச்... டோன்ட் டச்...” என்று சத்தம்போட்டு விலகினாராம். இந்த தள்ளுமுள்ளுவில், சுகாதாரப் பணியாளர் ஒருவர் தவறுதலாக மூக்கில் பரிசோதனைக் கருவியைக்கொண்டு பலமாகக் குத்திவிட்டாராம். கொட்டிய ரத்தத்தைப் பார்த்துவிட்டு, அருகிலிருந்தவர்கள் அலறிவிட்டார்கள். ஒருவழியாக பெரும்பாடுபட்டு ரத்தப்போக்கை நிறுத்தியுள்ளனர். ``இதுக்கு கொரோனாவே பரவாயில்லையப்பா” என அந்த சீனியர் ஐஏஎஸ் அதிகாரி புலம்பித் தீர்த்துள்ளார்.

தனிச்செயலர் மரணம்
வேண்டாமே அலட்சியம்!

முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய தனிச்செயலர் தாமோதரன், கொரோனாவுக்குப் பலியாகியிருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. மறுபடியும் இருமல், காய்ச்சல் வந்தபோது `நமக்கு தான் கொரோனா நெகட்டிவ் ஆச்சே’ என்று அலட்சியமாக இருந்துள்ளார். இந்த அலட்சியம்தான் மரணம் வரை சென்றுவிட்டது. அலுவலகத்தில் இருக்கும்போதே சோர்ந்து விழுந்தவரை, ஒரு காவலரை வைத்துதான் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுள்ளனர். இப்போது, அந்தக் காவலருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அனைவரும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவருடன் அலுவலகப் பணியில் இருந்த எட்டு ஊழியர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் 3,000 பேர் தற்போது பணிக்கு வருகிறார்கள். அவர்களில் 300 பேர் (குடும்ப உறுப்பினர் உட்பட) வரை வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்களாம். மேலும், ஜூன் 18 நிலவரப்படி, 550 பேர் கொரோனா டெஸ்ட் செய்ய போயிருக்கிறார்கள். இவர்களுக்கு ரிசல்ட் வரவேண்டியதுதான் பாக்கி என்கிறார்கள்.

வேளாண் துறையில் கொடிகட்டிப் பறக்குது வசூல்வேட்டை!

வேளாண்மைத் துறையில் சமீபத்தில் இணை இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், திருச்சி மாவட்டத்தில் முக்கியமான ஒரு பொறுப்பை மட்டும் நிரப்பாமல் நிறுத்தி வைத்துள்ளனர். துறை சார் மேலிடத்தின் பி.ஏ ஒருவர், தன் உறவினருக்காக அந்தப் பதவியை ரிசர்வ் செய்துவைத்திருப்பதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன. அடுத்ததாக, துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் 40 துணை இயக்குநர் பொறுப்புகளை நிரப்புவதற்கு கோப்புகள் நகர்கின்றன. ரேட் மூன்று முதல் ஐந்து `எல்’ என்கிறார்கள். உரப் பிரிவு சம்பந்தப்பட்ட உயரதிகாரி ஒருவர்தான் கலெக்‌ஷன் ஏஜென்ட்டராக தென் மாவட்டங்களில் முகாமிட்டிருக்கிறாராம். ஏற்கெனவே, இணை இயக்குநர் பொறுப்புக்கு தலா ஆறு லட்ச ரூபாய் வீதம் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஏரியாக்களில் இவர் பக்காவாக வசூலித்துத் தந்ததால், இவரிடமே இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. துறை மேலிட வாரிசு கொடுத்துள்ளதாம். இந்த வசூல் வேட்டைக்காக அரசாங்க வாகனம், உதவிக்கு ஒரு நிர்வாக அலுவலர் என இவர் ரவுண்டு அடிப்பதைப் பார்த்து நேர்மையான அதிகாரிகள் நொந்துகொள்கிறார்கள்!

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

``அமைச்சராக இருந்தும் மரியாதை இல்லை!”

சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஆவடி நகரச் செயலாளர் தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவருக்காக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தரப்பிலிருந்து காவல் துறையிடம் பேசப்பட்டதாம். ஆனால், தீனதயாளனுக்கு எதிர்க் கோஷ்டி அமைச்சர் பெஞ்சமின் என்கிறார்கள். அவர் தரப்பிலிருந்து தீனதயாளனைக் கைதுசெய்தே ஆகவேண்டும் என்று அழுத்தம் கொடுக்க... அப்செட் ஆகிவிட்டதாம் மாஃபா தரப்பு. `சொந்தத் தொகுதியில் கட்சிகாரருக்குக்கூட உதவி செய்யமுடியவில்லை’ என்று புலம்புகிறார்கள், அமைச்சர் மாஃபா-வின் ஆதரவாளர்கள்!

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

“அதிக ஆர்வம்... பதவிக்கு ஆகாது!” பீலா கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

பீலா ராஜேஷை கொரோனா தடுப்புப் பணிகளுக்காக கிருஷ்ணகிரிக்கு மாற்றியிருக்கிறார்கள். இதன் பின்னணியிலும் அரசியல் இருக்கிறதாம். அவரை சுகாதாரத்துறையிலிருந்து மாற்றி வணிக வரித்துறையின் செயலாளராக நியமித்தார்கள். ஆனாலும், பழைய ஞாபகத்தில் அவர் சுகாதாரத்துறையில் நடக்கும் சில விஷயங்களை ஆர்வமாகக் கேட்டுவந்தாராம். இந்தத் தகவல் மேலிடத்துக்கு எட்டியிருக்கிறது. முதல்வர் அருகே துவார பாலகர்களாக இருக்கும் பவர்ஃபுல் அதிகாரிகள் இருவரும் பேசியே, சென்னையில் பீலா ராஜேஷ் இருக்க வேண்டாம் என்று மாவட்டங்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் லிஸ்ட்டில் பீலா ராஜேஷ் பெயரையும் கோத்துவிட்டார்களாம்!

தலைமைச்செயலகத்தை பூட்டாதிங்க! கறார் உத்தரவு... கலங்கும் ஊழியர்கள்.

கொரோனா உச்சத்தில் இருப்பதால், தலைமைச் செயலகம் மூடப்பட்டது என்றெல்லாம் தகவல் வந்தாலும், முழுமையாக மூடப்படவில்லையாம். தலைமைச் செயலகத்தை முற்றிலுமாக மூடிவிட்டால், `தமிழக அரசின் செயல்பாடுகள் முடங்கிவிட்டன. முதல்வரும் சேலத்துக்கு சென்று ஒளிந்துக்கொண்டார்' என்று பேச்சுகள் வரும் என்பதால், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு 33 சதவிகிதம் பேர் பணிக்கு வர வேண்டும் என்று கண்டிப்பான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்! தவிர, ஜூன் 19-ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலகட்டத்தில் உள்துறை, பொதுத்துறை, தொழில் துறை, தொழிலாளர் துறை ஆகிய துறைகளில் 50 சதவிகித பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதனால், கொரோனா பீதியிலும் கலக்கத்திலும் இருக்கிறார்கள் ஊழியர்கள்!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

முதல்வர் எடுத்த ஆக்ஷன்!  

``ஜூன் 12-ம் தேதி, மேட்டூர் அணையை டெல்டா பாசனத்துக்காக முதல்வர் திறந்துவைத்தார். அன்று மாலை, சேலத்தில் உள்ள முதல்வர் வீட்டில்வைத்து முன்னாள் தி.மு.க வி.ஐ.பி-யும் இயற்கை நீர் வள பாதுகாப்பு இயக்கத்தின் தமிழகத் தலைவருமான கே.பி. ராமலிங்கம் சந்தித்தார். அப்போது, ``தண்ணீரைத் திறந்துவிட்டீர்கள். ஆனால், டெல்டா மாவட்டங்களில் ஆறு, கால்வாய்கள் இன்னும் சரிவர தூர் வாரப்படவில்லை” என்று சொன்னாராம். உடனே முதல்வர், ``எந்தெந்த ஏரியாக்களில் அப்படி உள்ளது?” என்று விசாரித்து உதவியாளர் மூலம் குறிப்பெடுத்துக்கொண்டாராம். ஸ்பாட்டிலேயே பொதுப்பணித்துறை செயலாளரை போனில் கூப்பிட்டு, விவரங்களைச் சொல்லி, ``தண்ணீர் அங்கு வந்து சேர்வதற்குள் பணிகள் நடந்திருக்க வேண்டும்!” என்று உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து ஜூன் 18-ம் தேதி நிலவரப்படி, காவிரி தண்ணீர் வருவதற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் தூர் வாரும் பணிகள் நடந்துவருவதையும், சில இடங்களில் வேலை முடிந்துவிட்டதையும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கே.பி.ராமலிங்கத்திடம் உறுதிபடுத்தியிருக்கிறார்களாம்.

``எல்லாம் சரி... டெல்டாவில் சரிவர தூர்வாரப்படவில்லை என்பது பொதுப்பணித்துறையைத் தனது கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு தெரியாமல் போனது எப்படி?” என்று கேள்வி எழுப்பிய கழுகார், ``ஊரடங்கு காலத்தில் உமது நிருபர்களை எல்லாம் பாதுகாப்பாக பணிபுரியச் சொல்லும்...” என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு பறந்தார்!