Published:Updated:

`ஒரே தேசம்... ஒரே தேர்தல்!’ - ஓயாத சர்ச்சை!

தேர்தல் ஆணையம்
News
தேர்தல் ஆணையம்

`ஒரே தேசம், ஒரே தேர்தல்’ திட்டத்தைக் கொண்டுவர எண்ணினால் பல மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை ஐந்து ஆண்டுகளைக் கடந்து நீட்டிக்க வேண்டும்.

பா.ஜ.க-வின் நீண்டகாலக் கனவுத் திட்டமான `ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்த பேச்சுகள் மீண்டும் வலுப்பெற ஆரம்பித்திருக்கின்றன. `` `ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்பது விவாதிக்க வேண்டிய விவகாரம் அல்ல. அது நாட்டுக்கு அவசியம் தேவை” என்று முழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி.

மோடி
மோடி

2014-ம் ஆண்டு பா.ஜ.க -அகில இந்திய அளவில் தனிப்பெரும்பான்மையுடன் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றது. அப்போது பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டார். பிரதமரானது முதல், `ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்த தன் எண்ணத்தையும் வெளிப்படையாகவே அறிவித்தார் மோடி. இது குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுவதும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலக் கட்சிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் அப்போது தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசும் பல மாநிலக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இந்தநிலையில், குஜராத் மாநிலம் கேவடியா என்ற இடத்தில் மாநில சட்டமன்ற சபாநாயகர்கள், பேரவைச் செயலாளர்கள், நாடாளுமன்றச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தக் கூட்டத்தில் அவர், ``நமது நாட்டில் எப்போதும் ஏதாவது ஓரிடத்தில் தேர்தல் நடந்துகொண்டே இருக்கிறது. இதனால் நாட்டின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அனைவரும் அறிந்த ஒன்று. இதை தடுக்கவே `ஒரே தேசம், ஒரே தேர்தலி’ன் அவசியத்தை நாம் சொல்லிவருகிறோம். இதை விவாதத்துக்குரிய விவகாரமாக பலரும் பார்க்கிறார்கள். ஆனால், இது நாட்டுக்கு அவசியமானஒன்று” என்று பேசியிருக்கிறார். மேலும் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' முறை நடைமுறைக்கு வந்தால் ஒரே வாக்காளர் பட்டியலையே பயன்படுத்திக்கொள்ளும் நிலை உருவாகும் என்றும், தனது அரசு இதற்கான முயற்சியில் இறங்கும் என்றும் மோடி பேசியிருக்கிறார்.

ஏற்கெனவே பா.ஜ.க மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. `ஒரே நாடு, ஒரே மொழி', 'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' எனப் பல திட்டங்களை பா.ஜ.க முன்வைத்திருக்கிறது. இந்தியா என்பது பல பிராந்தியங்களை உள்ளடக்கிய குடியரசு நாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், `இந்த நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர பா.ஜ.க அரசு முயல்கிறது’ என்று எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

மோடி
மோடி

இந்தநிலையில், இப்போது மீண்டும் `ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்த பிரச்சனையும் எழுந்திருக்கிறது. இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் தொடங்கி 1967-ம் ஆண்டு வரை நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே தேர்தலாகவே நடந்துவந்தது. ஆனால், அதன் பிறகு மத்தியில் ஆட்சி கலைந்த பிறகு இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இப்போது மாநிலங்களில் தேர்தல் தனியாகவும், மக்களவைத் தேர்தல் தனியாகவும் நடந்துவருகின்றன. இதில், மக்களவைத் தேர்தலுக்கான செலவுகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. மாநிலத்துக்கான தேர்தல் செலவுகளை மாநில அரசு பார்த்துக்கொள்கிறது. `இதனால், இரட்டைச் செலவு ஏற்படுகிறது. கால விரயமும் ஏற்படுகிறது. ஒரே தேர்தலாக இருந்தால் இந்தச் செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்’ என்பதே மத்திய அரசின் வாதம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விஷயத்தில் பல சிக்கல்களும் இருக்கின்றன என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். குறிப்பாக, ``நமது அரசியல் அமைப்பு சட்டப்படி மத்திய அரசோ, மாநில அரசோ மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்கிற கால அளவை நிர்ணயம் செய்திருக்கிறது. இந்த ஐந்தாண்டு காலத்துக்கு முன்பாக பெரும்பான்மை இல்லாமல் போனால், அந்த அரசு கலைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், `ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்கிற முறை வந்தால் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து, மத்திய அரசு கலைக்கப்பட்டால் அப்போது அனைத்து மாநில அரசுகளின் நிலை என்ன என்கிற கேள்வி எழுகிறது. ஆனால், அப்படி பெரும்பான்மை குறித்த கேள்வி எழுப்புபவர்கள் வேறு ஒரு நபரை பிரதமராகத் தேர்வு செய்து பரிந்துரை செய்த பிறகே பெரும்பான்மைக்கான தேர்வை நடத்த முடியும் என்கிற விதியைக் கொண்டுவரலாம்’’ என்கிறார்கள்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மற்றொரு தரப்பிலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்றவே மோடி துடிக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் சொல்கிறார்கள். `ஒரே நாடு, ஒற்றை ஆட்சி' என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்துக்கு இந்த ஒரே தேர்தல் முறை வழிவகை செய்யும். குறிப்பாக அரசியல் சட்டத் திருத்தத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்கிறார்கள். அமெரிக்க நாட்டில் உள்ளதுபோல நிலையான கால அளவு ஒரு கட்சியின் ஆட்சியை நடத்துவது. அதாவது ஒருமுறை பிரதமராக ஒருவர் தேர்வு செய்யப்பட்டால் அவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள் முழுமையாக இருக்க வேண்டும். பெரும்பான்மை பலத்தை வைத்து மாற்ற முடியாதபடி, இந்தச் சட்டத்தைக் கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. கிட்டத்தட்ட சர்வ அதிகாரமிக்க ஒருவரைத் தலைமை பொறுப்புக்குக் கொண்டுவந்து அவரைவைத்து ஐந்து ஆண்டுகள் தங்களது எண்ணங்களை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ளவே இந்த யுக்தி என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அதேபோல் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலோடு ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்தைக் கொண்டுவர எண்ணினால் பல மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை ஐந்து ஆண்டுகளைக் கடந்து நீட்டிக்க வேண்டும். அதேபோல், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும். இதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் தனித் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்’’ என்று இதிலுள்ள சிக்கல்களையும் சொல்கிறார்கள்.

பிராந்தியக் கட்சிகள் இதை எதிர்க்கக் காரணமே 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்கிற முறையைப் பின்பற்றினால், பிராந்தியக் கட்சிகளின் செல்வாக்கு சரியும் என்கிறார்கள். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்கும்போது தேசியநலன் சார்ந்த பிரச்னைகளோடு மாநிலப் பிரச்னைகளையும் மக்கள் ஒரே சேர அணுகுவார்கள். தேசியக் கட்சிகளை நோக்கி மக்களின் பார்வை திரும்பும் என்கிற அச்சம் மாநிலக் கட்சிகளிடம் இருக்கிறது.

'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என பா.ஜ.க முன்வைத்துவரும் திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரிடம் கேட்டபோது,`` 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்கிற இந்த கோஷத்தை அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோதே கொண்டுவர முயன்றார்கள். அப்போது, அவர்களால் முடியவில்லை. எனவே, 2018-ம் ஆண்டு ஜனாதிபதியின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தொடரில் இந்தத் திட்டத்தை முன்மொழிந்தார்கள். இவர்கள் இதைக் கொண்டுவர முயல காரணமே நிர்ணயிக்கப்பட்ட ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் பெரும்பான்மை பலத்தை இழந்தாலும், அவரைப் பதவியைவிட்டு நீக்க முடியாது. இது மக்களாட்சித் தத்துவத்துக்கே எதிரானது. ஒரே தேர்தல் என்கிற இந்த விவாதத்தை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களே விவாதித்து, அது இந்த தேசத்துக்கு ஒத்து வராது என்று ஒதுக்கிவைத்துவிட்டார்கள். இதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அஜெண்டாவாகவே பார்க்க வேண்டும். அதிபர் ஆட்சியை இந்தியாவில் புகுத்தி சர்வாதிகாரத் தலைமையை உருவாக்கவே இந்தத் திட்டம் என்கிறார்கள். இந்தியாவை இன்னொரு பாகிஸ்தானாக மாற்றும் திட்டம் என்று இதைக் குறிப்பிடலாம்” என்றார்.

தேர்தல் பிரசாரம்
தேர்தல் பிரசாரம்

உண்மையில் அதிபர் ஆட்சிக்கான முன்னேற்பாடா இந்தத் தேர்தல் யுக்தி என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த கரு.நாகராஜனிடம் கேட்டோம். `` `ஒரே தேசம், ஒரே தேர்தல்' வேண்டாம் என்று சொல்லும் கட்சிகள் எல்லாம் பல ஆண்டுகளாக ஒரே குடும்பத்தின் ஆதிக்கத்தில் உள்ளன. வளர்சிக்காக மட்டுமே இந்த முறையைப் பிரதமர் முன்வைக்கிறார். ஒவ்வொரு வருடமும் நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடந்துவருகிறது. இதனால் அரசுப் பணமும் நேரமும் விரயமாகின்றன. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் வந்தால் செலவினங்கள் குறைவு என்பதைத் தாண்டி, பல முன்னோடித் திட்டங்களை மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செய்ய முடியும். இதில் அதிபர் முறை எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களே இது போன்ற திட்டங்களையும் எதிர்ப்பார்கள்” என்றார்.

'ஒரே தேசம் ஒரே தேர்தல்' குறித்து இருதரப்பாக கருத்துகளைக் கூறுகிறார்கள். தேர்தல் அரசியல் மட்டுமே இன்றும் மக்கள் முடிவை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஜனநாயகத்தை, பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்காத ஒன்றாகவே திட்டங்கள் இருக்க வேண்டும்.