Published:Updated:

பிரதமர் முதல் அண்ணாமலை வரை பாராட்டும் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’... பாஜக-வின் அரசியல் கணக்கு என்ன?

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

`காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு படத்தைப்போல நாடு முழுவதும் புரொமோட் செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. குறிப்பாக பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

பிரதமர் முதல் அண்ணாமலை வரை பாராட்டும் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’... பாஜக-வின் அரசியல் கணக்கு என்ன?

`காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு படத்தைப்போல நாடு முழுவதும் புரொமோட் செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. குறிப்பாக பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

Published:Updated:
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்!’ சமூக வலைதளங்கள் தொடங்கி தேசிய ஊடகங்கள், சட்டமன்றம், நாடாளுமன்றம் என நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு திரைப்படம். 1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள், அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறிய பண்டிட்களின் உண்மைக்கதையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட இந்து பண்டிட்களின் வலியைக் காட்சிப்படுத்துவதாகக் கூறி, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை இந்தத் திரைப்படம் விதைப்பதாக ஏராளமான குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

The Kashmir Files | தி காஷ்மீர் ஃபைல்ஸ்
The Kashmir Files | தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இந்த நிலையில், `காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு படத்தைப்போல நாடு முழுவதும் புரொமோட் செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. குறிப்பாக, `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியானபோதே அதைப் பார்த்த பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். அதைத் தொடர்ந்து, பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் ஹரியானா, உத்தரகாண்ட், கோவா, குஜராத், கர்நாடகம், மணிப்பூர், திரிபுரா மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இந்தத் திரைப்படத்துக்கு 100% வரிவிலக்கு அளித்து முழு ஆதரவு தெரிவித்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைக் காண்பதற்காக, ம.பி முதல்வர் அந்த மாநில காவல்துறையினர்கள் அனைவருக்கும் விடுமுறை அளித்தார். அதேபோல, மணிப்பூர் முதல்வரும் அரசுப் பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். மேலும், தங்களின் ஆட்சி இல்லாத மாநிலங்களிலும்கூட, `காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு வரிவிலக்கு கொடுக்க வேண்டும் என பாஜக-வினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையிலுள்ள ஒரு திரையரங்கில், பொதுமக்களுக்கு சிறப்புக் காட்சியும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

தமிழக பா.ஜ.க
தமிழக பா.ஜ.க

`காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு மாற்றுக் கட்சியினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பவும் கொதித்துப்போன பிரதமர் மோடி, ``பல ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்டிருந்த, மறைக்கப்பட்ட உண்மையை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் காட்டியிருக்கிறது. இது போன்ற படங்கள் மூலம், மக்கள் உண்மையை அறிந்துகொள்வதோடு, கடந்தகாலங்களில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதையும் புரிந்துகொள்கிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பேச்சு சுதந்திரத்துக்காகக் கொடி ஏந்தியவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கடந்த 5-6 நாள்களாகக் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்தப் படத்தைப் புகழ்வதற்கு பதிலாக, இழிவுபடுத்திப் பிரசாரம் செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்! நமது எம்.பி-க்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்!" என நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அதேபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ஆதரித்தும், காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி எல்லா பக்கங்களிலுமிருந்தும், எல்லா இடத்திலிருந்தும் பா.ஜ.க-வினர் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, புரொமோட் செய்வதற்குக் காரணம் என்னவென்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

`` `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் காஷ்மீரில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக, மத அடிப்படைவாதிகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு மோசமான, கொடூரமான இன அழிப்பைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதம் எப்படித் தலையெடுத்தது, அது எப்படியெல்லாம் இந்து பண்டிட்களை பலிவாங்கியது, மதவாதத்தினால் நம் நாடு எப்படி மோசமான நிலையை அனுபவித்தது என்பதையெல்லாம் மிகத் தெளிவாக உலகுக்குச் சொல்லியிருக்கிறது. இடம்பெயர்ந்த இந்து பண்டிட்களுக்காக, கிட்டதட்ட 32 வருடங்களாக பா.ஜ.க குரல்கொடுத்துவருகிறது.

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

இதுநாள் வரை மதவாத அரசியல் செய்துவந்த காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கு எப்போதெல்லாம் ஆட்சி அதிகாரம் வேண்டுமென்று நினைத்தார்களோ, அப்போதெல்லாம் இங்கே பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் விதைத்து, அவற்றுக்குத் தீனிபோட்டு வளர்த்தெடுத்தார்கள். இப்போது இந்தப் படத்தின் மூலம் உண்மை வெளிப்பட்டுவிட்டதால், அதை நாங்கள் செய்கிறோம் என்று கதறுகிறார்கள். இவர்களால், மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட காஷ்மீரி இந்து பண்டிட்களின் சோக வரலாற்றை, மதவாதத்தின் மோசமான விளைவுகளை இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படத்துக்கு பா.ஜ.க தனது முழு ஆதரவை வழங்கியிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதே கேள்வியை முன்வைத்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகுவிடம் கேட்டோம்.

``தேர்தலுக்கு முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், `வீடு வீடாகச் சென்று மோடிக்கு ஆதரவு திரட்டும்விதமாக `கர்கர் மோடி' எனும் இயக்கத்தை நடத்த வேண்டும். அப்படி ஆதரவு திரட்டும்போது ராமர் கோயில் பற்றியெல்லாம் பேசாதீர்கள், எல்லோரும் காஷ்மீர் பிரச்னையையே பேசுங்கள். `காஷ்மீரை நாம் கையடக்கமாக வைத்திருக்க வேண்டுமானால் அது மோடியால், பா.ஜ.க-வால்தான் முடியும்’ என்று பிரசாரம் செய்யுங்கள்' என உத்தரவிட்டார்.

காரணம், இந்தியாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய இடம் காஷ்மீர்தான். எனவே, இந்தியாவில் முஸ்லிம்களை அடக்கிவைக்க வேண்டுமென்றால், முதலில் காஷ்மீரை ஒடுக்கிவைக்க வேண்டும், காஷ்மீர் விவகாரத்தை இந்தியா முழுமைக்கும் மதப் பிரச்னையாக விவாதத்துக்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான், இந்தியாவில் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கு காஷ்மீரைக் காரணமாக வைக்க முடியும். அதனால்தான் இந்தத் திரைப்படத்தை மோடி பாராட்டுகிறார்; பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் வரிச்சலுகை கொடுத்து வரவேற்கின்றன.

தியாகு
தியாகு
விகடன்

உண்மையில், காஷ்மீர் சிக்கலை ஜனநாயக முறையில் தீர்த்துவைப்பதில், பா.ஜ.க அரசுக்கு நம்பிக்கையில்லை! அவர்கள் காஷ்மீர் மக்களை அடக்கி, ஒடுக்கி அவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கவே விரும்புகிறார்கள். முக்கியமாக, காஷ்மீர் சிக்கலை அவர்களின் மதவாத அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். 1990-களில் பா.ஜ.க ஆதரவுடன் மத்தியில் இருந்தது வி.பி.சிங் ஆட்சி, பா.ஜ.க தலைவர் அத்வானி கேட்டதுபோலவே காஷ்மீரில் ஆளுநர் ஜக்மோகன் சிங் அப்போது நியமிக்கப்பட்டார். அவர் ஆளுநராகப் பொறுப்பேற்றபோது, தனது ராஜ்பவனில் இருந்த இஸ்லாமிய பணியாளர்களையெல்லாம் முதல் வேலையாக வெளியேற்றினார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

காஷ்மீர் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, காஷ்மீர் சிக்கலை, பண்டிட்கள் பிரச்னையாக திசைதிருப்ப அப்போது நடந்த தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த பண்டிட்களை வெளியே அழைத்து, முகாம்களில் அமர்த்தினார். அப்படித்தான் பண்டிட்கள் பிரச்னை பெரிய பிரச்னையாக கட்டமைக்கப்பட்டது. இந்தப் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்., உளவுத்துறை என அனைவருக்கும் பங்கிருக்கிறது. காஷ்மீரிகளின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை, ஒரு இந்து-முஸ்லிம் பிரச்னையாக உருமாற்றிவிட்டதன் சூழ்ச்சியே இங்கிருந்துதான் தோன்றியது.

இந்து பண்டிட்கள் மீதான தாக்குதலை, வலியை, மறைக்கப்பட்ட உண்மையை இந்தப் படத்தின் மூலம் கொண்டுவந்திருப்பதாகக் கூறுகிறார்கள். எல்லா உண்மைக்கும் ஒரு முன்வரலாறு, பின்வரலாறு இருக்கிறது. முதலில் காஷ்மீர் எப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது, காஷ்மீரிகளுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகள் எப்படி மீறப்பட்டன, 370 சட்டப்பிரிவு என்ன சொல்லி கொண்டுவரப்பட்டது, காஷ்மீரில் நடத்தப்பட்ட தேர்தல்களில் எப்படி மோசடிகள் நடத்தப்பட்டன, காஷ்மீர் மக்களின் தலைவர் எப்படி விசாரணை இல்லாமல் 11 ஆண்டுக்காலம் சிறையில் வைக்கப்பட்டிருந்தார், எந்தக் காரணத்தால் அங்கு தீவிரவாத குழுக்கள் உருவாகின என்ற பின்னணிகளையெல்லாம் சொல்ல வேண்டும் அல்லவா?

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

ஆனால் அவற்றையெல்லாம் இந்தத் திரைப்படம் செய்யாமல் முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையை மட்டுமே தெள்ளத் தெளிவாக உருவாக்கியிருக்கிறது. சாதாரண பள்ளிச் சீருடை முதல் எல்லாவற்றையும் இந்து-முஸ்லிம் பிரச்னையாக மாற்றுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, மத அரசியல் செய்யும் ஒரு தேவை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. இந்தப் படத்தை இதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறார்கள்" என பதிலளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism