Election bannerElection banner
Published:Updated:

தமிழ் புறக்கணிப்பு: பா.ஜ.க-வுக்கு எதிராக சீமான் முதல் அன்புமணி வரை... நடப்பது என்ன?

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை

எல்லா மேடைகளிலும் திருக்குறள், சங்க இலக்கியம் என முழங்கும் மத்திய பா.ஜ.க, அரசு அறிவிப்புகள் வந்தால் மட்டும் தமிழையும், தமிழக மக்களையும் புறக்கணிக்கின்றது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருக்கிறது. உண்மையில் என்னதான் நடக்கிறது?

மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களும், அறிவிப்புகளும் வெளிவரும் போது அதில் தொடர்ந்து தமிழும் தமிழக மக்களும் புறக்கணிப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. “தமிழகத்திற்கு வரும்போது மட்டும் வெற்றி வேல் வீர வேல் என்பது, தேவைக்கு ஏற்ப திருக்குறள், சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள்காட்டிப் பேசுவது என்று இருக்கும் பா.ஜ.க தலைவர்கள், நேரடியாக தமிழ் மொழி என வரும்போது அதைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்து விடுகிறார்கள்” என தமிழகத் தலைவர் பா.ஜ.க தலைவர்களையும் மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அந்த விமர்சனத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக சமீபத்தில் வெளியான தேசிய கல்விக் கொள்கையை தமிழைத் தவிர பெரும்பாலான தேசிய மொழிகள் வெளியிட்டுள்ளது மத்திய அரசு. பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின் தற்போது தமிழ் மொழியிலும் வெளியிட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை - 2020
தேசிய கல்விக் கொள்கை - 2020

மத்திய அரசின் இந்தச் செயலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், பா.ம.க இளைஞரணித் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தலைவர் அன்புமணி ராமதாஸ் வரை கடும் கண்டனங்களை தெரிவித்திருத்திருந்தனர்

மத்திய அரசால் தொடர்ந்து தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதும் எதிர்ப்புகள் எழுந்ததும் அதற்குத் தீர்வு எழுவதுமாக ஏன் நடக்கிறது என திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனிடம் பேசினோம் “பா.ஜ.க மட்டுமல்ல காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போதிலிருந்தே தமிழுக்கு இதே நிலைமைதான் இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடந்தவை தான் என்பதையும் இதோடு இணைத்துப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் என்பது இடது சாரிகள், வலதுசாரிகள் என எல்லாவற்றையும் தன்னுள் வாங்கி வைத்துக்கொண்ட கலவையான அமைப்பு. அதிலிருந்துதான் 19-ஆம் நூற்றாண்டில் இந்து மகா சபா, 1925-இல் ஆர்.எஸ்.எஸ். அதன் பின்னர் 1950-களில் ஜன சங்கம் என்ற அமைப்பு (இதுதான் பின்னாளில் பா.ஜ.க-வாக மாறியது) எல்லாம் வந்தன. இவர்கள் எல்லாம் காங்கிரஸில் இருக்கும்போதே தமிழுக்கு எதிராகச் செயலாற்றி வந்தார்கள். அதன்பின் அவர்கள் தனியாக ஆட்சிக்கு வந்ததும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான போக்கை மூர்க்கைமாகச் செயல்படுத்துகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் தேசிய கல்விக் கொள்கை மொழி பெயர்ப்பில் தமிழ் தவிர்க்கப்பட்டது.

சுப.வீரபாண்டியன்
சுப.வீரபாண்டியன்

பா.ஜ.க 1990-களின் இறுதியில் வந்த பா.ஜ.க அரசு ஏன் இந்த அளவிற்கு மூர்க்கமாக செயல்படவில்லை என்ற கேள்வி எழும். அப்போது பா.ஜ.க தனிப்பெரும்பான்மையில் இல்லை. மற்றொன்று அதன் கூட்டணியில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. அவற்றை மீறி பா.ஜ.க-வால் செயல்பட முடியவில்லை. அதுமட்டுமல்ல வாஜ்பாய் என்ற மனிதர் மோடியைப் போல ஆர்.எஸ்.எஸ் சொல்லும் அனைத்திற்கும் தலையாட்டியவர் இல்லை.

பா.ஜ.க-வைப் பொறுத்துவரை மதத்தை அரசியல் கட்சியாக்கு, கட்சியை ராணுவமயமாக்கு என்பதுதான். இது திராவிட இனத்திற்கு எதிரான கொள்கை. மேலும், அவர்கள் மொழி, சமூக நீதி ஆகிய இரண்டிலும் திராவிடத்துடன் முற்றிலும் முரண்படுகிறார்கள். எல்லோரும் சமம் என்ற கோட்பாடு அவர்களுக்கு எப்போதும் ஒவ்வாத ஒன்று. வருணாசிரமம், வருண, சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு உடைய சமூகம் என்பதே பா.ஜ.க முன் வைக்கும் ராமராஜ்ய கோட்பாடு. தமிழ்நாட்டிலும் முன்பு இருந்த இந்த ராமராஜ்ய கோட்பாட்டை மீட்க வேண்டும் என்ற அவர்களின் ஆசைக்கு திராவிட இயக்கம் மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது. இந்தியா முழுவதும் காலூன்றியவர்களால் தமிழகத்தில் நுழைய முடியாததற்கு காரணம் திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கோட்பாடுதான் என்ற எரிச்சலும் இருக்கிறது. எனவே அவர்கள் வெளித்தோற்றத்தில் திருக்குறள், பாரதியை மேற்கோள் காட்டியும், தமிழகத்திற்கு வந்தால் தமிழ் தமிழ் என முழங்கியும் இங்கே நுழையப் பார்க்கிறார்கள். ஆனால், அவை எதுவும் இங்கே நடக்காது.

பா.ஜ.க தலைமை அலுவலகம்
பா.ஜ.க தலைமை அலுவலகம்

சமஸ்கிருதம்தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய். அதை உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டாலும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திராவிட இயக்கம் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கிற மறைமலை அடிகள் தொடங்கி கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரும் தமிழும் சமஸ்கிருதமும் எனது இரு கண்கள் என்ற நிலையை உடையவர்களாக இருக்கிறார்கள். எனவே சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை மறுக்கும் தேசம் தமிழகம் என்பதால் அவர்களுக்கு எப்போதும் தமிழகத்தின் மீதும், தமிழ் மீதும் கோபம் இருக்கத்தான் செய்யும். அதை எப்போதும் தமிழ்நாடு எதிர்த்து நிற்கும்” என்றார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகி பேராசிரியர் கனகசபாபதியிடம் பேசினோம் “தற்போது தமிழ் மொழிபெயர்ப்பும் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை செய்ததில் இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்துவிட்ட சிறு பிழை என்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளதோ அதே அளவில் அதில் பிரச்னை இருப்பதையும் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதை சரி செய்து பதிவிடுவதற்குள் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி விடுகிறார்கள். பா.ஜ.க-வும் மத்திய அரசும் தமிழுக்கு எதிரிகளா என்ன? இந்தியப் பிரதமர் எவராவது தமிழ் மொழியை பிரதமர் நரேந்திர மோடி அளவிற்கு தனது பிரசார மேடைகளில் பயன்படுத்தியது உண்டா? தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது உண்டா? அப்படியிருக்கும் போது எப்போது பிரதமரை தமிழ் மொழிக்கு எதிரியாக சித்திரிப்பதிலேயா எதிர்க்கட்சியினர் கவனமாக இருக்கிறார்கள்.

பேராசிரியர் கனகசபாபதி, தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர்
பேராசிரியர் கனகசபாபதி, தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர்

தேசிய கல்விக் கொள்கையின் மொழி பெயர்ப்பு தமிழில் மட்டுமல்ல சிந்தி உள்ளிட்ட இன்னும் சில மொழிகளில் கூட அப்போது பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள். எப்போதும் பிரதமர் தமிழுக்கும் அதன் தொன்மைக்கும் மதிப்பளிப்பவராக இருந்திருக்கிறார். இனியும் அப்படித்தான் இருப்பார். அதனால் இதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு