Published:Updated:

கொரோனா லாக்டெளன்: முடிவுகள் எடுப்பதைச் சாதுர்யமாக மாநில அரசுக்குத் தள்ளிவிடுகிறதா மோடி அரசு?

கடந்த முறை முழு முடக்கம் குறித்து தானே முன்வந்து அறிவித்த பிரதமர் மோடி, ``முழு முடக்கம் என்பதை மாநில அரசுகள் கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார். முழு முடக்க அறிவிப்பிலிருந்து மத்திய அரசு ஒதுங்குவது ஏன்?

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக வீசிவருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா முழுவதும் நேற்று (21.04.2021) மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000-க்கும் அதிகமாகப் பதிவாகிவருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில் இறப்பு விகிதம் குறைவாகப் பதிவாகிறது என்பது மிகப்பெரிய ஆறுதல். தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவ வசதிகள் அனைவருக்கும் பரவலாக கிடைக்கும் நிலையில் டெல்லி, குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் தவிக்கும் சூழலே நிலவுகிறது.

இந்தநிலையில், மருந்து நிறுவன உரிமையாளர்கள், அதிகாரிகள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோருடன் பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்ட பிரதமர் மோடி கடந்த 20.04.2021 அன்று, இரவு 8:45 மணியளவில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தவர், ``புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கும் இடத்திலேயே தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாத வகையில் தற்போது பணியாற்றும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்கும் வகையில் அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோடி - மத்திய அரசு
மோடி - மத்திய அரசு

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் பொறுப்பும் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் வருவதை முடிந்தவரை மக்கள் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலிருந்து பணிபுரிவதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். மேலும், முழு ஊரடங்கு சூழல் மீண்டும் வராமல் தடுப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை அதிகப்படுத்துவதன் மூலம் முழு ஊரடங்கைத் தவிர்ப்பதோடு அதைக் கடைசி ஆயுதமாகவே மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும்” எனவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

`இரவுநேர ஊரடங்கு; ப்ளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு..!’ -  தமிழகத்தில் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் செல்லும் இந்தச் சூழலில் கட்டுப்பாடுகள் விதிப்பதை மாநிலங்கள் கையில் கொடுத்துவிட்டு மத்திய அரசு ஒதுங்கிக்கொண்டதா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் பேசினோம். ``கடந்த முறை மத்திய அரசு செயல்படுத்திய முழு அடைப்பு மிகப்பெரிய தோல்வி அடைந்தது. உழைக்கும் மக்கள் பல நூறு கி.மீ-கள் நடந்து சென்று மிகுந்த சிரமத்தைச் சந்தித்தார்கள். பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் மத்திய அரசின் முழு அடைப்பு உத்தரவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. அகமதாபாத்திலிருந்து மும்பை வரை நடந்து செல்வது என்றால் எளிதான காரியமா என்ன? துக்ளக் தர்பார் மாதிரி செயல்பட்ட மத்திய அரசால் எத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள்! எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல், மாநில அரசுகளுடன் கலந்தோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டதன் விளைவு மிகவும் மோசமாக இருந்தது. கட்டுப்பாடுகளை அறிவிக்கும் விஷயத்தை மாநில அரசுகளின் கைகளில் கொடுத்திருந்தால் இவ்வளவு சிக்கல்களை மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். அதனால்தான் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் அதை எதிர்த்தன. தமிழக அரசுக்கு நிலைமையின் தீவிரம் புரிந்திருந்தாலும், கூட்டணியில் இருக்கிறோம் என்று வழக்கம்போல அதை எதிர்க்காமல் இணக்கம் காட்டினார்கள்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

முழு அடைப்பை, கட்டுப்பாடுகள் விதிப்பதை மாநில அரசுகள் கையாள்வதுதான் சரி என்பதை தற்போது மத்திய அரசு உணர்ந்துகொண்டிருக்கிறது. இதுவும் மாநில அரசுகளின் அழுத்தத்தால் நடந்ததே தவிர அவர்களுக்காக வந்த ஞானம் இல்லை. எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களிடையே ஏற்பட்ட வெறுப்பை உணர்ந்துகொண்டு தற்போது மாநில உரிமைகளில் தலையிடாமல் மத்திய அரசு ஒதுங்கிக்கொண்டிருக்கிறது. ஒருவகையில் அதுவும் நன்மைக்குத்தான்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து பா.ஜ.க-வின் மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினோம்... “கொரோனா தொற்று நமக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே புதிய நோயாக இருந்தது. அதனால்தான் மத்திய அரசு கடந்த முறை அதைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை மாநில அரசுகளுக்குக் கூறி முன்னின்று வழிநடத்தியது. இப்போது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டதால், மாநில அரசுகளே இந்த நோயின் தன்மைக்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மிகத் தெளிவான பார்வைகொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, உள்ளூரில் எந்தெந்த இடத்தில் நோய் அதிகமாக இருக்கிறது, எந்தெந்த இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் என்று மாநில அரசுகளே புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கின்றன. மத்திய அரசு ஏற்கெனவே கொரோனா தொற்று பரவல் தீவிரத்தின் அடிப்படையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. எனவேதான் இந்த முறை கட்டுப்பாடுகள் விதிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தாமல் மருத்துவ வசதிகளின் தேவையை முறைப்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் போன்றவற்றின் தேவையைப் பூர்த்தி செய்வதில்தான் தற்போது மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. அதுதான் தற்போதைய தேவையும்கூட இல்லையா? தற்போது கொரோனா தொற்று பரவலுக்கு காரணம் மக்கள் மத்தியிலிருந்த அலட்சியமும் காரணம். இந்த இரண்டாவது அலை மிக மோசமாக இருக்கிறது. இதை எல்லோரும் சேர்ந்துதான் சரிசெய்ய வேண்டும்” என விளக்கம் அளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு