Published:Updated:

`பாகிஸ்தானுக்கு எதிராக ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்?’ - காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடி

மோடி
மோடி

``பாகிஸ்தானுக்கு எதிராகப் பேச மறுக்கின்றனர். மாறாக, அகதிகளுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்” என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க-வினரும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி குறித்து அவ்வப்போது தங்களது விளக்கங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவிலுள்ள தும்கூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டக்காரர்களையும் காங்கிரஸ் கட்சியினரையும் விமர்சித்து பேசியுள்ளார்.

மோடி
மோடி

``மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மதத்தினர் அங்கு துன்புறுத்தப்படுகின்றனர். துன்புறுத்தப்பட்டவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேச மறுக்கின்றன. மாறாக, அகதிகளுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ``ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள, தங்களது மகள்களின் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள பாகிஸ்தானிலிருந்து இங்கு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகப் பேரணிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்த மக்களைத் துன்புறுத்துகின்ற பாகிஸ்தானுக்கு எதிராக ஏன் மௌனமாக இருக்கின்றன என்ற கேள்வி நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது. சிறுபான்மை மக்களைத் துன்புறுத்தும் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்புங்கள். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகப் பேரணிகளை நடத்துங்கள்” என்றார்.

மோடி
மோடி

மேலும், ``சி.ஏ.ஏ-க்கு எதிராகப் போராடுபவர்கள் பாகிஸ்தானை சர்வதேச அளவில் அம்பலப்படுத்த வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்த சுரண்டல்களுக்கு எதிராக உங்கள் குரல்களை எழுப்புங்கள்” என்றும் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு