``நீங்கள், திப்பு சுல்தானை சுதந்திரப் போராட்ட வீரராக அங்கீகரிக்கிறீர்களா?" கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் செய்தியாளர்கள் சமீபத்தில் எழுப்பிய கேள்வி இது. ``அப்படியெல்லாம் நான் கருதவில்லை. திப்பு சுல்தான் தொடர்பான வரலாற்றை அழிக்கப்போகிறோம்" என சர்வசாதாரணமாக எடியூரப்பா பதிலளித்தார். எடியூரப்பாவின் இந்த பதில், கர்நாடகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில், திப்பு ஜெயந்தி கொண்டாடுவது நிறுத்தப்படும் என்று அறிவித்த எடியூரப்பா அரசு, இப்போது கர்நாடக மாநிலத்தில், திப்பு தொடர்பான பாடங்களை முற்றிலும் நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 10-ந் தேதி திப்பு ஜெயந்தி கொண்டாடப்படும். திப்பு சுல்தான், நாட்டின் ஆரம்பகால விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர் என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து.

சில நாள்களுக்கு முன், குடகு மடிகேரி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ அப்பாச்சு ரஞ்சன், கர்நாடக மாநில கல்வியமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். ``திப்பு சுல்தான் சுதந்திரப் போராட்ட வீரராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். அவர், இந்துக்கள், கிறிஸ்தவ மக்களைப் படுகொலை செய்யப்போவதாகச் சொன்னவர். திப்புவின் ஆட்சி மொழியாக பாரசீக மொழியே இருந்தது. கன்னட மொழிக்கு எதிரானவர் அவர். வருங்கால சந்ததிக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். எனவே, வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, திப்பு பற்றி சொல்லப்பட்ட பொய்யான தகவல்களைப் பள்ளிப் பாடத்திட்டங்களிலிருந்து நீக்க வேண்டும்'' என்று சொல்லப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலத்திலேயே திப்பு சுல்தானுக்கு கடும் எதிர்ப்பு காட்டுகிறார்கள் `குடகு மக்கள்’. இதற்குப் பின்னணியில் சில வரலாற்றுச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
திப்புவை எதிர்ப்பதன் பின்னணி
கர்நாடகத்தில் குடகு மலையின் அழகை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. தமிழகத்துக்கு படியளக்கும் காவிரித் தாய் உருவாகும் மலை. அந்த வகையில், தமிழகத்திலும் குடகு மலை முக்கியத்துவம்பெறுகிறது. தலைக்காவிரியும் இங்குதான் உள்ளது. தேக்குமரம், ஈட்டி மரங்கள் நிறைந்த செழிப்பான வனப்பகுதி. பச்சைப் பசேலென்ற காபித் தோட்டங்கள் நிறைந்த அழகிய மலை. கர்நாடகத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதி. இந்த மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில், குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம் இது. மடிகேரி, இதன் தலைநகரம். வீராபேட், சோமவார்பேட் என்கிற அழகிய இரு நகரங்களும் குடகில் உண்டு. குடகுப் பகுதியில் வசிக்கும் மக்கள் குடவாக்கள் ஆவார்கள். மைசூரை ஆண்ட திப்பு சுல்தான், குடகுப் பகுதியைத் தோற்கடிக்க முடியாமல் வஞ்சகம் செய்து கைப்பற்றியதாக குடவா மக்கள் கருதுகிறார்கள்.

குடகு பகுதியில் உள்ள பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகும் காவிரி, பாகமண்டலா பகுதியில் தன் இரு துணை நதிகளுடன் இணைகிறது. மடிகேரியில் இருந்து இந்த இடம் 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கே, குடகு மன்னர் ஒருவர் சிவனுக்கு பாகண்டேஸ்வரா என்ற பெயரில் கோயில் கட்டியுள்ளார். பழைமையான இந்தக் கோயிலையும் பாகண்டேஸ்வரா சாமியையும் குடவா மக்கள் தங்கள் உயிராக நேசித்தார்கள். கடந்த 1790-ம் ஆண்டு, குடகுப் பகுதியை ஆக்கிரமித்த திப்பு சுல்தான் படைகள், இந்தக் கோயிலை இடித்ததாகவும், இந்தப் பகுதியின் பெயரை அஃபைசலாபாத் என்று மாற்றியதாகவும் குடகு வரலாறு சொல்கிறது. திப்பு படைகள் கோயிலைத் தாக்கியதற்கு ஆதாரமாக, தந்தங்கள் உடைக்கப்பட்ட நிலையில் இரு யானைச் சிலைகள் இங்குள்ளன. திப்பு சுல்தான் வரவால் தங்கள் சுய அடையாளத்தையே இழந்துவிட்டதாக குடவா மக்கள் கருதுகின்றனர்.
குடவா மக்கள் வீரம் செறிந்தவர்கள். அதனால், வீடுகளில் துப்பாக்கியும் வைத்திருப்பார்கள். சண்டை போடுவதிலும் வல்லவர்கள். குழந்தைகள் பிறந்தால், துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார்கள். யாராவது இறந்துவிட்டால் வானத்தை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டு துக்கம் கடைபிடிப்பார்கள். வீட்டின் பூஜை அறையில் கடவுள் படங்களுடன் துப்பாக்கியும் இருக்கும். இந்திய ராணுவத்திலும் குடவாக்கள் அதிகம் பேர் உள்ளனர். வீரம் மிக்க குடவா மக்களை வீழ்த்த திப்பு சுல்தான் 21 முறை படையெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், அவர்களை திப்புவால் தோற்கடிக்க முடியவில்லை. எனவே, குடவா வீரர்களை விருந்துக்கு அழைத்தாராம் திப்பு. தேவதி பரம்பு என்ற இடத்தில் விருந்து நடைபெற்றது. விருந்துக்கு ஆயுதங்கள் இல்லாமல் வந்த குடவா வீரர்களை, திப்பு ராணுவம் கொன்று குவித்துள்ளது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடவா வீரர்களை ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் சென்று மதமாற்றம் செய்தனர் என்று குடகு வரலாறு சொல்கிறது. குடகு மக்கள் திப்புவை எதிர்க்கும் பின்னணி இதுதான்.
திப்பு சுல்தான் எங்கள் மக்களின் எதிரி. அவருக்கு விழா எடுப்பது எந்த விதத்தில் நியாயம்?உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மஞ்சுநாத்
கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி முதல் ஒவ்வோர் ஆண்டும் திப்பு ஜெயந்தி கொண்டாடப்படும் என்று அப்போது கர்நாடகத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு அறிவித்தது. இதனால், குடகில் வெடித்த வன்முறையில் 2 பேர் இறந்தனர். திப்பு ஜெயத்திக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கே.பி. மஞ்சுநாத் கூறுகையில், ``கர்நாடகாவின் ஒரு பகுதி, குடகு. எங்கள் குடவா மக்களை கொத்துக்கொத்தாகக் கொன்றவர் திப்பு சுல்தான். அவருக்கு விழா எடுப்பது எங்களை அவமதிக்கும் செயல்'' என்று குறைகூறியுள்ளார்.
பாடத்திட்டங்களிலிருந்து திப்பு பற்றிய பகுதியை நீக்குவதற்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் தினேஷ் குண்டு ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ``முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திப்பு சுல்தானை ராக்கெட்டுகளின் முன்னோடி என்று கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி வரலாற்றை ஆய்வு செய்வதில்லை. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதும் இல்லை. நாட்டின் உண்மையான பிரச்னைகளை மறைக்க இதுபோன்ற தேவையற்ற விஷயங்களில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபடுகிறது. இது, ஒடுக்குமுறையின் உச்சகட்டம்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.