Published:Updated:

சரத் பவார் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டம்; காங்கிரஸ், தி.மு.க புறக்கணித்தது ஏன்?

சரத் பவார் வீட்டில் நடந்த  கூட்டம்
சரத் பவார் வீட்டில் நடந்த கூட்டம் ( Hindutan times )

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவாரை, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறார். கடந்த 15 நாள்களில் இது மூன்றாவது சந்திப்பு என்பதாலும், பா.ஜ.க அல்லாத மற்ற கட்சித் தலைவர்கள் நேற்று சரத் பவார் வீட்டில் ஒன்றுகூடியதை அடுத்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க-விலிருந்து விலகி, தற்போது திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, 'ராஷ்ட்ரா மன்ச்' என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு சார்பில், பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகளுக்கு தேசிய அளவில் ஆலோசனைக் கூட்டத்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் சரத் பவார் தலைமையில், அவரது இல்லத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில், ராஷ்டிரிய லோக்தள தலைவர் ஜெயந்த் சௌதாரி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, ஆம் ஆத்மியின், சுஷீல் குப்தா, கவிஞர் ஜாவேத் அக்தர், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, முன்னாள் தூதர் சிங், முன்னாள் நீதிபதி ஏபி ஷா கலந்துகொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராஜ்யசபா எம்.பி பினோய் விஸ்வம், மார்க்சிஸ்ட் சார்பில் நிலோட்பால் பாசு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.

சரத்பவார்
சரத்பவார்

முதலில், பா.ஜ.க-வுக்கு எதிராக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளை சரத் பவார் ஒருங்கிணைக்கிறார் என்கிற தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மஜீத் மேனன் அதை மறுத்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸை அழைக்காததால்தான் தி.மு.க கலந்துகொள்ளவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், அழைப்பு விடுக்கப்பட்டும் காங்கிரஸ் கட்சி ஏன் கலந்துகொள்ளவில்லை என அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம்.

``எங்களுக்கும் அழைப்பு விடுத்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கிற கூட்டமாக அது இல்லை. அதனால், முதிர்ச்சியில்லாத ஒரு செயல்பாடாகத்தான் நாங்கள் இந்த முன்னெடுப்பைப் பார்க்கிறோம். சரத் பவார் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்திருந்தாலும் யஷ்வந்த் சின்ஹா, குல்கர்னி ஆகிய இருவரும்தான் இந்த முன்னெடுப்பைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்யட்டும்... அது தவறில்லை. ஆனால், காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட, சஞ்சய் ஜா போன்றவர்களை அழைத்திருக்கும்போது நாங்கள் எப்படிக் கலந்துகொள்ள முடியும்... அதைவிட இவ்வளவு சீக்கிரமாக நாம் போய் அதில் கமிட் ஆக முடியாது. அதனால்தான் தவிர்த்தோம்'' என்கிறார் அவர்.

கோபண்ணா
கோபண்ணா

தி.மு.க ஏன் கலந்துகொள்ளவில்லை என அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டைன்டன் ரவீந்திரனிடம் பேசினோம்.

'' பா.ஜ.க-வுக்கு எதிரான அணி சேர்க்கை என்றோ, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்றோ எங்களுக்குச் சொல்லவில்லை. என்ன செய்யலாம் எனச் சில தலைவர்களை அழைத்து கலந்தாலோசிக்கிறோம் என்றுதான் சரத் பவார் சொல்லியிருக்கிறார். தவிர `என் வீட்டில் நடந்த கூட்டமே தவிர, நான் அழைத்த கூட்டமல்ல’ எனவும் அவர் தெளிவாக விளக்கியிருக்கிறார். யஷ்வந்த் சின்ஹாதான் ஏற்பாடு செய்திருக்கிறார். பா.ஜ.க-வை நாம் கொள்கைரீதியாக எதிர்க்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்து சில காலமே ஆகியிருக்கும்போது கவனமாகவே சில செயல்பாடுகளில் இறங்க முடியும்'' என்கிறார் அவர்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை வீழ்த்த பி.கே-வோடு இணைந்து மம்தாவும் சரத் பவாரும் திட்டமா?

சரத்பவார் இல்லத்தில் நடந்த ஒருங்கிணைப்பு குறித்து, மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

''உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்படி ஒரு ஒருங்கிணைப்பு அவசியமான ஒன்று. மூன்றாவது அணியாக இல்லாமல் காங்கிரஸை உள்ளடக்கிய ஓர் அணி நிச்சயமாக உருவாக வேண்டும். அப்படி ஒன்று அமையாவிட்டால், 2024 தேர்தலில் பா.ஜ.க-வை வெல்வது கடினம். 2022 உ.பி தேர்தலில், பா.ஜ.க ஜெயித்துவிட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எளிதாக வென்றுவிடுவார்கள்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க என்ன செய்கிறது என்கிற கேள்வி வரும். இந்தக் கூட்டத்தில் தி.மு.க கலந்துகொள்ளாதது ஒன்றும் பிரச்னையல்ல. ஆனால், இப்படியோர் அமைப்பு தேவை. அதற்கு தி.மு.க-வின் ஒத்துழைப்பும் தேவை. ஆனால், தி.மு.க இந்த விஷயத்தில் பெரியளவில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சி முதல்வர்களுக்கு ஸ்டாலின், மம்தா, நவீன் பட்நாயக் ஆகியோர் கடிதம் எழுதுகிறார்கள். ஆனால், அதையே எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கானதாக நாம் பார்க்க முடியாது. பெரிய கட்சிகள் என்பதால் அல்ல, ஆளும்கட்சியாகவும், பா.ஜ.க-வை தொடர்ச்சியாக எதிர்த்துவரும் கட்சிகளாகவும் இருப்பதால் தி.மு.க என்ன செய்யும், திரிணமுல் என்ன செய்யும் என்று இந்தியாவே எதிர்பார்க்கிறது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால்தான், பா.ஜ.க-வை வெல்ல முடியும்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு