Published:Updated:

ஜி.டி.பி சரிவு : `காந்தி கணக்கு’க்கும் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

`ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம்’ என்ற பிரதமரின் கனவு எப்போது நனவாகும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், முதலுக்கே மோசம் என்ற அளவுக்கு பொருளாதாரம் படுபாதாளத்தில் விழுந்திருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக மைனஸ் 23.9 சதவிகிதம் என்கிற அளவுக்கு `ஜி.டி.பி' எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துபோயிருக்கிறது. சீனாவைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் ஜி.டி.பி-யும் வீழ்ந்துள்ளது. பிரான்ஸ் 13.8 சதவிகிதம், இத்தாலி 12.4 சதவிகிதம், கனடா 12 சதவிகிதம், ஜெர்மனி 10.1 சதவிகிதம், அமெரிக்கா 9.5 சதவிகிதம், ஜப்பான் 7.6 சதவிகிதம் என வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. மைனஸ் 20 சதவிகிதத்துடன் வீழ்ச்சிப் பட்டியலில் முதலிடத்தை பிரிட்டன் பிடித்திருந்தது. இப்போது, பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மைனஸ் 23.9 சதவிகிதத்துடன் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது இந்தியா.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

''இந்தியப் பொருளாதாரம் இப்படியொரு மோசமான நெருக்கடியைச் சந்திக்கப்போகிறது என்பது பிரதமர் நரேந்திர மோடியையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்திருக்கிறது'' என்று விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய பேரிடர் ஒன்றை சந்திக்கப்போகிறது என்பது தெரிந்திருந்ததால்தான்,`கடவுள் செயல்’ என்ற காரணத்தை முன்கூட்டியே கட்டமைத்துவைத்தார் நிதியமைச்சர்.

`கொரோனாவைக் கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு விதிமுறைகளை இந்தியா அமல்படுத்தியதால், அதன் பாதிப்புகள் பொருளாதாரத்தில் எதிரொலித்துள்ளன’ என்று பொருளாதார நிபுணர்களில் ஒருசாரார் கூறுகிறார்கள். ஆனால், அப்படி கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியபோதும், இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்தியா, இப்போது இரண்டாம் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதிலும் முதலிடத்துக்கு இந்தியா வந்துவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

பிரதமர் மோடி -
பிரதமர் மோடி -

இந்தியப் பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கிறது என்று எதிர்க் கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து எச்சரித்தனர். பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்துவந்தனர். அவற்றையெல்லாம் அலட்சியம் செய்த ஆட்சியாளர்கள், இன்றைக்கு ஒட்டுமொத்த கணக்கையும் தூக்கி கொரோனா தலையில் சுமத்துகிறார்கள். `ஐந்து லட்சம் ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றுவது’ என்பதே தன் கனவு என பிரதமர் மோடி கூறினார். ஆனால், இன்றைக்கு இந்தியப் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியைச் சந்திருக்கும் சூழலில், தஞ்சாவூர் பொம்மை பற்றியும், ராஜபாளையம் நாய் பற்றியும், சிப்பிப்பாறை நாய் பற்றியும்`மான் கி பாத்’தில் உருக்கமாகப் பேசுகிறார். நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

#GDP: வரலாறு காணாத ஜி.டி.பி வீழ்ச்சி... என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

உண்மையிலேயே`ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரம்’ என்ற் பிரதமரின் கனவு அற்புதமானது. ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்றால் ரூ.350 லட்சம் கோடி. அந்த அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறினால், தொழில், வேலைவாய்ப்பு உட்பட பல துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா பெற்றுவிடும். எனவேதான், 2019-ம் ஆண்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தபோது, தன்னுடைய இந்தக் கனவை பிரதமர் வெளிப்படுத்தினார். அப்போது, `இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும்?’ என்ற கேள்வியைப் பலர் எழுப்பினர். அவர்களுக்கு பதிலடி கொடுத்தார் பிரதமர். லக்னோவில் கடந்த ஆண்டு, ஜூன் மாதம் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தை அதற்கு அவர் பயன்படுத்திக்கொண்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் சாத்தியமா என்று சிலர் கேட்கிறார்கள். அப்படிக் கேட்பவர்கள் இந்தியர்களின் திறன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள். `ஐந்து ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கை அடைவது சாதாரணமல்ல’ என்று வாதிடுகிறார்கள். துணிச்சலும், புதிய சாத்தியக்கூறுகளும், வளர்ச்சிக்காகத் தியாகம் செய்யக்கூடிய குணமும், புதிய இந்தியாவுக்கான கனவும் இருக்க வேண்டும். இவை இருந்தால், ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்ற கனவை நனவாக்க முடியும்'’ என்று மோடி கர்ஜித்தார். ஆனால் இன்றைக்கு, இந்தியாவின் ஜி.டி.பி மைனஸில் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவரிடம் கனத்த மௌனத்தைத்தான் காண முடிகிறது. நிதியமைச்சரைப் பொறுத்தவரையில், `எல்லாம் அவன் செயல்’ என்று அட்வான்ஸாகவே கடவுள்மீது பழிபோட்டுவிட்டுக் கூலாக இருக்கிறார்.

``தற்போதைய வீழ்ச்சிக்கு கொரோனா மட்டுமே காரணமா என்பதுதான் தற்போது அழுத்தமாக எழுப்பப்பட வேண்டிய கேள்வி. ஏனென்றால், `கொரோனாதான் அனைத்துக்கும் காரணம்’ என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால், கொரோனாவுக்கு முன்பாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிகெல்லாம் யார் காரணம் என்பதை `கடவுளின் தூதரான நிதியமைச்சர்’ கூறுவாரா?'' என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஆட்சியாளர்களிடமிருந்து பதில் ஏதும் இல்லை. கொரோனாவுக்கு முன்பாகவே பொருளாதாரம் சரிந்துகொண்டிருந்தது. `மோடி அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தையும் அதகளம் செய்துவிட்டது’ என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

அரசுக்கு எதிரான பொருளாதார நிபுணர்கள் மட்டுமல்லாமல், அரசுக்கு ஆதரவான பொருளாதார நிபுணர்களும் மோடி ஆட்சியில் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்த பொருளாதார அறிஞர்களுமே அப்படிப்பட்ட விமர்சனங்களைத்தான் முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து `மோடி அரசு அமல்படுத்திய ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இந்தியப் பொருளாதாரத்துக்கு மற்றொரு பலத்த அடியைக் கொடுத்தது’ என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது. `கோவை, திருப்பூர் பகுதிகளில் செழித்தோங்கியிருந்த தொழில்வளம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவற்றால் படுத்துவிட்டது’ என்று தொழில்துறையினர் கண்ணீர் வடித்தனர்.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை: மத்திய அரசின் ‘அடேங்கப்பா’ திட்டங்கள்... - அதிர்ச்சியில் மாநில அரசுகள்!

ஏற்கெனவே பல்வேறு பாதிப்புகளிலிருந்த தொழில்துறையினரின் நிலைமை கொரோனாவுக்குப் பிறகு மேலும் மோசமாகியிருக்கிறது. தொழில்கள் நசிவடைந்ததால் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்துள்ளார்கள், வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். `இதற்கெல்லாம் கொரோனாதான் காரணம்’ என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கே.டிராகவன்
கே.டிராகவன்

பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவனிடம் இது குறித்து நாம் கேட்டபோது,``கொரோனாவுக்கு முன்பாக அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் காரணமாக உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஈரான் பிரச்னை போன்றவற்றாலும் பொருளாதார பாதிப்புகள் இருந்தன. இப்போது, கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லா நாடுகளின் ஜி.டி.பி-யும் குறைந்திருக்கிறது. எனவே, இந்தியாவை மட்டும் இதில் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. ஏப்ரல் காலாண்டு புள்ளிவிவரத்தை எடுத்துவைத்துக்கொண்டு, தற்போது விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது நிலைமை மேம்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் செயல்பட ஆரம்பித்துள்ளன. போக்குவரத்து முழுவீச்சில் தன் இயக்கத்தைத் தொடங்கிவிட்டது. எனவே, நிலைமை மாறியிருக்கிறது. பாதிப்புகளிலிருந்து இந்தியா மீண்டுகொண்டிருக்கிறது” என்றார்.

பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் இது குறித்து பேசியபோது, ``பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டபோது, அதற்கு கடுமையான எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்தன. எனவே, அந்த பாதிப்புகளைச் சரிசெய்யலாம் என்ற முயற்சியில் அவசர அவசரமாக ஜி.எஸ்.டி-யை மத்திய அரசு அமல்படுத்தியது. அது இந்தியப் பொரளாதாரத்தை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்சென்றது.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

ஏற்கெனவே, பொருளாதாரம் விழுந்துகிடக்கும் சூழலில் கொரோனா வந்தது. கொரோனா நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகளைக் கையாள்வது தொடங்கி பல விஷயங்களிலும் மத்திய அரசின் அணுகுமுறை விமர்சனத்துக்குரியதாக இருந்தன. எனவேதான், பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முழுக் காரணமும் கொரோனாதான் என்று ஆட்சியாளர்கள் கூறுவதை ஏற்க முடியாது” என்றார்.

ஜி.எஸ்.டி வசூல் பாதிப்பு ; கடவுளைக் காரணம் சொல்வது நியாயமா நிதியமைச்சர் அவர்களே?

`காந்தி கணக்கு’ என்ற சொல் நம் நாட்டில் பிரபலம். காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகம் நடத்தியபோது, வியாபாரிகள் அனைவரும் அவருக்கு தார்மீக ஆதரவு அளித்தனர். அவர்கள், `எங்களால் நேரடியாகப் போராட்டத்தில் பங்கேற்க முடியாது. ஆனாலும், நீங்கள் நடத்தும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்கள் எங்கள் கடைகளில் என்ன பொருள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். அதற்குப் பணம் கொடுக்க வேண்டாம். பொருளை வாங்கிக்கொண்டு, `காந்தி கணக்கு’ என்று எங்களிடம் சொன்னால் போதும். நாங்கள் புரிந்துகொள்வோம்’ என்று காந்தியிடம் கூறியிருக்கிறார்கள். அப்படித்தான் `காந்தி கணக்கு’ பிரபலமானது என்று ஒரு தகவல் இருக்கிறது.

பொருளாதாரம்
பொருளாதாரம்

தற்போது எல்லாப் பிரச்னைகளுக்கும் கொரோனாதான் காரணம் என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறிவரும் நிலையில், `கொரோனா கணக்கு’ என்பது பிரபலமாகியிருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்பு காந்தி கணக்கு. சுதந்திரத்துக்குப் பிறகு கொரோனா கணக்கு. கொரோனா காலத்தில் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்த அறிவிப்புகள் என்ன பலனை அளித்திருக்கின்றன என்பது குறித்து ஆட்சியாளர்கள்தான் விளக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு