Published:Updated:

அமராவதி, விசாகப்பட்டினம், கர்நூல் - ஆந்திராவில் 3 தலைநகரங்களை ஜெகன் தேர்வுசெய்யக் காரணம் என்ன?

நேற்று நடைபெற்ற ஆந்திரா அமைச்சரவைக் கூட்டத்தில் 3 தலைநகரங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமராவதி - சட்டசபை, விசாகப்பட்டினம்- நிர்வாகம், கர்நூல்- நீதித்துறை என்கிற அடிப்படையில் தலைநகரங்களாக செயல்படும் என அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு, புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதில் ஆந்திராவின் தலைநகரமான ஹைதராபாத், தெலங்கானா பகுதியுடன் இணைக்கப்பட்டதால், ஆந்திர மாநிலத்துக்குப் புதிய தலைநகரை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மக்களிடமும், கட்சிகளிடமும் கருத்துகளைக் கேட்ட பின்னர், அமராவதியை ஆந்திரத்தின் தலைநகரமாக அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

 ஜெகன் மோகன்
ஜெகன் மோகன்

தலைநகரத்தை முன்னேற்ற `கனவு அமராவதி' திட்டத்தைத் தெலுங்கு தேசம் கட்சி கையிலெடுத்தது. 28,000 விவசாயிகளிடமிருந்து 33,000 ஏக்கர் நிலத்தைப் பெற்று மாநிலத் தலைநகரை உருவாக்கி, அதன் வளர்ச்சியிலிருந்து வரும் பணத்தை ஆண்டுதோறும் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.டி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அங்கு கட்டமைப்புகளை மேம்படுவதற்காக 1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வியடைந்தார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவியேற்ற சில மாதங்களில், ஆந்திராவில் அமராவதி உட்பட மூன்று தலைநகரம் உருவாக்கப்பட உள்ளதால், அமராவதியில் மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட்டு, அங்கு செலவிடும் தொகையை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆந்திராவின் மையத்தில் உள்ள அமராவதியைச் சட்டப்பேரவை தலைநகராகவும், மாநில வழக்கறிஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கர்நூலை நீதிமன்றத் தலைநகரமாகவும் கட்டமைப்புப் பொருளாதாரத்தில் சிறந்து செயல்படும் விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகரமாகவும் அமைக்கலாம் என்பதே திட்டம்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு
‘முதல்வன்’ ஜெகன்... ஆந்திரத்து ஹீரோவா?

இதற்கிடையே ஆந்திராவின் தலைநகரை மாற்றி அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மக்கள் பலரும், அமராவதியில் நிலம் தந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜி.என்.ராவ் மற்றும் பாஸ்டன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது மாநில அரசு. அந்தக் குழு இந்த முடிவுகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் மக்களின் கருத்துகளை ஆராய்ந்து ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்று தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்துக்கு ஆதரவாகவே அறிவிப்பு வெளியாகும் என்பதை வலியுறுத்தும் வகையில் சட்டமன்றத்துக்கு வெளியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு 151 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால் மசோதா எளிதில் நிறைவேறி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற ஆந்திரா அமைச்சரவை கூட்டத்தில் 3 தலைநகரங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமராவதி - சட்டசபை, விசாகப்பட்டினம் - நிர்வாகம், கர்நூல் - நீதித்துறை என்கிற அடிப்படையில் தலைநகரங்களாக செயல்படும் என அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அமராவதி திட்டம்
அமராவதி திட்டம்

அறிவிப்பு வெளியாகிய பின், எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க, அமராவதியிலுள்ள 29 கிராமங்களும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரப்பட்டன. 800-க்கும் மேற்பட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் அரசு இதை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல் காரணமாக, அமராவதி, கிருஷ்ணா நதியின் தென் கரையோரத்தில் மாநிலத் தலைநகராக இருப்பது பாதுகாப்பற்றது. ஏனெனில், அது வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதியில் அமைந்துள்ளது. மேலும், 217 சதுர கிலோமீட்டர் அளவில் தலைநகரம் அமராவதியை உருவாக்குவதற்கான பல மடங்கு தொகை செலவிட வேண்டியிருக்கும்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இரண்டாவதாக, அமராவதி திட்டத்துக்கு 1.5 லட்சக் கோடி ஒதுக்கப்பட்டு, அங்கு பணிகளை முன்னாள் அரசு மேற்கொண்டது. அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கல்வியில் செலவு செய்யாமல், வெறும் கட்டமைப்பை மட்டும் பலப்படுத்துவது எப்படி வளர்ச்சி ஆகும் என்ற கேள்வியை முன்வைக்கும் தற்போதைய அரசு, அதே 1 லட்சம் கோடி ரூபாயில் ஆந்திர மாநிலத்துக்கான வசதிகளான குடிநீர் வசதியைப் பெருக்க 60,000 கோடி ரூபாயும், மருத்துவ மேம்பாட்டுக்காக 39,000 கோடி ரூபாயும், கல்வித் தரத்தை உயர்த்த 14,000 கோடியும் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு தென் ஆப்பிரிக்காவை மேற்கோள் காட்டி பேசும் முதலமைச்சர், 3 தலைநகரங்களை கொண்டு செயல்படுவது கண்கூடாகப் பார்த்த உண்மையே என்றும், அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்படுவதைத் தவிர்க்கும் நடவடிக்கையாகவே இது இருக்கும் என்கிறது அரசு. தலைநகரத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் திட்டங்கள், அந்த மாவட்டத்தையும் அது சுற்றியுள்ள இடங்களை மட்டும் வளர்த்தெடுக்கும். மற்ற மாவட்டத்தின் வளர்ச்சியை முற்றிலுமாகப் பாதிக்கும். தலைநகரின் முன்னேற்றம் மட்டும் மாநிலத்தின் முன்னேற்றம் ஆகாது; மற்ற மாவட்டங்களின் வளர்ச்சியிலும் நாம் கவனம் செலுத்துவது அவசியம். அதை முன்னெடுக்கும் வகையில்தான், இந்த முயற்சிகள் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

அமராவதி திட்டம்
அமராவதி திட்டம்
நீண்ட கால கட்சிப் பணி... மோடி அமித் ஷாவுடன் நெருக்கம்... யார் இந்த ஜே.பி.நட்டா?

எனினும், இதனால் பாதிப்புகள் ஏற்படாமல் இல்லை. அமராவதியை மேம்படுத்த பயன்படுத்தப்பட்ட முதலீடுகளும் மக்களின் நிலங்களும் வீணாகும் சூழலை ஏற்படுத்தும். பாதி முடிக்கப்பட்ட திட்டங்களின் செலவு வீணாவது மட்டுமின்றி, தொடங்கப்படவுள்ள புதிய நகரங்களின் உருவாக்கத் திட்டங்களுக்கு ஏற்படும் செலவுகளைக் கருத்தில் கொள்வதும் மிக அவசியம். ஏற்கெனவே கடன் பாதிப்பில் உள்ள ஆந்திர மாநிலத்துக்கு இது மேலும் சுமையாகவே இருக்கும்.

ஒரு மாநிலத்துக்குப் பல தலைநகரங்கள் இருப்பதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணமாக, தமிழகத்தில், தலைநகரமான சென்னை அடைந்திருக்கும் வளர்ச்சியை குறுகிய காலத்தில் வேறு எந்த மாவட்டமும் அடைந்திருக்கவில்லை. அதிகமான பல்கலைக்கழங்கள் உள்ள சென்னையில் மேற்படிப்பைத் தொடர அதிக மாணவர்கள் வருகை புரிகின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் வேலையில்லாதோர் சென்னையை நோக்கிப் படையெடுக்கின்றனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் எனப் பல கடற்கரை மாவட்டங்கள் இருந்தபோதும், சென்னையில் 4 துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் ஒரே இடத்தில் கூடுவது மக்கள் நெருக்கம், சுற்றுச்சூழல் மாசு, நீர் பற்றாக்குறை என அடிப்படை தேவைகளைப் பாதிப்படையச் செய்து, பல சூற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் இதைத்தான் தமிழகத்தின் தலைநகரமும் எதிர்கொண்டு வருகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி
3 தலைநகரத் திட்டத்துக்கு ஒப்புதல்; வீட்டுக்காவலில் 800 தலைவர்கள்!- காவல்துறை கட்டுப்பாட்டில் ஆந்திரா

ஒரே இடத்தை மையப்படுத்தாமல் அதற்கு மேலான இடங்களைத் தேர்ந்தெடுப்பது, பிரச்னைகளைத் தவிர்ப்பது மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுக்குத் திட்டங்களை சரியான வகையில் பகிர்ந்தளிப்பது போலாகும். இதுபோன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது, அனைத்து மாநில மக்களும் முன்னேற்றப் பாதையில் செல்ல ஆயத்தப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இருக்கும் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

- தனிமொழி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு