Published:Updated:

`நான் ராகுல், சாவர்க்கர் இல்லை…’ ராகுல் காந்தி சொன்னது ஏன்?

ராகுல் காந்தி

‘ரேப் இன் இந்தியா’, ‘நான் ராகுல், சாவர்க்கர் அல்ல’ என ஆவேசமாக ராகுல் காந்தியிடமிருந்து தெறித்துவிழுந்த வார்த்தைகள், அடுத்தடுத்து சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளன.

`நான் ராகுல், சாவர்க்கர் இல்லை…’ ராகுல் காந்தி சொன்னது ஏன்?

‘ரேப் இன் இந்தியா’, ‘நான் ராகுல், சாவர்க்கர் அல்ல’ என ஆவேசமாக ராகுல் காந்தியிடமிருந்து தெறித்துவிழுந்த வார்த்தைகள், அடுத்தடுத்து சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளன.

Published:Updated:
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி என்ன பேசினாலும் அது சர்ச்சையாகிறது அல்லது சர்ச்சை ஆக்கப்படுகிறது. ஹைதராபாத்தில், மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம், உ.பி-யில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமை எனப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், அதுகுறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், கடந்த வாரம் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “ ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பற்றி பிரதமர் மோடி பேசினார். ஆனால் இங்கு, ‘ரேப் இன் இந்தியா’வைத்தான் பார்த்துவருகிறோம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். உ.பி-யில் பா.ஜ.க எம்.எல்.ஏ, ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தினந்தோறும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். ‘பெண்களைப் படிக்கவைப்போம், பாதுகாப்போம்’ என்று மோடி சொல்கிறார். ஆனால், யாரிடமிருந்து பெண்களைக் காப்பற்ற வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டுமா?” என்றார் ராகுல் காந்தி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொந்தளித்தார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

“இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, நாட்டின் ஏற்றுமதித் திறனை அதிகரிக்கும் நோக்கில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், அதை மோசமான ஒரு குற்றச்செயலுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது தேசத்தையே அவமதிக்கும் செயல். இத்தகைய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பதற்கு தார்மீக உரிமை கிடையாது” என்று குறிப்பிட்டார், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ‘வன்கொடுமைகளின் தலைநகராக டெல்லி மாறிவிட்டது’ என்று முன்பு ஒருமுறை மோடி பேசிய வீடியோவை வெளியிட்டு, ‘நான் சொன்ன கருத்து சரிதான்’ என்றும் ‘மன்னிப்புக் கோரும் பேச்சுக்கே இடமில்லை’ என்றும் திட்டவட்டமாகக் கூறினார். அத்துடன், இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்ததற்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, டெல்லியில் பிரமாண்ட பேரணியை நடத்தியது காங்கிரஸ். குடியுரிமை சட்டத் திருத்தம், காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, `இந்தியாவை காப்பாற்றுங்கள்' என்ற தலைப்பில் அந்தப் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, “நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பா.ஜ.க எம்.பி-க்கள் சொல்கிறார்கள். நான் அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல… ராகுல் காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். உண்மையைப் பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்றார்.

மேலும், “நாட்டை வலுப்படுத்துவார் என்று மோடியைத் தேர்வு செய்தீர்கள். அந்தப் பணியை அவர் செய்யவில்லை. நம் நாட்டின் ஜிடிபி தற்போது நான்கு சதவிகிதம்தான். எத்தனை விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். எங்களுக்குத் தெரியாது என அலட்சியமாகப் பதிலளித்தார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற ஒன்று மட்டும்தான்” என்றார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி, இங்கு சாவர்க்கரை ஏன் இழுக்கிறார் என்பது பலருக்கும் புரியவில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாசிக் ஆட்சியராக இருந்த ஏ.டி.எம்.ஜான்சன் கொலை வழக்கின் குற்றவாளியாக 1911ல் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார் சாவர்க்கர். ஜுலை 4, 1911ல் அடைக்கப்பட்ட அவர், ஆறு மாதங்களில் ஒரு கருணை மனுவை சிறை அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

அதன்பிறகு, இரண்டாவது முறை சாவர்க்கர் கருணை மனு கோரியது 1913ல். அக்டோபர் 1913ல் வைஸ்ராயின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்த Sir Reginald Craddock அந்தமான் சிறையைப் பார்வையிட்டபோது, சாவர்க்கர் உள்ளிட்டோரை சந்தித்தார். அவர், நவம்பர் 23, 1913ல் அந்த சிறைச் சந்திப்பு குறித்து எழுதிய குறிப்பில், சாவர்க்கரின் கருணை மனு பற்றிக் குறிப்பிடுகிறார். "I am ready to serve the Government in any capacity they like...” என்ற வரிகளை சாவர்க்கர் எழுதியிருந்ததை அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலமுறை மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக்கொடுத்து, 1921 மே 2ல் ரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது உட்பட, பல நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டன. பலமுறை ‘ஸாரி' கேட்ட சாவர்க்கர் போல அல்ல நான் என்பதே ராகுல் சொல்ல வருவது.

சாவர்க்கர் உருவாக்கிய இந்துத்துவ கோட்பாடுகளைத்தான் மத்திய பா.ஜ.க அரசு செயல்படுத்திவருவதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்துவரும் நிலையில், நான் ராகுல், சாவர்க்கர் அல்ல என்று பேசியிருக்கிறார், ராகுல் காந்தி.

சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு, பா.ஜ.க-வினரிடமிருந்து மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவில் காங்கிரஸின் சமீபத்திய கூட்டாளியான சிவ சேனாவிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

“வீர சாவர்க்கர் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டுக்கே கடவுள் போன்றவர். நேரு, காந்தியைப் போல சாவர்க்கரும் நாட்டின் சுதந்திரத்துக்காகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவர். இவரைப் போன்றவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்” என்று சிவ சேனா எம்.பி-யான சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism