Published:Updated:

வரலாறு காணாத வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு... என்ன செய்யப்போகிறது மோடி அரசு?

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கிறது. இந்தப் பிரச்னையை மோடி அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

வரலாறு காணாத வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு... என்ன செய்யப்போகிறது மோடி அரசு?

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கிறது. இந்தப் பிரச்னையை மோடி அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

Published:Updated:

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 77.42-ஆக சரிந்திருக்கிறது. இந்தச் சரிவு, வரலாறு காணாத ஒன்று என்று பொருளாதார நிபுணர்கள் வர்ணிக்கிறார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

மோடி
மோடி

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து பெருமளவுக்கு அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கு இது முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. பணவீக்கம் காரணமாக சர்வதேச மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்திவரும் பிரச்னை, அந்நியச் செலாவணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்நியச் செலாவணி சந்தையில் மே 9-ம் தேதி வர்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 77.17-ஆக இருந்து, பின்னர் ரூ. 77.52-ஆக சரிந்தது. கடைசி இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 115 பைசாவை இழந்தது என்று செலாவணி வட்டாரங்களைக் குறிப்பிட்டுச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அருணன்
அருணன்

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம். “இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது மிகவும் கவலைக்குரியது. ‘மோடி ஆட்சிக்கு வந்தால் 40 ரூபாய்க்கு ஒரு அமெரிக்க டாலர் கிடைக்கிற நிலைமை ஏற்படும் என்று மோடியின் ஆதரவாளர்கள் கூறினார்கள். அவர்களெல்லாம் இப்போது வாய் திறக்காமல் அமைதி காக்கிறார்கள்” என்று பேச ஆரம்பித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இந்தச் சரிவை இந்திய ரூபாய்க்கு மட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்தின் சரிவாகவும் பார்க்க வேண்டும். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு பத்திரிகையின் விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகக் கூறினார். அவர் பேசிய அந்த நாளில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருந்தது. இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருந்தால், இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் வீழ்ச்சியடைகிறது... அமெரிக்காவோ, ஐரோப்பாவோ இந்திய ரூபாயை மதிக்கத் தயாராக இல்லை என்பது இந்தச் சரிவின் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்திய பொருளாதாரம் சரிந்ததற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்ததற்கும் முழுமையான காரணம் மத்திய பா.ஜ.க அரசுதான்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருக்கிறது. சிறு, குறு தொழில்கள் பாதுகாக்கப்படவில்லை. உதாரணமாக, அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பனியன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. பருத்தி நூல் விலை ஏறிவிட்டதால் பனியன் தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், திருப்பூரில் போராடுகிறார்கள். நூல் விலை ஏன் அதிகரித்தது... நூல் விலை உயர்ந்தால் பனியனின் அடக்க விலை அதிகரிக்கும். பிறகு எப்படி பங்களாதேஷ், சீனா போன்ற நாடுகளுடன் பனியன் ஏற்றுமதியில் இந்தியாவால் போட்டியிட முடியும்?

பொதுத் துறைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், பொதுத் துறைகளை ஒவ்வொன்றாக விற்கிறார்கள். இன்னொரு புறம் பொருளாதாரம் வளரவில்லை. பிறகு எப்படி ரூபாய்க்கு மதிப்பு இருக்கும்... இப்படியே போனால், இலங்கையில் நடப்பதுபோல இந்தியாவிலும் நடக்கும். வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும் அதிகரித்தால் இலங்கை ரூபாய்க்கு என்ன மரியாதையோ, அதே மரியாதைதான் இந்திய ரூபாய்க்குக் கிடைக்கும்.

ரூபாய் மதிப்பு
ரூபாய் மதிப்பு

அப்படியோர் அவலமான நிலை இந்தியாவுக்கு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றால், உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். ஏற்றுமதி சார்ந்த தொழில்களை வளர்க்க வேண்டும். சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. நாட்டின் பொருளாதாரம் தளர்ச்சியடைந்திருக்கிறதே தவிர, வளர்ச்சியடையவில்லை. அந்த நோயின் வெளிப்படையான அறிகுறிதான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி” என்றார் அருணன்.

இது குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “உக்ரைன் - ரஷ்யா போர் உட்பட உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகளின் தாக்கம் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது. இதனால், இந்திய பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிவருகிறது. இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதி அதிகரித்துவருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தில் அதிக வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இதற்கும் இந்திய பொருளாதாரத்துக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கும் பிரச்னையால் பணவீக்கம் அதிகரிக்காது. இப்பிரச்னை காலப்போக்கில் சரியாகிவிடும்” என்றார் நாராயணன் திருப்பதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism