Published:Updated:

ஆளுநருக்குத்தான் எதிர்ப்பு; ஆளுநர் உரைக்கு அல்ல... விசிக-வின் வெளிநடப்பு அரசியல் என்ன?

விசிக சட்டமன்ற உறுப்பினர்கள்
News
விசிக சட்டமன்ற உறுப்பினர்கள்

சட்டமன்றக் கூட்டத்திலிருந்து வி.சி.க வெளிநடப்பு செய்தது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆளும் தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்துகொண்டு வி.சி.க வெளிநடப்பு செய்ததன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

தமிழ்நாடு அரசின் 2022-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் புதன்கிழமை (05.01.2022) அன்று தொடங்கியது. ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கியதும் கூச்சலிட்ட அ.தி.மு.க-வினர் அம்மா மினி கிளினிக் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ``தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை.” என தி.மு.க அரசு மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளிநடப்புக்கான காரணத்தைக் கூறினார். அ.தி.மு.க-வைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்ஏ-க்கள், ``அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய The Undergraduate Medical Degree Courses Bill, 2021-யைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டசபையை மேதகு ஆளுநர் சிறுமைப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசையும், அதைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிக்கிற ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உரையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்கிறோம். ஆளுநருக்குத்தான் எதிர்ப்பு ஆளுநர் உரைக்கு அல்ல” எனத் தெரிவித்தனர்.

ஆளுநர் ஆர்.என் ரவி
ஆளுநர் ஆர்.என் ரவி

``ஆளுநர் அவர்களின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்து இன்று ஆளுநர் உரையின் போது வி.சி.க வெளிநடப்பு. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் எனக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்" என வி.சி.க தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆளுநர் உரையில், ``பொதுவாக நுழைவுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே தொழில் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றது என இந்த அரசின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்துவோம். நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது” என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான வி.சி.க ஆளுநர் உரைக்கு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் வழங்காதது, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வி.சி.க-வுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதது, காவல்துறையினர் வி.சி.க-வினர் மீது பதிவு செய்யும் வழக்குகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கவே வி.சி.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே சமயம் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தி.மு.க தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே வி.சி.க-வை வெளிநடப்புச் செய்யச் சொல்லியிருக்கிறது. இது ஓர் அரசியல் நாடகம் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

வி.சி.க சட்டமன்ற உறுப்பினர்கள்
வி.சி.க சட்டமன்ற உறுப்பினர்கள்

சட்டமன்றக் கூட்டத்திலிருந்து வி.சி.க வெளிநடப்பு செய்தது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் சட்டமன்றக் கொறடா பாலாஜியிடம் விளக்கம் கேட்டோம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு மனதாக நிறைவேற்றிய நீட் மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழ்நாடு ஆளுநர் காலம் கடத்துகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசுக்குக் கொண்டு சேர்க்கும் பாலமாகத்தான் ஒரு மாநிலத்தின் ஆளுநர் செயல்பட வேண்டும். நமது அரசியலமைப்பு சட்டமும் இதைத்தான் சொல்கிறது. மாநில அதிகாரத்தில் தலையிட்டது மட்டுமல்லாது நமது சட்டமன்ற மாண்புக்கும் சிறுமை ஏற்படுமாறு நடந்துகொண்ட ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் நாங்கள் வெளி நடப்பு செய்தோம். நாங்கள் வெளிநடப்பு செய்த அதே நாளில் டெல்லியில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதா குறித்து இந்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்க 3 முறை முயன்றும் முடியவில்லை. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைச் சட்டமாக்க ஆளுநரே அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். பிறகு அந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் வேண்டுமென்றே நீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்தத் தாமதத்திற்கு முழு காரணம் ஆளுநர்தான்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அரசியலமைப்பின் மீது பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர், அதைக் குழி தோண்டி புதைத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அவர் செயல்படுகிறார். மசோதாவை மத்திய அரசுக்கு அவர் அனுப்பியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் பதவி விலக வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``நீட் தேர்வுக்கு எதிரான, சமூக நீதிக்கான நமது போராட்டம் தொடரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 110-ன்கீழ் தெரிவித்துள்ளார். ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து, நாங்கள் பற்ற வைத்து நெருப்பு இப்படிப் பரவியிருக்கிறது. இதுதான் எங்களின் எதிர்பார்ப்பும்கூட. தமிழ்நாடு மாணவர்கள் நலனுக்காகச் செய்ததைத் தங்களின் மலிவான அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.

எஸ்.எஸ்.பாலாஜி விசிக எம்.எல்.ஏ
எஸ்.எஸ்.பாலாஜி விசிக எம்.எல்.ஏ

அரசியல் செய்ய எங்களுக்குப் பல விஷயங்கள் இருக்கும் போது மாணவர்கள் நலனை வைத்து எங்கள் அரசியலை முன்னெடுக்க மாட்டோம். எங்கள் தலைமையும் அப்படி எங்களை வழிநடத்தாது” எனப் பதிலளித்தார்.