Published:Updated:

பல விவகாரங்களில் பட்டியல் போடும் ஹெச்.ராஜா... தி.மு.க அரசு 'ரியாக்‌ஷன்' எப்படி இருக்கும்?

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

பா.ஜ.க தேசிய தலைவர் ஹெச்.ராஜா தி.மு.க அரசை இந்து விரோத அரசு என்றும் தி.மு.க அமைச்சர்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். கடுமையான விமர்சனங்களை வைத்தபோதும் தி.மு.க சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்?

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை மீட்டு இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடங்கி இந்து விரோத அரசு என்பது வரை தி.மு.க அரசு மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா. அதன் உச்சபட்சமாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஹெச். ராஜா “ஜெயிலர் ஜெயபிரகாஷை கொலை செய்தது இன்றைய பாபநாசம் எம்.எல்.ஏ. அவருடைய மகன் இன்று பிரபல சினிமா நட்சத்திரம் சிவகார்த்திகேயன்” என்றார்.

சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜி. தாஸ். அப்படி இருக்கும்போது ஹெச். ராஜா சிவகார்த்திகேயன் அப்பாவின் மரணம் குறித்து தவறான கருத்தை கூறியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அப்போதே தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பற்றியும் பேசினார் ஹெச். ராஜா. அது குறித்து பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டதற்கு, “வெறி பிடித்த நாய் குரைப்பதற்கு எல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது” என்றார். மேலும், பாபநாசம் தொகுதியின் எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் “சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்” என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

”சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையில் இருந்தவர். அதனால் தவறுதலாக அவர் பெயரைக் கூறி விட்டேன், அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது” என எச்.ராஜா தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

தொடர்ந்து அவதூறான கருத்துகளை ஹெச்.ராஜா பேசிவருகிறார். எனவே அவரைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக முகநூலில் பதிவிட்டதற்காகப் பத்திரிகையாளர் ஒருவர் மீது கடும் விமர்சனம் வைத்த தி.மு.க-வினர் அவர்மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க-வை விமர்சனம் செய்யுங்கள் ஆனால், ஆதாரமற்ற விமர்சனங்களை வைத்தால் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடம் என்று கூறியுள்ளனர். ஆனால், ஹெ.ராஜா நேரடியாக தி.மு.க-வையும் தமிழக அரசு குறித்தும் பல்வேறு கருத்துகள் கூறிவரும் வேலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தி.மு.க மௌனமாக இருக்கிறது.

'ஜக்கி வாசுதேவுக்காக கொந்தளிக்கும் ஹெச்.ராஜா' -  பின்னணி என்ன?

பா.ஜ.க ஹெச்.ராஜா-வின் தி.மு.க அரசு தொடர்பான கருத்துகளுக்கு அவர்களின் எதிர்வினை என்ன என்பது குறித்து தி.மு.க-வின் செய்தித்துறை இணைச்செயலாளர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம்.

“ஹெச்.ராஜா சமூகப் பதற்றத்தை உண்டு செய்யும் நோக்கத்துடன் எப்போதும் பொறுப்பற்ற வகையில்தான் பேசுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்து அறநிலையத்துறை கோவில்களை நிர்வகிக்கவில்லை. கோவில் நிலங்களைத்தான் நிர்வகித்து வருகின்றன. வக்போர்டு என்ற அமைப்பு தர்காவின் பொறுப்பில் இருக்கும் நிலங்களை பராமரிக்கும் அமைப்பு. இதுவும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. ஆனால், ஜக்கி, ராஜா போன்றவர்கள் இந்து கோவில்களைத்தான் அரசு நிர்வகித்து வருகின்றது என்று தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். கோவில்களின் பூஜைகள், விழாக்கள் உள்ளிட்ட எது ஒன்றிலும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாத வரை அரசு இதுவரை தலையிட்டதில்லை. எல்லாம் அறங்காவல் குழுவினர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவர்களைத்தான் அரசு நியமிக்கிறது. அதுவும் இந்துவாக இருக்கும் ஒருவரைத்தான் அரசு அறங்காவலராக நியமிக்கும். இவையெதுவும் தெரியாமல் இந்து சமய அறநிலையத்துறை இந்துகளுக்கு எதிராக இயங்குகிறது எனப் பேசி வருகிறார் ஹெச்.ராஜா. அவரைப் போலவே செயல்பட்டு சமூகப் பதற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, முறையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான சாத்தியத்துடன் தமிழக அரசு கவனமாக இயங்கி வருகிறது.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

ஹெச்.ராஜா எப்போதும் தான் சார்ந்த கட்சிக்கோ தலைவர்களுக்கோ கட்டுப்பட்டவராக இல்லாமல்தான் செயல்பட்டு வருகிறார். இந்து விரோத அரசு என்று சொல்கிறாரே தவிர எதன் அடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டை அவர் வைத்தார் என்று இதுவரை சொன்னதில்லை. ஆனால், சட்டம் ஒழுங்கையும், தி.மு.க-வைக் களங்கப்படுத்தும் நோக்கில் பேசினால் உடனடியாக தி.மு.க சார்பிலும் அரசு சார்பிலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். அதுதான் அரசின் நோக்கம் என்பதால் இதுபோன்ற தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிக்க அரசு விரும்பவில்லை” என்றார்.

இது தொடர்பாக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதியிடம் பேசினோம்:

“கோவில் நிலங்களை இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பிரச்னை பல ஆண்டுகளாக இருக்கிறது. கோவில் நிலங்களை, சொத்துகளை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தான் இந்தப் பிரச்னையில், சத்குருவை அவமதிக்கும் விதமாக பேசினார். பேரிடர் காலத்தில் ஒரு அமைச்சருக்கு இதைப் பேச வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? அதற்கான பதிலைத்தான் ஹெச்.ராஜா சொல்லியிருக்கிறார். தமிழக அரசு சொன்னதைச் செய்யவில்லை என்பதால்தான் விமர்சனம் செய்கிறோம். உதாரணமாக, முந்தைய அ.தி.மு.க அரசு கொரோனா தொற்றால் இறக்க நேரிடும் முன் களப்பணியாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக 25 லட்சம் தருவோம் என அறிவித்தபோது இவர்கள் ஒரு கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று சொன்னார்கள். தற்போது ஆட்சிக்கு வந்ததும் ஏன் அ.தி.மு.க அறிவித்த 25 லட்ச ரூபாயை நிவாரணமாகக் கொடுக்கிறார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் ஊரடங்கு இருக்காது என்று அறிவித்தார். ஆனால், இப்போது ஊரடங்கை அமல்படுத்தி வருகிறார். மக்களின் உயிரைக் காக்க ஊரடங்கு அவசியம் என்பதால் தானே கடந்த முறையும் அமல்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது அவசியமான அறிவிப்புகளை எல்லாம் தவறு என்று சொல்லிவிட்டு ஆளும் கட்சியான பின் அவற்றையே தாங்களும் செய்வது முரணானது இல்லையா? இதை எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்.

பேராசிரியர் கனகசபாபதி, தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர்
பேராசிரியர் கனகசபாபதி, தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர்

கேரளாவை விடத் தமிழகத்தில் குறைவான அளவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதைத்தான் சுட்டிக் காட்டுகிறோம். பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்து கட்சியினருடனும் இணைந்து செயல்பட வேண்டியதை விட்டுவிட்டு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் கேள்விக்கு உள்ளாக்குகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு