Published:Updated:

'எத்தனை முறை என்னைச் சாகடிப்பீங்க?' - 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரீஸை ஈழ ஆதரவாளர்கள் எதிர்ப்பது ஏன்?

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் காட்சிகள் நகர்ந்தாலும், ஈழப் போராட்டத்தையும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தும்விதத்தில் எடுக்கப்பட்டிப்பதால் நிச்சயமாகத் தடை செய்ய வேண்டும் என ஈழ ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்திவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டிரெய்லர் வெளியானபோதே கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்த 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரீஸ், கடந்த 4-ம் தேதி வெளியாகி அதைவிடக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துவருகிறது. பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்த ஒரு போராட்டத்தை, போகிறபோக்கில் கொச்சைப்படுத்தியிருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

2019-ம் ஆண்டு அமேஸான் பிரைமில் வெளியாகி ஹிட்டடித்த வெப் சீரீஸ்தான் `தி ஃபேமிலி மேன்.' பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் இந்திய உளவுப்பிரிவின் அதிகாரியாக நடித்திருப்பார். உளவுப்பிரிவில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கும் அதேநேரத்தில், வீட்டில் நடக்கும் பிரச்னைகளையும் சமாளிக்க முயலும் கதாபாத்திரம் அவருடையது. இவரின் மனைவியாக ப்ரியாமணி நடித்திருந்தார். இந்த வெப் சீரீஸின் இரண்டாம் பாகத்துக்கான டிரெய்லர் கடந்த மே 19-ம் தேதி வெளியானது. அதில், தமிழீழ விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும்விதத்தில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என வைகோ, சீமான், இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்ட தமீழழ ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதினார்.

தி ஃபேமிலி மேன் 2, சீமான்
தி ஃபேமிலி மேன் 2, சீமான்

ஆனால், இந்த வெப் சீரீஸின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே தரப்பில்,

''டிரெய்லரைப் பார்த்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம். புதிய சீஸன் ஒளிபரப்பாகும்வரை காத்திருக்குமாறும், நிகழ்ச்சியைப் பார்க்குமாறும் ஒவ்வொருவரையும் நாங்கள் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். அதை நீங்கள் பார்க்கும்போது, கதையையும், கதாபாத்திரங்களின் சித்தரிப்பையும், நடுநிலையான கருத்துகளையும் நிச்சயம் பாராட்டுவீர்கள் என்று நாங்கள் அறிவோம்'' என விளக்கம் அளித்திருந்தனர். தவிர, ஒரு படைப்பை முழுவதுமாகப் பார்க்காமல் அதன்மீது விமர்சனம் வைப்பது தவறு என்கிற குரல்களும் எழுந்தன.

இந்தநிலையில், ஒன்பது எபிசோடுகளைக் கொண்ட, சீஸன் 2 கடந்த நான்காம் தேதி வெளியானது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் காட்சிகள் நகர்ந்தாலும், ஈழப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தும்விதத்தில் எடுக்கப்பட்டிப்பதால், நிச்சயமாகத் தடை செய்ய வேண்டும் என ஈழ ஆதரவாளர்கள் மீண்டும் போர்க்கொடி உயர்த்திவருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் தொடரைத் தடை செய்யாவிட்டால், 'அமேஸான் நிறுவனத்தின் அனைத்துச் சேவைகளையும் உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார். பல ஈழ ஆதரவு யூடியூபர்கள், அமேஸான் தளத்தை அன் சப்ஸ்கிரைப் செய்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர்.

இந்தநிலையில், ஈழ உணர்வாளர்கள் இந்த வெப் சீரீஸ் மீது வைக்கும் விமர்சனங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஃபேமிலி மேன் 2
ஃபேமிலி மேன் 2

* வட இலங்கையில் இருந்துதான் கதைக்களமே தொடங்குகிறது. தமிழீழம் என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அங்கு ஆயுதம் தரித்த குழுக்களாகக் காட்டப்படுவதிலிருந்து அவர்கள் விடுதலைப்புலிகளைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்கிற முடிவுக்கு வர முடிகிறது. அது மட்டுமல்ல, அதில் பாஸ்கரன் என்கிற கதாபாத்திரம், தான் இறந்ததாக வந்த செய்தியைத் தானே நாளிதழில் படித்து, '`எத்தனை முறைதான் என்னைச் சாகடிப்பார்கள்?'' என்கிற வசனத்தைப் பேசுகிறது. இது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையில் பலமுறை நடந்த ஒரு சம்பவம். 'பிரபாகரன் சுனாமியில் இறந்துவிட்டார். உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். சண்டையில் இறந்துவிட்டார்' என சிங்கள நாளிதழில்களில் பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழ ஆதரவாளர்களாக இருக்கும் பெரிய தலைவர்கள் முதல் அனைவருக்கும் இது தெரிந்த விஷயம்தான். தவிர, 2009, மே 18-க்குப் பிறகு, தான் இறந்தது போன்ற செய்தியை தலைவர் பிரபாகரன், தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற ஒரு செய்தியை தமிழகத்தில் ஒரு ஏட்டில் அட்டைப்படமாகவே வெளியிட்டது. அதன் மூலம், பாஸ்கரன் என்கிற கதாபாத்திரம் திட்டவட்டமாக பிரபாகரனைத்தான் குறிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* அந்தக் காட்சி நிறைவடையும்போது, தலைவருடன் மூன்று பேர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதாகவும், அவர்களுக்காக ஒரு பெண் தற்கொலைப் படையாக இறந்துபோவதாகவும் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை கடைசிவரை, களத்தில் நின்று போராடியவர் எங்கள் தலைவர் பிரபாகரன். ''தமிழீழக் கொள்கையில் இருந்து நான் பின்வாங்கினால், என் பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்'' என்றவர், அதை, 2002 சர்வதேச ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும் உறுதி செய்தவர் அவர். அவரை இது போன்று வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதுபோலக் காட்சியமைத்திருப்பது அவரின் வீரத்தையும் தியாகத்தையும் அவமதிக்கும் ஒரு செயல். அதேபோல, அவரின் தம்பி இந்தியாவில் இறந்துபோவதாக ஒரு காட்சி வருகிறது. அதற்குப் பிறகு `என் தம்பியைக் கொன்றவர்களை நான் பழிவாங்கியே தீருவேன்’ என பாஸ்கரன் கதாபாத்திரம் வசனம் பேசுவதாகக் காட்சி இருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் ஆதரவோடு முப்பதாண்டுக்காலம் நடந்த மக்கள் போராட்டத்தை, அதன் தலைவரை ஏதோ தனிப்பட்ட இழப்புக்காகப் பழி வாங்கத் துடிப்பதைப்போலக் காட்சியமைத்திருப்பது கொடுமையிலும் கொடுமை.

ஃபேமிலி மேன் வெப் சீரீஸ் - சமந்தா
ஃபேமிலி மேன் வெப் சீரீஸ் - சமந்தா
You tube Screen shot

* தன் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என அனைவரையும் களத்தில் இழந்தவர் தலைவர் பிரபாகரன். அவரைப் போய் தன் சுய விருப்பு வெறுப்புகளுக்காக செயல்படுபவராகக் காட்டியிருப்பது வன்மம் தவிர வேறொன்றும் இல்லை. அது மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரத்தின் கையில் மதுக் கோப்பை இருப்பதாகக் காட்டியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற ஒரு செயல். மது, சிகரெட், புகையிலை போன்ற பொருள்கள் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவரின் கையில் மதுக்கோப்பை இருப்பதுபோலவும், அவர் மற்றொரு போராளிக்கு மது அருந்தக் கூடாது என அறிவுரை சொல்வதுபோலவும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. சிங்கள ராணுவமே இது போன்ற ஒரு விமர்சனத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது முன்வைத்தது கிடையாது.

“பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம். ஆனால், அவர் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தைப் பேணினார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில், அவர் பெண் போராளிகளைத் தவறாகப் பயன்படுத்தியதில்லை. அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். ஸ்ரீலங்கா ராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப்புலிகளின் நிகழ்வுகளினதுமான 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால், ஒரு படத்தில்கூட மதுபானக் குவளையுடன் பிரபாகரனைக் காண முடியவில்லை. அவர் ஒரு வித்தியாசமான தலைவராக இருந்தார். பலரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தன.''
சிங்கள ராணுவ ஜெனரல் கமால் குணரத்னா

* அதேபோல, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் இணைந்து, பாஸ்கரன் சென்னையில் தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதுபோலக் காட்சிகள் உள்ளன. இதுவும் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள், இந்தியாவுக்கு எதிரானவர்கள் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. போர் ஓய்ந்த 12 ஆண்டுகள் நிறைவுற்ற இந்த வேளையிலும், இன அழிப்புக்கான நீதி கிடைக்காத பட்சத்தில் காணமல்போன 12 ஆயிரம் மக்களின் கதி என்னவென்று தெரியாத சூழலில் இது போன்ற காட்சிகளை எடுப்பது ஈழ மக்களின் காயங்களில் வேல் பாய்ச்சுவதைப் போன்ற செயலாகும். தவிர, அவர்களுக்கான நீதியையும் சர்வதேச அரங்கில் கேள்விக்குறியாக்கும்.

சமந்தா
சமந்தா

* சமந்தா நடித்திருக்கும் ராஜி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் தங்களின் தேவைக்காக எந்த நிலைக்கும் பெண்புலிகள் இறங்குவார்கள் எனக் காட்சிப்படுத்தியிருப்பது, ஒட்டுமொத்த தமிழ்ப்பெண்களையும் இழிவுபடுத்தும் ஒரு செயல். இதுபோல இந்தியாவில் வேறு எந்த இனத்தைச் சேர்ந்த பெண்ணையாவது காட்டிவிட முடியுமா... தமிழர்கள் என்பதாலும், ஏற்கெனவே ஒடுக்கப்பட்டுக் கிடப்பதாலும்தான் இப்படியெல்லாம் காட்சிகளை வடிவமைக்கிறார்கள்.

* முப்படைகள் மட்டுமல்லாது, தமிழீழக் காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல்துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு, தமிழீழ வைப்பகம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம், சமூகப் பொருளாதார அபிவிருத்தி வங்கி என நிர்வாகரீதியாக பல பிரிவுகளையும், போரில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கான 'காந்தரூபன் அறிவுச்சோலை', ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான 'செஞ்சோலை இல்லம்', உடல் வலுவிழந்தோருக்கு 'வெற்றிமனை காப்பகம்' முதியவர்களைப் பாதுக்காக்க, 'அன்பு முதியோர் பேணலகம்', 'சந்தோஷம் உளவள மையம்' (மனநலம் குன்றியோருக்கானது), 'நவம் அறிவுக்கூடம்' (பார்வை இழந்த போராளிகளுக்கானது) என அனைத்து மக்களுக்காகவும் பல ஆதரவு இல்லங்களையும் நடத்திவந்த தலைவரை, தன் சுய விருப்பு வெறுப்புக்காக நடந்துகொள்பவர் எனக் காண்பிப்பது மிகப்பெரிய துரோகம்.

* கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், சொல்லப்படும் கருத்து உண்மையாக இருக்க வேண்டும். நல்ல நோக்கத்துக்காக இருக்க வேண்டும். புனைவாக இருந்தால், முழுமையாகப் புனைவாக எடுக்க வேண்டும். அதைவிடுத்து பாதி உண்மையையும், மீதி புனைவு என்கிற பெயரில் அவதூறுகளையும் வாரி இறைப்பதையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

சமந்தா
சமந்தா

* ஈழப்போராட்டத்தின் உண்மையான வரலாற்றை முன்னிட்டு எடுக்கப்பட்ட பல திரைப்படங்களுக்கு இன்னும் தடை இருக்கிறது. கடுமையான நெருக்கடிகளுக்குப் பிறகே ஒரு சில திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. 'மேதகு' என்கிற திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாவதற்கே பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இது போன்ற திரைப்படங்கள், இணையத் தொடர்கள் எளிதாக வெளியாகிவிடுகின்றன. எனில், இதன் பின்னணி ஆராயப்பட வேண்டும். முதல் இரண்டு சீஸன்களில் இஸ்லாமியர்களை, தமிழர்களைக் கொச்சைப்படுத்திய ஒரு வெப் சீரீஸை கருத்துரிமை, படைப்புரிமை என்கிற பெயரில் ஆதரிப்பது எவ்வளவு பெரிய கொடுமை. தவிர, இதில், தேவதர்ஷினி, அழகம்பெருமாள் போன்ற பல தமிழ் நடிகர்களும் நடித்திருக்கின்றனர். அவர்களுக்குக் கதை குறித்து முழுமையாக விவரிக்கப்படவில்லையா இல்லை இவர்களின் கதாபாத்திரத்துக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் தொடர்பில்லாமல் எடுத்திருக்கிறார்களா என்பதை இதில் நடித்த தமிழ் நடிகர்கள் விளக்க வேண்டும். ஒருவேளை, விடுதலைப்புலிகளைத் தவறாகச் சித்திரித்தது குறித்து தெரிந்தும் அவர்கள் நடித்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்தவர்கள்.

வணிக நோக்கத்துக்காகவும், ஆளும்வர்க்கத்தின் ஊதுகுழலாகவும் வெளியாகியுள்ள இந்த வெப் சீரீஸை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இன்று தமிழர்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டியவர்கள் அடுத்த சீஸனில் வடகிழக்கு மாநில மக்களை பயங்கரவாதிகளாகக் காட்டத் தயாராகிவிட்டார்கள். அதையாவது எதிர்த்து நாம் குரல் கொடுக்கப் போகிறோமோ இல்லை படைப்புச் சுதந்திரம் என்கிற பெயரில் கடந்து போகப் போகிறோமா? என்பதே ஈழ உணர்வாளர்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.

அதேநேரத்தில், ஒரு படைப்பின் கருத்துகளுக்காக எதிர்க்கருத்து வைத்து, மக்களிடம் அது குறித்து மேலும் கருத்துரையாடல்களை உண்டாக்கி, மக்களைப் புறக்கணிக்கச் செய்யலாமே தவிர, படைப்பாளர்களை, படைப்புகளை முடக்கும் செயலாக இதை அணுகக் கூடாது என்றும் வாதங்கள் எழுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு