Published:Updated:

இடதுசாரிகள்... வலதுசாரிகள்... காந்தியை ஏன் கொண்டாடுகிறார்கள்? #Gandhi150

காந்தி
காந்தி

பிரதமர் மோடியை ‘இந்திய தேசத்தின் தந்தை’ என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ‘புகழாரம்’ சூட்டியது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்தச் சூழலில், இந்தியாவின் தேசப்பிதா என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

பெரியாரின் தேவை அதிகரித்திருக்கிறது என்கிற குரல் இன்றைக்கு அதிகரித்திருப்பதைப் போலவே, காந்தியின் தேவை அதிகரித்திருக்கிறது என்ற குரலையும் தற்போது கேட்க முடிகிறது. இந்தச் சூழலில், ‘இன்றைய காலகட்டத்தில் காந்தியை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்கிற கேள்வியை இடதுசாரி மற்றும் வலதுசாரி என இரண்டு தரப்புகளின் முன்பாகவும் வைத்தோம்.

அருணன்
அருணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம்.

“காந்தி, ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னம், காந்தி, மதநல்லிணக்கத்தின் அடையாளம். இதைத்தாண்டி, கிராமங்கள் மீது மிகுந்த அக்கறைகொண்டிருந்தவர் காந்தி. இந்த மூன்றின் பிரதிநிதி என்ற வகையில் காந்தியை மிக உயர்ந்த இடத்தில்வைத்துப் பார்க்கிறோம்.

இன்றைக்கு நாட்டின் இறையாண்மை, மதநல்லிணக்கம், கிராமப்புறங்களின் நலன் ஆகிய மூன்றுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன்னுடைய பாணியில் காந்தி பேராடினார். பிறகு, காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்கிப் போராடினார். ஏகாதிபத்திய ஆட்சித் துரத்தியடிக்கப்பட வேண்டும், இந்தியர்களுக்கான இந்தியர்களின் ஆட்சி வரவேண்டும் என்று காந்தி விரும்பினார்.

காந்தி
காந்தி

இன்றைய பா.ஜ.க அரசோ, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்து கிடக்கிறது. ஈரானுடன் எந்த உறவும் கூடாது, எந்த வர்த்தகமும் கூடாது என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவுக்கு கட்டளையிடுகிறது. உடனே மோடி அரசு, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறது. இந்திய ரூபாய் கொடுத்து ஈரானிடம் நாம் எண்ணெய் வாங்கிக்கொண்டிருந்தோம். அந்த நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியவுடன் ஈரானுக்கான தூதர் முக்கியமான ஒரு செய்தியைச் சொன்னார். ‘எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதால், இந்திய ரூபாய் எங்களிடம் இல்லை' என்றார்.

அதாவது, நம் ரூபாய் அவர்களிடம் இருந்தால் நம் பொருள்களை அவர்கள் வாங்குவார்கள். இந்திய ரூபாய் இல்லாததால், நம் பொருள்களை அவர்கள் வாங்குவதில்லை. அதனால் நம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று சொல்வதற்கு நீ யார் என்று அமெரிக்காவைப் பார்த்து இந்திய ஆட்சியாளர்களால் கேட்க முடியவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு நம் ஆட்சியாளர்களிடம் இல்லை. இந்த நேரத்தில், ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்த்த காந்தியை நினைவுகூர வேண்டியிருக்கிறது.

கடைசியில், நாட்டின் பிரிவினைக்கு மௌன சாட்சியாக இருந்துவிட்டார். பிரிவினையையொட்டி மதக்கலவரம் ஏற்பட்டது. இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிட்டது.
அருணன்

மத நல்லிணக்கத்தின் அடையாளமான காந்தி, இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக நின்றார். ஆனால், இந்தியா பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று தவறான ஒரு பிரசாரம் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் என நாடு துண்டாடப்பட்டதைக் கடைசிவரை ஏற்காதவர் மகாத்மா காந்தி. மத அடிப்படையில் நாடு பிளவுபடக் கூடாது என்று எவ்வளவோ போராடிப் பார்த்தார். கடைசியில், நாட்டின் பிரிவினைக்கு மௌன சாட்சியாக இருந்துவிட்டார். பிரிவினையையொட்டி மதக்கலவரம் ஏற்பட்டது. இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிட்டது. அதனால் ஏற்பட்ட கலவரங்களில் ஆயிரக்கணக்கானோர் மாண்டுபோனார்கள். அதைக் கண்டு காந்தி கொதித்தார். அதேபோல, வங்காளத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தை அடக்குவதற்கு ஒற்றை மனிதராகச் சென்றவர் காந்தி.

இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியவர் காந்தி. அவர், இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இன்றைக்கு என்ன நிலைமை? அரசியல் ஆதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.க-வும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்து மக்களைத் திரட்டுகிறார்கள். எனவே, இந்தச் சூழலில் காந்தி தேவைப்படுகிறார்.

இன்றைக்கு காந்தி இருந்திருந்தால், இந்தக் கொடுமையைக் கண்டு ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்
அருணன்

கிராமப்புறப் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் காந்தி. கிராமப்புறங்களை மேம்படுத்த வேண்டும் என்று அவர் சொன்னார். விவசாயிகளை வளர்க்காமல் இந்தியா வளராது என்றார். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருப்பதாகச் சொன்னார். ஆனால், இன்றைக்கு இந்திய விவசாயிகள் நிலைமை படுமோசமாக இருக்கிறது. விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. கிராமப்புற மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. விவசாயம் நாசமானதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு காந்தி இருந்திருந்தால், இந்தக் கொடுமையைக் கண்டு ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்” என்றார் அருணன்.

காலந்தோறும் பின்பற்ற வேண்டிய காந்தி பொன்மொழிகள்! #VikatanPhotoCards

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியருமான இராம. நம்பி நாராயணனிடம் பேசினோம்.

“பாரத தேசத்தைப் பொறுத்தவரை அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி... மறக்க முடியாத ஒரு மனிதர் மகாத்மா காந்தி. சுதந்திரப் போராட்டத்தில் அவரின் அணுகுமுறை முக்கியமானது. அந்த அணுகுமுறை இல்லாமல் அவ்வளவு பெரிய மக்கள் ஒருங்கிணைப்பு நடந்திருக்கவே முடியாது. எனவே, சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.

இராம.நம்பி நாராயணன்
இராம.நம்பி நாராயணன்

மகாத்மா காந்தி... கிராம சுயராஜ்ஜியம் பற்றிப் பேசினார், சுதேசியம் பற்றிப் பேசினார், கலாசாரம் மற்றும் பண்பாடு பற்றிப் பேசினார், பாரத நாட்டுக்கென்று தனித்துவத்துடன் இருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றிப் பேசினார், ராமராஜ்ஜியம் பற்றிப் பேசினார். இவை எல்லாவற்றையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல, முஸ்லிம்களை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார். அதில், தவறில்லை. ஆனால், அதற்கும் மேலாக, முஸ்லிம்களைத் தாஜா பண்ண வேண்டும் என்பது அவரின் கோட்பாடாக இருந்தது. காந்தியின் மற்ற எல்லா விஷயங்களையும் ஏற்றுக்கொண்டு, முஸ்லிம்களைத் தாஜா செய்வது என்பதை மட்டும் இந்துத்துவா இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், காந்திக்குப் பிறகு வந்த காங்கிரஸ் கட்சியினரோ, முஸ்லிம்களைத் தாஜா செய்வது என்கிற ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, காந்தி சொன்ன மற்ற எல்லாவற்றையும் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டனர்.

ஆகவே, இன்றைக்கு உள்ள காங்கிரஸ் கட்சிக்கு காந்தியைச் சொந்தம் கொண்டாடும் உரிமை இல்லை. இவர்கள் காந்தியத்தைக் கொலை செய்தவர்கள். காந்தி பெயரைக் கொள்ளையடித்தவர்கள். அதாவது, நேரு குடும்பத்திலிருந்து வந்த இவர்கள் ‘காந்தி’ பெயரைக் கொள்ளையடித்து தங்கள் பெயர்களில் சேர்த்துக்கொண்டார்கள்.

அந்தப் புத்தகத்தைப் பற்றி விவாதிப்போம் என்று நேருவுக்கு காந்தி கடிதம் எழுதினார். ஆனால், கடைசிவரை அந்த விவாதத்துக்கு நேரு வரவே இல்லை.
நம்பி நாராயணன்

ஆர்.எஸ்.எஸ் என்பது மகாத்மா காந்தியை மிகவும் மதிக்கும் ஓர் இயக்கம். 1934-ல், ஆர்.எஸ்.எஸ் நடத்திய வார்தா முகாமுக்கு வந்த காந்தி, ‘நான் சாதி ஒழிப்பு என்பதைப் பிரசாரமாகச் செய்கிறேன். நீங்கள், அதை நடத்திக் காண்பிக்கிறீர்கள்’ என்று காந்தி சொன்னார். ஆர்.எஸ்.எஸ் அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டவர் காந்தி. அவருடைய சிந்தனைகளை, அவரின் எழுத்துகளே எடுத்துரைக்கும். அவர் எழுதிய ‘கிராம சுயராஜ்ஜியம்’ என்ற புத்தகத்தைப் படித்தால், எவ்வளவு அற்புதமாக இந்த நாட்டைப் பற்றி காந்தி கனவு கண்டுள்ளார் என்பது புரியும். அந்தப் புத்தகத்தின் நூற்றாண்டு விழாவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நாடு முழுவதும் கொண்டாடியது.

``நம் குழந்தைகளுக்குத் தாய்மொழியைக் கற்பியுங்கள்!" - காந்தி பிறந்த தின சிறப்புப் பகிர்வு

அப்படிப்பட்ட புத்தகத்தைத்தான், ‘குப்பையில் போடுவேன்’ என்று சொன்னார் நேரு. அந்தப் புத்தகத்தைப் பற்றி விவாதிப்போம் என்று நேருவுக்கு காந்தி கடிதம் எழுதினார். ஆனால், கடைசிவரை அந்த விவாதத்துக்கு நேரு வரவே இல்லை.

காந்தியின் படுகொலைக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக அரசியலுக்காகச் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மூன்று விசாரணை ஆணையங்களும் அது உண்மை அல்ல என்று சொல்லிவிட்டன.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பொறுத்தளவில், இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட மகான்களின் பெயர்களை, இந்த தேசத்தை உருவாக்கிய மகாபுருஷர்களின் பெயர்களை, தன் தினசரி பிரார்த்தனையில் சேர்த்துக்கொண்டுள்ளது. மகாத்மா காந்தி, அம்பேத்கர் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன. ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் பா.ஜ.க-வும் என்றைக்குமே காந்தியைக் கொண்டாடும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு