Published:Updated:

இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் சொல்வதென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின்
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின்

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்துக்கு தி.க தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதன் பின்னணி என்ன?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் `இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைனில் கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாகக் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இதற்காகப் பட்டப்படிப்பு நிறைவு செய்த தன்னார்வலர்கள் ஆன்லைன் மூலமாகப் பதிவுசெய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் இந்த வகுப்புகள் செயல்படவிருக்கின்றன. ப்ளஸ் டூ வரை படித்த மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கும், பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் 6 - 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கவிருக்கின்றனர். மொத்தம் 17 லட்சம் தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்துக்காகத் தேவைப்படுகிறார்கள். தொடர்ந்து ஆறு மாதத்துக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.

மாணவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாணவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இல்லம் தடிக் கல்வித் திட்டம் மாணவர்களிடையே மதவாத சிந்தனையையும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் புகுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

`அரசுப் பள்ளி வறுமை அல்ல, பெருமை’ - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சும் எதிர்பார்ப்பும்!

``இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. எல்லோருடைய கருத்தையும் மனதில்வைத்து, நவம்பர் முதல் இரண்டு வாரம் இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பள்ளிக் கல்வித்துறையும் உற்று கவனிக்கவிருக்கிறது.

நீங்கள் சொல்வதுபோல், இந்த அமைப்பு வந்திடுமோ, அந்த அமைப்பு வந்திடுமோ, இந்தச் சிந்தனைகள் உள்ளே வந்திடுமோ என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்கிறீர்கள். உண்மையில் அவர்கள் எதிர்க்கவில்லை, எச்சரிக்கையாக இருக்கச் சொல்லியிருக்கிறார்கள். தன்னார்வலர்களை நாங்கள் செலக்ட் செய்யும்போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அவர்களுடைய பின்புலம் என்ன, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அங்குள்ள உள்ளூர் மக்கள் மூலமாகவும் நாங்களும் விசாரித்துத்தான் முடிவெடுப்போம். இல்லம் தேடிக் கல்வி பெண்களுக்கு, அதன் பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். கொடுப்போம்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுத்தப்படவிருக்கிறது. முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் திட்டங்களைச் செயல்படுத்தி, அதிலுள்ள நிறை குறைகளைத் தெரிந்துகொண்டு மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவோம்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் இந்தத் திட்டம் குறித்துக் கேட்டோம். ``இல்லம் தேடிக் கல்வி என்பது மட்டுமல்ல... எந்தத் திட்டத்தையும் தொடங்குவதற்கு மழைக்காலம் என்பது ஒரு சரியான காலமில்லை. இந்தத் திட்டத்துக்குப் பெற்றோர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதும் அரசு எதிர்கொள்ளப் போகும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கும். கொரோனா காலத்தை நம்மால் கணிக்கவே முடியவில்லை. எப்போது, எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனும் சூழலில் இந்தத் திட்டம் எந்த அளவுக்கு வெற்றியடையும் என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குழந்தைகளின் கற்றல் என்பது எப்போதும், எந்தச் சூழுலிலும் தடைபடாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிகளுக்குச் செல்லவில்லையே தவிர குழந்தைகள் கற்றுக்கொண்டிருக்கும் விஷயங்கள் ஏராளம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு குழந்தையை மும்பையிலோ, வெளிநாட்டிலோ கொண்டு சென்று விட்டால் அவர்கள் உடனடியாக அந்த மொழி, பண்பாட்டுச் சூழலுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்வார்கள்.
நெடுஞ்செழியன்

எந்தச் சூழலிலும் குழந்தைகளின் கற்றல் செயல்பாடு தடைபடாது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். எனவே, கற்றல் தடைப்படும் என்று சொல்வதெல்லாம் தேவையில்லாத கருத்துகள்.

கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன்

இல்லம் தேடிக் கல்வி என்பதை எந்த அளவுக்குத் தொடர்ச்சியாக இந்த அரசு கொண்டுசெல்லப்போகிறது. அதற்குப் பெற்றோரையும் குழந்தைகளையும் எப்படிச் சம்மதிக்க வைக்கப்போகிறது, இந்தத் திட்டத்தில் ஆசியர்களை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருக்கின்றன. மற்றபடி எந்தத் திட்டத்தை, யார் கொண்டுவந்தாலும் ஏதாவது இரண்டு கட்சிகள் எதிர்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். அதன் பயன்தான் முக்கியம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என அரசின் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை விளக்கிக் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை - 2020 மத்திய அரசு தராவிட்டால் என்ன... இதோ பிடியுங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு!

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் பேசினோம். ``கல்வி எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. தன்னார்வலர்களைப் பயன்படுத்தி இல்லந்தோறும் சென்று கல்வி கற்பிக்கப்படும் என்று சொல்வதில்தான் மாறுபட்ட கருத்து உருவாகியது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை சமூகநீதியை மிகத் தீவிரமாகச் செயல்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகம் இல்லை.

ஒன்றிய அரசு மனுதர்மத்தைக் கல்வியில் புகுத்துவதற்குப் புதிய கல்விக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முயன்றுகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சில சமூகத்துக்கு மட்டுமே கல்வி கிடைக்க வேண்டும், சிலருக்குக் கொடுக்கப்படாமல் தவிர்க்க வேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த `இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டத்தையும் நாங்கள் பார்க்கிறோம்.
இரா.முத்தரசன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டம் எந்தச் சிக்கலும் இல்லாமல் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை, தன்னார்வலர்கள் என்ற பெயரில் சிலரால் குழந்தைகளிடம் புகுத்தும் வாய்ப்பு உருவாகிவிடும் என்ற அச்சத்தின் அடிப்படையில்தான் நாங்கள் அறிக்கை வெளியிட்டோம்.

இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

தி.மு.க-வின் நோக்கம் நல்லதுதான். அதை மறுக்கவில்லை. ஆனால், தன்னார்வல அமைப்புகளைப் பயன்படுத்தி இதைச் செயல்படுத்துவோம் என்று சொல்லும்போதுதான் அச்சம் ஏற்படுகிறது. முதல்வர் அளித்த விளக்கம் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது என்றாலும், அச்சத்தைத் தவிர்க்க முடியவில்லை” என இந்தத் திட்டம் குறித்தான விமர்சனத்தை முன்வைத்தார்.

விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``ஆசிரியர் கி.வீரமணியோ, தோழர் முத்தரசனோ சொல்வதைப்போல இந்தத் திட்டத்தைப் பிற்போக்குத்தனமாகப் பயன்படுத்த வாய்ப்புகள் இருப்பது உண்மைதான். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கியிருக்கிறார். கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைப் போக்கச் செய்யப்பட்ட தற்காலிக ஏற்பாடுதான் இது. அதன் பிறகு இது தேவையா... இல்லையா... என்பதை நாம்தான் முடிவு செய்யப்போகிறோம். முன்னெச்சரிக்கை உணர்வோடும், அக்கறையோடும் சொல்லப்படும் அனைத்துக் கருத்துகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் கருத்தில்கொள்வார். ‘இது ஓர் இனத்துக்கான ஆட்சி. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் இந்த அரசு செய்யும்’ என முதல்வர் கூறியிருக்கிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பிற்போக்குத்தனமான யாருடைய கையிலும் இது சிக்காமல் முதல்வர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையை முதல்வர்மீது வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு