Published:Updated:

நீட் சிறப்புப் பயிற்சியைத் தொடங்காமலிருக்கும் அரசு; சுட்டிக்காட்டும் எடப்பாடி - என்ன நடக்கிறது?

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
News
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

``தேர்தலின்போதும், பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோதும், உண்மையான சூழலை மாணவர்களிடம் தெரிவிக்காமல், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் நுழைவுத்தேர்வை தி.மு.க அரசியலாக்குகிறது." என்கிறார் பழனிசாமி.

நீட் தேர்வில் தேர்ச்சிபெறாத காரணத்தால் மாணவ - மாணவிகள் தற்கொலை செய்யும் துயரம் தொடர்கதையாக நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். அதேபோல, பேராவூரணியை அடுத்த ஊமத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வை எழுதினார். தனது கனவு நிறைவேறாத காரணத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``தேர்தலின்போதும், பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோதும், உண்மையான சூழலை மாணவர்களிடம் தெரிவிக்காமல், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் நுழைவுத்தேர்வை தி.மு.க அரசியலாக்கியது.

அதுதான், மாணவ-மாணவிகளின் மன உளைச்சலுக்கு காரணம். இனியாவது மாணவர்களிடம் உண்மையான நிலைமையை எடுத்துக்கூறி, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை நீட் சிறப்பு பயிற்சியை நடத்த வேண்டும். அந்த பயிற்சி வகுப்புகளை உடனடியாகத் தொடங்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. கடந்த ஆண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின்போது, நீட் தேர்வு எழுத விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அந்த பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உணவும் தங்குமிடமும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அரசு கூறியது. அதற்கான ஆசிரியர்களுக்கு இரண்டு வார காலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணத்தால், மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ``நீட் தேர்வை ஆரம்பம் முதலே தி.மு.க எதிர்த்து வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடும் தொடரும் வகையில் மசோதா இருக்கும். நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போது, எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை அ.தி.மு.க வரவேற்கிறது” என்று கூறினார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்திருப்பதாக தற்போது விமர்சனம் எழுந்திருக்கிறது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தி.மு.க மக்களவைக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் அனைத்துகட்சிகளும் ஒருங்கிணைந்து கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. அது உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பவில்லை. அதை அவரே வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதுஎன்ன நியாயம் என்று பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநரிடம் இது பற்றி கேட்டிருக்கிறார். அமைச்சர் துரைமுருகனை அனுப்பியும் இது பற்றி முதல்வர் விசாரித்திருக்கிறார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை நான் சந்தித்துப் பேசினேன். இத்தனைக்குப் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் டி.ஆர்.பாலு.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

மேலும் அவர், ``19 பேரை பலி வாங்கிய நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மாநில அரசு இயற்றிய சட்டத்தை ஆளுநர் தன் கையிலேயே வைத்துக்கொண்டிருப்பது என்ன நியாயம்? இது குறித்து நேரடியாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடப் போகிறோம். சட்டப்பேரவையில் அ.தி.மு.க, பா.ஜ.க என அனைத்துக் கட்சியினரும் நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவு அளித்தனர். ஆனால், குடியரசுத் தலைவரிடம் இது குறித்து பேசுவதற்கு அவர்கள் வரத் தயாராக இல்லை. இதற்கான மனுவில் அவர்கள் கையெழுத்துப் போடவும் இல்லை” என்று கூறினார்.

இந்த நிலையில்தான், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும்வரை, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்த வேண்டும் என்றும், அதை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

இது குறித்து தி.மு.க-வின் செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறோம். ஆனால், ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார். இது பற்றி தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்கிறார்கள். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும் என்று பிரதமரிடமும் வலியுறுத்தியிருக்கிறோம்.

அடுத்த நீட் தேர்வை நடத்துவதற்குள் இதில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ, அத்தனையையும் பார்ப்போம். அதன் பிறகு, நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கையை உறுதியாக எடுத்தால் எந்தப் பின்னடைவும் வராது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கடந்த ஆண்டுக்கான மருத்துவக் கல்வி அட்மிஷன் இன்னும் முடியவில்லை. இப்போதுதான் அது தொடங்கியிருக்கிறது. ஏனென்றால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்படவில்லை. இந்த இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அது முடிந்தால்தான் எம்.பி.பி.எஸ் அட்மிஷன் போட முடியும் என்ற நிலை. அதன் பிறகு நீட் தேர்வை நடத்துகிறார்களா என்று பார்க்க வேண்டும். அதற்கிடையில் நீட் தேர்வு காலியாகிவிடும் என்று நம்புகிறோம். காத்திருப்போம். ஒன்றும் அவசரம் இல்லை" என்றார்.