Published:Updated:

``முதல்வர் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?" - திருவள்ளுவர் விவகாரத்தில் கி. வீரமணி கேள்வி

ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படாத நீட் தேர்வு தேவையா என்று திராவிட மற்றும் முற்போக்குக் கட்சிகள் எதைச் சொன்னதோ அதைத்தான் நீதிபதிகள் நேற்று கேள்வியாகக் கேட்டிருக்கிறார்கள்.

கி.வீரமணி
கி.வீரமணி ( எம்.வியகுமார் )

சேலம் மாவட்டத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது அவர், `` மத்தியில் ஆட்சியைப் பிடித்து விட்டோம் என்று எப்படி வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்று செயல்படுகிறது பா.ஜ.க. இதற்குத் தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் தலையாட்டி கூட்டமாகச் செயல்படுகிறார்கள். வள்ளுவர் மீது சாணி அடிப்பதன் மூலம் அவரை அவமானப்படுத்த முடியாது. இதன் மூலம் தமிழகத்தில் திராவிட இயக்கங்களை கோபப்படுத்திக் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். தமிழ் உணர்வாளர்களும் பற்றாளர்களும் கட்டுப்பாட்டுடன் எவ்வித கலவரத்திலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். உணர்வைத் தூண்டிவிட்டு அடக்குமுறையில் ஈடுபட முயல்கிறார்கள்.

கி.வீரமணிக்குப் பாராட்டு
கி.வீரமணிக்குப் பாராட்டு
எம்.விஜயகுமார்

திருவள்ளுவர் விவகாரத்தில் தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? வள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல. மோடி வித்தைகளில் தலை சிறந்த பல வித்தைகள் உண்டு. அதில் தற்போது பல இடங்களில் தமிழைக் குறிப்பிட்டும் திருக்குறள், புறநானூறு போன்றவற்றை எடுத்துரைத்தும் தன் உரையைத் தொடங்குகிறார். ஒரு பக்கம் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பதும் மறுபக்கம் தமிழ் குறித்துப் பேசுவதும் என பா.ஜ.கவினர் இரட்டை வேடம் போடுகிறார்கள்.

ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படாத நீட் தேர்வு தேவையா என்று திராவிட மற்றும் முற்போக்குக் கட்சிகள் எதைச் சொன்னதோ அதைத்தான் நீதிபதிகள் நேற்று கேள்வியாகக் கேட்டிருக்கிறார்கள். கட்சி வேறுபாடின்றி சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். கறையான் கூட்டில் கருநாகம் புகுந்தது போல மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மக்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வு அமைந்துள்ளது. நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்ற கிளர்ச்சியை திராவிடக் கழகத்தின் நோக்கமாக வைத்துச் செயல்படுவோம்'' என்றார்.