Published:Updated:

அந்த 6 சுங்கச்சாவடிகள்... தி.மு.க ஆர்ப்பாட்டம்! - #Dont_Want_Tollgate ட்விட்டரில் டிரெண்டானது ஏன்?!

சுங்கச்சாவடி - தி.மு.க ஆர்ப்பாட்டம்
சுங்கச்சாவடி - தி.மு.க ஆர்ப்பாட்டம் ( twitter/DMK_ITwing )

`தேசிய நெடுஞ்சாலையிluள்ள சுங்கச்சாவடிகளுக்குத்தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மாநகராட்சி எல்லைக்குள்ளிருக்கும் சுங்கச்சாவடிகளுக்கு முதல்வரிடம் முறையிடுங்கள்.'

#Dont_Want_Tollgate என்ற ஹேஷ்டேக் நேற்று இரவிலிருந்து தமிழக அளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. நேற்றிரவு தி.மு.க ஐடி விங்கில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டதிலிருந்துதான் இந்த ஹேஷ்டேக் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.

#Dont_Want_Tollgate
#Dont_Want_Tollgate
twitter/DMK_ITwing
பெரியார் Vs மோடி: தமிழில் டிரெண்டாகும் எதிர்மறை ஹேஷ்டேக்குகள்... எல்லைமீறும் ட்விட்டர் யுத்தம்!

தி.மு.க ஐடி விங் வெளியிட்ட அந்த வீடியோவில் பேசிய சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன், ``சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் ஒரு வழக்கில் சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். `மதுரவாயல் முதல் வாலாஜாபாத் வரையிலுள்ள சாலை மிக மிக மோசமாகப் பராமரிக்கப்படுகிறது. இந்தநிலையிலும் டோல்கேட் கட்டணம் வசூலிப்பதை மட்டும் நிறுத்தவில்லை' என்று நீதிபதிகள் கண்டனங்களைப் பதிவிட்டிருக்கிறார்கள். ஆகவே, தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் டோல்கேட் வசூல் பெரிய அளவில் இருக்கிறது. அதேநேரத்தில், மாநகராட்சி எல்லைக்குள்ளேயே டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுவது கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் சென்னையில் நடைபெற்றுவருகிறது. இது மிகப்பெரிய அநியாயம்'' என்று கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர்,

துரைப்பாக்கம், பெருங்குடி, அக்கரை, உத்தண்டி, சோழிங்கநல்லூர், போரூர் ஆகிய ஆறு இடங்களில், மாநகராட்சி எல்லைக்குள்ளாகவே இந்தச் சுங்கச்சாவடிகள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டுவருகிறது. இது மிகப்பெரிய அளவில் மக்களைச் சுரண்டும் செயல்.
மா.சுப்பிரமணியன், தி.மு.க

மேலும் அந்த வீடியோவில், `` சுங்கச்சாவடிகள் மூலம் மக்களின் பணத்தைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயத்தை முன்வைத்து தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த பிப்ரவரி 10-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, `தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகளுக்குத்தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மாநகராட்சி எல்லைக்குள்ளிருக்கும் சுங்கச்சாவடிகளுக்கு முதல்வரிடம் முறையிடுங்கள்' என்று தெரிவித்தார். அன்று மாலையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து சுங்கச்சாவடிகளை அகற்றச் சொல்லி தமிழக அரசிடம் நீங்களே வலியுறுத்துங்கள் என்று கடிதம் ஒன்றை வழங்கிவிட்டு வந்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.

இதையடுத்து பிப்ரவரி 18-ம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டுமெனக் கோரிக்கைவைத்தார். 10 மாதங்கள் கடந்துவிட்டன. இப்போது வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் செப்டம்பர் மாதத்தில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், `மாநகராட்சிக்குள் அமைந்திருக்கும் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும்' என்று முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார். அதற்கும் இதுவரை பதில் இல்லை. இதனால் நாளை சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடி அருகே தி.மு.க சார்பில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கிறது'' என்று தெரிவித்திருந்தார்.

இதன்படி இன்று (11.12.2020) காலை 10 மணியளவில் சோழிங்கநல்லூரில் மா.சுப்ரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏராளமான தி.மு.க-வினரும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

சுங்கச்சாவடி -  தி.மு.க ஆர்ப்பாட்டம்
சுங்கச்சாவடி - தி.மு.க ஆர்ப்பாட்டம்
Twitter/@Dayanidhi_Maran
`#TooMuchDemocracy: இந்தியாவில் சீர்திருத்தங்கள் செய்வது கடினம்' - நிதி ஆயோக் சி.இ.ஓ சொன்னது என்ன?
மேலும் தி.மு.க-வினர் பலரும் ட்விட்டரில், `விதிமுறைகளை மீறி மாநகராட்சி எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள ஆறு சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும்' என்று வலியுறுத்தி #Dont_Want_Tollgate என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். இதன் காரணமாகத்தான் இந்த ஹேஷ்டேக் தமிழக அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.
அடுத்த கட்டுரைக்கு