Published:Updated:

சாத்தான்குள சம்பவத்தில் காய் நகர்த்தும் பா.ஜ.க, எல்.முருகனை ஏன் சந்திக்கவில்லை எடப்பாடி? - கழுகார் அப்டேட்ஸ்

எடப்பாடி பழனிசாமி மற்றும் எல்.முருகன்
எடப்பாடி பழனிசாமி மற்றும் எல்.முருகன்

``செக் யுவர் மெயில் பாக்ஸ்” - கழுகாரிடமிருந்து வந்தது குறுந்தகவல். மின்னஞ்சலைத் திறந்து பார்த்தால் கழுகார் அனுப்பிய தகவல்கள் கொட்டிக்கிடந்தன! அப்புறமென்ன...

தமிழகக் காவல்துறையில் அதிரடி மாற்றம்... விரைவில் வெளியாகிறது உத்தரவு?

இன்றைய தேதியான ஜூன் 30-ஐ முன்னிட்டு விரைவில் தமிழகக் காவல்துறையில் பணியிட மாற்றங்கள் தொடர்பான உத்தரவு வெளியாகும் என்கிறார்கள். தமிழகத்தில் ஐ.ஜி ரேங்க்கில் இருக்கும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரான வரதராஜன் மற்றும் தென் மண்டல ஐ.ஜி-யான் சண்முக ராஜேஸ்வரன் இருவரும் இன்றுடன் (ஜூன் 30) பதவி ஓய்வுபெறுகிறார்கள். இரண்டு பதவியிடங்களுமே மிகவும் முக்கியமானவை என்பதால், அந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்பியாக வேண்டும். இதனால், ஜூன் 30-ம் தேதி காலையே பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி-யாக இருந்த முருகனை, தென்மண்டல ஐ.ஜி பதவிக்கு நியமித்து உத்தரவு வெளியாகியிருக்கிறது. திருச்சிக்கும் விரைவில் ஆணை வெளியாகும்.

இதை முன்வைத்து நீண்டநாள்களாக திட்டமிட்டு வந்த பணியிட மாற்றங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள். இதில் பல்வேறு மாவட்ட எஸ்.பி-க்கள் மற்றும் மாநகர போலீஸ் ஆணையர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளது. சென்னை போலீஸ் கமிஷனராக இருக்கும் ஏ.கே.விஸ்வநாதன் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பதவியில் தொடர்வதால் அவரும் மாற்றப்படலாம். அவர் சென்னையிலேயே ஏ.டி.ஜி.பி (அட்மின்) பொறுப்புக்கு நியமிக்கப்படலாம். சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ் பெயர் அடிபடுகிறது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரிவு டி.ஜி.பி-யான திரிபாதி தரப்பில் தற்போது போலீஸ் நலவாழ்வுத்துறை ஏ.டி.ஜி.பி-யாக இருக்கும் தாமரைக்கண்ணனை சென்னை போலீஸ் கமிஷனர் பதிவுக்குக் கொண்டுவர காய்நகர்த்தப்படுகிறதாம்.

மீண்டும் மீண்டும் பதவி நீட்டிப்பு கேட்கும் அதிகாரி... கடுப்பில் சென்னை மாநகராட்சி வட்டாரம்

சென்னை மாநகராட்சி பி.ஆர்.ஓ-வாக இருப்பவர் உமாபதி. ஏற்கெனவே இவர் மேலிட ஆசியுடன் ஓய்வு பெற்ற பிறகும் ஒரு வருடப் பதவி நீட்டிப்பில் இருந்தார். இவருக்கு ஜூன் 30-ம் தேதியுடன் பதவிக்காலம் நிறைவடைகிறது. ஆனால், வெயிட்டான நாற்காலி என்பதால் மீண்டும் ஒரு வருடம் அதே பதவியில் நீடிக்கக் கடுமையாக அழுத்தம் கொடுக்கிறாராம். இதனால், அந்தத் துறையிலுள்ள பிற மக்கள் தொடர்பு அதிகாரிகள், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் அனைவரும் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்கள்.

``சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறினார் உமாபதி. மாநகராட்சி கமிஷனர் பிரகாஷிடம் போய் மலர்க்கொத்துக் கொடுத்து, பணிக்கு வருவதாகச் சொன்னார். ஆனால், பிரகாஷே, உமாபதிக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் பரப்பப்பட்டது. இதைப் பார்த்த கமிஷனர் பிரகாஷ் டென்ஷனாகிவிட்டார்” என்கிறார்கள் உமாபதியின் எதிர்கோஷ்டியினர்.

எல்.முருகன்
எல்.முருகன்
முருகனுக்கு நோ அப்பாயின்ட்மென்ட்!
கடுப்பில் முதல்வர் எடப்பாடி

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பதவி ஏற்ற கடந்த மூன்று மாதங்களில் பலவழிகளில் முட்டி மோதியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லையாம். இதற்கிடையே, ஜூன் 28-ம் தேதி காணொலிக்காட்சியில் பா.ஜ.க தொண்டர்களிடம் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் பேசினார். அப்போது, `சீனா விவகாரத்தில் பிரதமருக்கு ஆதரவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த நிலைப்பாட்டைப் பாராட்டுகிறேன்’ என்று சொல்லிவிட்டார். இதைக் கேள்விப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருக்கிறாராம். இதை முன்வைத்து, ``இனி எங்கே அவர் முருகனைச் சந்திக்கப்போகிறார்?” என்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்!

``பேச்சே சரியில்லை..."
பொரிந்து தள்ளிய ஸ்டாலின்!

சமீபத்தில் தி.மு.க கட்சித் தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் தனது கட்சியின் அனைத்து அணியினரிடமும் உரையாடினார். அந்த வகையில் செய்தித் தொடர்பாளர்கள் அணியினிரிடமும் பேசினார். அப்போது காணொலியில் `பிரசன்னம்' தந்த அந்தப் பிரமுகரிடம் மிகக் கடுமையாகப் பொரிந்து தள்ளிவிட்டாராம் ஸ்டாலின். ``தம்பி, உங்க பேச்சே சரியில்லை... வக்கிரமாக இருக்குன்னு பல இடங்களிருந்து புகார் வருது. நானும் டி.வி சேனல்கள்ல உங்க பேச்சைக் கவனிக்கிறேன். பேச்சு சரியில்லை. நீங்களா மாத்திக்கோங்க!" என்று எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டதாம்! கப்சிப் ஆகிவிட்டாராம் பேச்சாளர்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

அறை எண் 4-ல் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

எழும்பூர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பு மெஸ்ஸில் தமிழகச் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யான திரிபாதி அவ்வப்போது தங்கிப்போவதை ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதேபோல், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறை எண் 1-ஐ தலைமைச்செயலாளர் சண்முகத்துக்கும் அறை எண் 4-ஐ சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கும் ரிசர்வ் செய்துள்ளார்கள். பொது இடங்களுக்கு மருத்துவரீதியான ஆய்வுகளுக்கு விசிட் அடிக்கும் ராதாகிருஷ்ணன், விசிட்டை முடித்த கையுடன், விருந்தினர் மாளிகைக்கு வந்து அவரது அறையில் குளியல் போட்டுவிட்டே மீண்டும் விசிட்டை தொடர்கிறார் அல்லது வீட்டுக்குத் திரும்புகிறார். தலைமைச்செயலாளர் மட்டும் இன்னும் அறைக்குப் போகவில்லை.

பழம்பெரும் பாடகர் மரணம்... உடல்நிலை பாதித்த பழம்பெரும் நடிகை!

பிரபல சினிமா பாடகர் ஏ.எல்.ராகவன் சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனார். அவருக்கு வயது 86. அவரின் மனைவி எம்.என்.ராஜம். இவருக்கு வயது 80. கணவர் இறந்த அன்று கவலையுடன் இருந்த ராஜத்துக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். ராஜத்துக்குக் கொரோனா தொற்று என்று செய்தி பரவியது. ஆனால், அது வதந்தியாம். தற்போது ராஜம் உடல்நிலை சீராகி வீடு திரும்பிவிட்டார்.

சாத்தான்குளம் மரணங்கள்
சிக்கலில் அ.தி.மு.க... சீரியஸாகக் காய்நகர்த்தும் பா.ஜ.க

சாத்தான்குளம் விவகாரம் அ.தி.மு.க அரசுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மைச் சமூகத்தினர் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இந்தநிலையில், சாத்தான்குளம் விவகாரம் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்திருக்கிறது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியினர் அடக்கி வாசிப்பதற்கான வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இன்னொருபக்கம் பா.ஜ.க தரப்பு இதை முன்வைத்து பெரியளவில் அரசியல் செய்யவும் திட்டமிட்டுள்ளதாம். குறிப்பிட்ட சில சாதி அமைப்பு பிரமுகர்களிடம் டெல்லியிலிருந்தே சிலர் பேசிவருகிறார்களாம்!

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

ஒரே நாடு ஒரே கல்வி... களமிறங்கிய டெல்லி பா.ஜ.க பிரமுகர்

யோகா, வந்தே மாதரம் பாடல், இந்திமொழி ஆகியவற்றை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அஸ்வினி உபாத்யாயா தற்போது, `ஒரே நாடு ஒரே கல்வி வாரியம்’ என்பதைக் கையில் எடுத்திருக்கிறார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், டெல்லி பா.ஜ.க செய்தித் தொடர்பாளருமான இவர், ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை சட்டரீதியாக நிறைவேற்றுவதற்காகவே அந்த அமைப்பால் வளர்த்தெடுக்கப்பட்டவராம்.

`சி.பி.எஸ்.இ, மெட்ரிக்குலேஷன், ஸ்டேட் போர்டு எனத் தனித்தனி பாடத்திட்டங்களாக இருப்பதால் நுழைவுத் தேர்வுகளின்போது மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். அதற்காகவே ஒரே கல்வி வாரியக் கோரிக்கை’ என வெளியில் சொன்னாலும், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் இந்துத்துவச் சிந்தனைகளைத் விதைத்துவிட வேண்டும் என்பதுதான் உண்மையான திட்டமாம். ஏற்கெனவே இந்த மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா காலத்தில் இதை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற முடிவுடன் இந்த முறை களம் இறங்கியிருக்கிறாராம் அஸ்வினி உபாத்யாயா.

தஞ்சை தி.மு.க புள்ளிக்கு டெண்டர்... வாயைப் பிளக்கும் அ.தி.மு.க பிரபலங்கள்!

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. உரிமத்துடன் வரும் லாரிகளுக்கு மணல் அள்ளிக் கொடுப்பதற்கான ஒப்பந்தத்தை திருவாரூர் மாவட்டம் வடுவூரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரான அன்புவேல் என்பவர் எடுத்துள்ளார். திருவாரூர் தி.மு.க எம்.எல்.ஏ-வான பூண்டி கலைவாணனுக்குத் தேர்தலின்போது அனைத்து உதவிகளையும் செய்தவர் அன்புவேல். தவிர, தஞ்சாவூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர். அ.தி.மு.க அமைச்சர்களுக்கு நெருக்கமான பலரும் இந்த ஒப்பந்தத்தை எடுப்பதற்குப் போட்டியிட்ட நிலையில், தி.மு.க பிரமுகருக்கு மணல் ஒப்பந்தம் சென்றது என்ன மாயமோ... என்ன மந்திரமோ என்று வாயைப் பிளக்கிறார்கள் அ.தி.மு.க புள்ளிகள்!

தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு க்ரீன் சிக்னல்... அதிர்ச்சியில் தளவாய் சுந்தரம்!

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமாருக்கும் நாகர்கோவில் தி.மு.க எம்.எல்.ஏ-வான சுரேஷ்ராஜனுக்கும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் இருந்தது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் தி.மு.க சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதுநடந்த இரண்டு நாள்களில் சரவணகுமார் மாற்றப்பட்டு ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குமரி அ.தி.மு.க நிர்வாகிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக, குமரி மாவட்டக்காரரான தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் இதை எதிர்பார்க்கவே இல்லையாம். ``நமக்கு இல்லாத செல்வாக்கு தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு வந்தது எப்படி? தலைமைச் செயலகத்தில் யாருக்கு பலம் அதிகம்?” என்கிற அதிகாரப் பஞ்சாயத்து குமரி அரசியலில் தூள் பறக்கிறது.

தனி ரூட் போடும் தனிப்பிரிவு... வேலூர் காக்கிகள் கலக்கம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எஸ்.பி-யின் தனிப்பிரிவு போலீஸார் ஆஜராகி வக்காலத்து வாங்குவதால், சட்டம்-ஒழுங்குப் பிரிவு போலீஸார் கொதிப்பில் இருக்கிறார்கள். மரம் வெட்டுவது தொடங்கி மணல் கடத்தல் வரை காவல் நிலையப் பகுதிகளில் நடைபெறும் சம்பவங்களை எஸ்.பி அலுவலகத்துக்குத் தகவல் கொடுப்பது மட்டுமே தனிப்பிரிவு போலீஸாரின் வேலை. ஆனால், எஸ்.பி-யுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து முதல் கல்லா கட்டுவது வரையில் இவர்களின் தலையீடு அதிகம் என்கிறார்கள். இதற்கு ஒத்துழைக்காத போலீஸாரை மேலிடத்தில் போட்டுக்கொடுத்து மெமோ வாங்கிக் கொடுத்துவிடுகிறார்களாம்!

வீடு கட்டும் திட்டத்தில் குளறுபடி!

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் ஏகத்துக்கும் குளறுபடிகள் என்கிறார்கள். உதாரணத்துக்கு, இந்திரா குடியிருப்புத் திட்டத்தின்கீழ் ஒருவர் வீடு கட்டியுள்ளார் என்றால், அவர் பெயரிலேயே கலைஞர் வீடு கட்டும் திட்டம், அம்மா வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என மாறி மாறி இரண்டு முதல் நான்கு வீடுகள் வழங்கியிருக்கிறார்களாம் அதிகாரிகள். வீடே இல்லாமல் குடிசையில் வாழும் பலரின் பெயரிலும் கட்சி பிரமுகர்கள் பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறதாம்!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
அக்கறை காட்டுவாரா ஓ.பி.எஸ்?

தேனி மாவட்டத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கும், தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள நபர்களுக்கும் சரியான நேரத்தில் உணவு கிடைப்பதில்லையாம். தொடக்கத்தில், கொரோனா நோயாளிகளின் உணவு விஷயத்தில் சிறப்பாகச் செயல்பட்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம், இப்போது அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மட்டும் நடத்திவிட்டு நகர்ந்துவிடுவதாக தேனி மக்கள் குமுறுகிறார்கள். ஓ.பி.எஸ்-யின் தொகுதியான போடியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிலைமை ரொம்ப மோசம் என்கின்றனர். கண்டுகொள்வாரா ஓ.பி.எஸ்?

ஆதரவற்ற பெண்ணுக்கு வேலைவாய்ப்பு இல்லை... பின்னணியில் அமைச்சர்?

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் தமிழ்நாடு முழுவதும் இயங்கும் மாணவர் விடுதிகளுக்கான சமையலர் பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளன. அதில் பணி நியமனத்துக்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், பணம் வாங்கிக்கொண்டு பணி நியமினங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு அந்த மாவட்டத்தைச் சார்ந்த கணவரை இழந்த ஆதரவற்ற பெண்மணி ஒருவர் விண்ணப்பித்தார். தமக்குப் பணி வாய்ப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சத்தித்து மனுக்களும் கொடுத்துள்ளார். அதிகாரிகளும் பணி வாய்ப்பு வழங்குவது பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று எழுத்து மூலமாக அந்தப் பெண்ணுக்குப் பதில் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பாக விருதுநகர் மாவட்டத்தில் 21 சமையலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், அந்தப் பெண்ணுக்குப் பணி வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் அவர் கேட்டபோது, `பணி நியமனங்களை அமைச்சர் ஒருவர்தான் முடிவுசெய்தார்’ என்று கூறப்பட்டதாம். ``பதவியைப் பிடுங்கியும் திருந்தவில்லை... கொரோனா காலத்தில் இப்படியும் கொள்ளையடிப்பது!” என்று பொதுமக்கள் கொந்தளிக்கிறார்கள்.

திருத்தணி காணிக்கை ஜாக்கிரதை!

திருத்தணி கோயில் வளாகத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை மாதம் ஒரு முறை எண்ணுவார்கள். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மூன்று மாதங்களாக உண்டியல்கள் திறக்கப்படவில்லை. பக்தர்களுக்கும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், உண்டியல்களில் இருக்கும் காணிக்கைகளைப் பராமரிப்பதற்காக ஜூன் 25-ம் தேதியன்று உண்டியல்களைத் திறந்தனர். இதில் சுமார் 59 லட்ச ரூபாய் ரொக்கம், அரை கிலோ தங்கம், மூன்று கிலோ வெள்ளி இருந்ததாம். கொரோனா காலத்தில் இவற்றைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதே அதிகாரிகளின் கவலை. காணிக்கை ஜாக்கிரதை!

ஆ.ராசாவின் மனசிலே!

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.பி-யான ஆ.ராசா, இப்போதெல்லாம் சென்னை பக்கமே வருவதில்லை; மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என்கிறார்கள் கட்சிக்காரர்கள். டெல்லியிலிருந்து நேரடியாக கோவைக்கு விமானத்தில் வந்து, அப்படியே நீலகிரிக்குப் போகிறார். இப்படித்தான் சமீபத்தில் டெல்லியிருந்து வந்தபோது, ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள வீட்டில் ஏழு நாள்கள் தனிமையில் இருந்தார். பிறகு சில நாள்கள் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மீண்டும் டெல்லிக்கே பயணமாகிவிட்டார். சொந்த ஊரான பெரம்பலூருக்குக்கூட போகவில்லை. `ராசாவின் மனசிலே என்ன இருக்கிறது?’ என்பது யாருக்கும் தெரியவில்லையாம்!

ராசா
ராசா

மகனுக்கு டெண்டர்... மல்லுகட்டும் ஈரோடு அ.தி.மு.க-வினர்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டை ஈரோடு பேருந்து நிலையத்துக்கு மாற்றினார்கள். இப்போது பேருந்துகள் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, அருகிலிருக்கும் வ.உ.சி பூங்காவுக்கு மார்க்கெட்டை மாற்றுவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன. இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவானதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இந்தப் பணியை ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான தென்னரசுவின் மகன் கலையரசன்தான் தன் ஆதரவாளர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். `தற்காலிகமாக தகரக் கொட்டகை போடுவதற்கு ஒரு கோடி ரூபாய் பில்லா?’ எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இன்னொருபக்கம் அ.தி.மு.க கட்சியினரோ, ``மாநகராட்சியின் டெண்டர்கள் அனைத்தையும் மகனுக்கே தென்னரசு வாரிக் கொடுக்கிறார்” என்று புலம்புகிறார்கள்!

அடுத்த கட்டுரைக்கு