Published:Updated:

ஓபிஎஸ், சசிகலா, தினகரன்... யாருக்கும் இடமளிக்காத எடப்பாடியின் திட்டம்தான் என்ன?!

பன்னீர், தினகரன், எடப்பாடி

தினகரனை தவிர்க்கத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து சசிகலா, ஓ.பி.எஸ் என அந்த வரிசையில் ஆள்கள் இணைந்துகொண்டே இருக்கிறார்கள். இந்தத் தவிர்ப்புக்கான காரணம் என்ன?!

ஓபிஎஸ், சசிகலா, தினகரன்... யாருக்கும் இடமளிக்காத எடப்பாடியின் திட்டம்தான் என்ன?!

தினகரனை தவிர்க்கத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து சசிகலா, ஓ.பி.எஸ் என அந்த வரிசையில் ஆள்கள் இணைந்துகொண்டே இருக்கிறார்கள். இந்தத் தவிர்ப்புக்கான காரணம் என்ன?!

Published:Updated:
பன்னீர், தினகரன், எடப்பாடி

அ.தி.மு.க-வுக்குள் இருக்கும் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தற்போது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான குழப்பமும் சேர்ந்துகொண்டது. இந்த மாதத் தொடக்கத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த அ.தி.மு.க-வின் 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், “எதிரிகளுக்கு வழிவிடக் கூடாது என நினைத்து ஓ.பி.எஸ் அவர்களுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க உடன் கூட்டுச் சேர்ந்து பி டீம் உருவாக்கி கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர். தி.மு.க-வை வீழ்த்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்” எனப் பேசி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் அடியை எடுத்துவைத்தார் எடப்பாடி.

அடுத்த நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் தினகரன், ``நாங்கள் 5 ஆண்டுகளாக அ.ம.மு.க என்ற இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதனால் நாங்கள், திமுகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம். திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்துவதற்காகச் சட்டமன்ற பொதுத் தேர்தலின்போதே நான் விட்டுக்கொடுத்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போதும் சொல்கிறேன், திமுக என்கிற தீயசக்தியை வருங்காலத்தில் வீழ்த்த வேண்டுமென்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, எங்கேயிருந்தாலும் சரி, எந்த மெகா கூட்டணி அமைக்கிறவர்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களைப் பார்த்து கேவலமாகப் பேசுகிறவர்களாக இருந்தாலும் சரி அந்தக் கூட்டணியில் இருப்போம்.” எனச் சொல்லியிருந்தார்.

ஓபிஎஸ், சசிகலா, தினகரன்... யாருக்கும் இடமளிக்காத எடப்பாடியின் திட்டம்தான் என்ன?!

எடப்பாடி, தினகரனின் கருத்துகளை அடுத்து இருவரும் கூட்டணி அமைக்கவிருக்கிறார்கள் என்ற பேச்சு அரசியல் தளத்தில் அனலைக் கிளப்பியது. ஆனால், தற்போது, “தினகரனுடன் கூட்டணி அமைக்க ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை” என எடப்பாடியும், “எடப்பாடியுடன் கூட்டணி அமைக்கக் கால் சதவிகிதம் கூட வாய்ப்பில்லை” எனத் தினகரனும் சொல்லி, புது திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் என யாரையும் சேர்த்துக்கொள்ளாமல் தன்னிச்சையாக எடப்பாடி இருப்பதற்கான காரணம் என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்...

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம். ``தனித் தலைவர் என்ற முத்திரையோடு வலம் வரத் தொடங்கிவிட்டார் எடப்பாடி. அதற்காகப் பலரையும் எதிரியாக்கிவிட்டார். இனித் திரும்பிப் போனால் தனக்கு மரியாதை இருக்காது என நினைக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு, பத்து ஆண்டு ஆட்சி மீதான மக்களின் வெறுப்பு, பா.ஜ.க கூட்டணியால் இழந்த சிறுபான்மையினர் வாக்கு எனப் பல்வேறு நெருக்கடிக்கிடையிலும் 65 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதற்கு மக்கள் தன்னை தலைவராக ஏற்றுக்கொண்டதாலேயே அந்த வெற்றி கிடைத்தது என நினைத்துக்கொண்டார்.

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் என நீதிமன்றம் அங்கீகரித்ததையடுத்து பொதுக்குழுவையும் நீதிமன்றம் அங்கீகரித்து கட்சியின் ஒற்றைத் தலைவராகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஒருவேளை நவம்பர் 21-ம் தேதி வரும் தீர்ப்பு தாமதமானாலும் தனக்குக் கட்சி உறுப்பினர்களிடம் இருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்து அடுத்த 21 நாள்களில் பொதுக்குழுவைக் கூட்டி தனித்தலைவராக உருவெடுத்துவிடலாம் எனவும் நினைத்துக்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் அவருடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்களின் சப்போர்ட்தான்” என்றார்.

சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி
சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸ் தரப்பில் பேசினோம். “எடப்பாடி பழனிசாமி தைரியமாக இருப்பதுபோல நடிக்கிறார். தான் யார் என்று தெரியும் முன்பே சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் ஆகிய மூவரும் அனைவருக்கும் தெரிந்த தலைவர்கள். இவர்களை உள்ளே விட்டால் தனக்கான இடம் பறிபோகும் என்ற பதற்றத்தில் இப்படி நடந்துகொள்கிறார். தான்தான் எல்லாம் என்ற அதிகார போதையும் அவரிடம் இருக்கிறது. எனவேதான் தன்னை ஏற்றிவிட்ட அனைவரையும் அலட்சியமாக நடத்துகிறார். ஒரு தேர்தல் வந்தால் அவரின் முடிவுகள் எல்லாம் எந்தளவு தவறானவை என அவருக்குப் புரிந்துவிடும். அதுவரை இப்படித்தான் அவர் நடந்துகொள்வார்” என்கின்றனர்.